11 ஜுன் 2022

மத்தேயு 5:13-16

•            இன்றைய நாள் திருத்தூதுவராகிய பர்னபாவின் வாழ்வுக்கும் பணிக்கும் நாம் நன்றி செலுத்துகின்றோம். பர்னபா என்பதற்கு, ஆறுதலின் மகன் என்று அர்த்தமாகும்.

•            முதலாம் உடன்படிக்கை வாசகத்தில் யோபு 29:7-16 என்ற வாசகத்தின்படி யோபு தன்னை எளியோரின் தகப்பன் எனக் கூறுகின்றார். பர்னபாவும் எளிய மக்களின் நண்பராக அவர்களுக்கு உதவி புரிந்து வந்தார். மேலும், திருப்பாடல் 32ல் கடவுள் எளியோரை குப்பையிலிருந்து உயர்த்துகிறார் என படிக்கின்றோம். கிறிஸ்து எவ்வாறு தம்மை தமது நிலைக்கு உயர்த்தினாரோ (2 கொரிந்தியர் 8:9) அதேபோன்று நாமும் பிறரை எமது நிலைக்கு உயர்த்தவேண்டும்.

•            புதிய ஏற்பாட்டு பாடத்தில் திருத்தூதர்பணிகள் அல்லது அப்போஸ்தலர் 11:19-26 என்ற பகுதியில் பர்னபா வார்த்தையை அறிவிக்கும் பணியாளனாக காணப்படுகின்றார். அதாவது, வாழ்க்கையின் மூலமும் வார்த்தையின் மூலமும் நற்செய்தியை அறிவிக்கும் பணியில் தன்னை இணைத்துக் கொண்டார். மேலும், இவர் ஒப்புரவாக்குதல் பணியிலும் தன்னை இணைத்துக் கொண்டார். திருத்தூதர்பணிகள் அல்லது அப்போஸ்தலர் 15:36-41 பவுல் யோவான்மாற்குவை தனது 2ம் மறைப்பரப்பு பயணத்தில் இணைத்துக் கொள்ள மறுத்தார். ஏனெனில், அவர் முதலாம் பயணத்தின்போது பாதிவழியில் விட்டுப் பிரிந்தார். எனினும், பர்னபா யோவான் மாற்குவுக்காக பரிந்து பேசுகின்றார். இவரே பவுலையும் சீடர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தினார் என்பது புலனாகின்றது. இவ்வாறாக, மற்றவர்களை அறிமுகப்படுத்துவதில் இவர் முன்னின்று செயற்பட்டார்.

•            தன்னுடைய சொத்துக்களை ஏழைகளுடன் பகிர்ந்துக் கொண்டு வாழ்க்கையாலும் வார்த்தையாலும் நற்செய்தியை அறிவித்து ஒப்புரவாளனாக, பிறருக்கு ஆறுதலை வழங்குபவராக செயற்பட்ட பர்னபாவின் வாழ்வு ஓர் ஒளியாகவும், உப்பாகவும் காணப்படுகின்றது (மத்தேயு 5:13-16). எனவே, நாமும் இம்மாதிரியைப் பின்பற்றி மற்றவர்களின் வாழ்வில் ஒளி வீச இறைவன் எம்மை உற்சாகப்படுத்துவாராக.