6 மார்ச் 2022

மாற்கு 1:40-45

•            நாம் வாழும் உலகில் பல்வேறுபட்ட காரணங்களுக்காக மக்கள் ஒடுக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சாதி, அதிகாரம், வறுமை போன்ற பல காரணங்களால் மக்கள் ஒடுக்கப்படுவதை நாம் காண்கின்றோம்.

•            அகாஸ்வேறு என்ற பாரசீக அரசன் யூதர்கள் அரசாண்ட வேளையில் ஆமான் என்ற மந்திரியின் பழிவாங்குதலின் அடித்தளத்தில் யூதர்கள் கொல்லப்பட வேண்டிய சூழ்நிலை வந்த வேளையில் எஸ்தர் அரசி மிகுந்த பலமுள்ளவளாக காணப்பட்ட போதிலும், பலவான்களுடன் தன்னை அடையாளப்படுத்தாமல் மாறாக, யூதர்களுடன் தன்னை அடையாளப்படுத்தி, ஒடுக்கப்பட்ட யூதர்களுக்கு விடுதலையை பெற்றுக் கொடுத்தாள்.

•            திருப்பாடல் 43ல் தாவீது ஒடுக்குமுறையில் இறைவனை நோக்கி மன்றாடி தனது விடுதலையை இறைவனிடம் வேண்டி நிற்கின்றார். இவ்வாறு, விடுதலைப் பெற்றவர் ஒடுக்கப்படுபவர்களுடன் தன்னை அடையாளப்படுத்துகின்றார்.

•            இரண்டாம் உடன்படிக்கையின்படி கி.பி.49ம் ஆண்டில் எருசலேமில் நடைப்பெற்ற பொதுச் சங்கத்தைப் பற்றி நாம் பார்க்கின்றோம். இங்கு, யூத அடிப்படைவாதிகளினால் ஓர் கட்டளை பிறப்பிக்கப்படுகின்றது. அதாவது, ஒருவர் மீட்கப்பட வேண்டுமெனில், விருத்தசேதனம் அவசியமாகின்றது. இதன்படி, பவுலும் பேதுருவும் யாக்கோபும் இச்சட்டத்திற்கு விரோதமாக மன்றத்தில் புற இனத்தவருடன் தங்களை அடையாளப்படுத்துகின்றனர். மேலும், மீட்கப்படுவதற்கு விருத்தசேதனம் அவசியம் இல்லை. மாறாக, இயேசுவின் அருளின் மூலமே நாம் மீட்கப்படுகின்றோம் என்கின்றனர்.

•            நற்செய்தி பகுதியில் மாற்கு 1:40-45ல் தொழுநோயாளியைப்பற்றி நாம் படிக்கின்றோம். இவர்கள் சமுதாயத்தினால் புறக்கணிக்கப்பட்டவர்கள் சமூகத்தில் இருந்து தொலைவில் தனித்து வாழ்ந்தனர். சமூகத்திற்குள் வாழ்வதற்கு இவர்களுக்கு அங்கீகாரம் காணப்படவில்லை. எனவே, இப்பேர்ப்பட்ட மனிதனுடனேயே இயேசு தன்னை அடையாளப்படுத்தினார். எனவேதான், முதலில் அவனைத் தொட்டு, பின்னர் அவனை சுகமாக்கினார். இதன்மூலம், அவனுக்கு சமூக அங்கீகாரம் கொடுத்தார்.

•            இன்றும் நாம் வாழுகின்ற சூழல் பகுதிகளில் ஒடுக்கப்பட்ட மக்களுடன் எங்களை அடையாளப்படுத்த அழைக்கப்படுகின்றோம். இரட்சண்யசேனை ஸ்தாபகராகிய வில்லியம் பூத் சேரிப்பகுதிகளில் வாழ்ந்த மக்களுடன் தன்னை அடையாளப்படுத்துகின்றார். நெல்சன் மன்டேலா அவர்கள் தென்னாப்பிரிக்காவில் கறுப்பின மக்களுடன் தன்னை அடையாளப்படுத்தினார். பேராயர் டெஸ்மன் டூடூ தென்னாப்பிரிக்காவில் உண்மையின் ஆணைக்குழுவினை உருவாக்கி ஒடுக்கப்பட்டவர்களுடன் தன்னை அடையாளப்படுத்தினார். இப்பணியையே இந்தியாவில் மகாத்மா காந்தி, பெரியார், அம்பேக்கர் போன்றவர்கள் ஆற்றினார்கள்.

அருட்பணி. அருளம்பலம் ஸ்டீபன்
அருட்பணி. அருளம்பலம் ஸ்டீபன்

இலங்கை