15 மே 2022
கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்ளுதல் – உண்மை

யோவான் 17:6-19

• இயேசுவை புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் பல உருவகங்களின் ஊடாக உலகிற்கு அறிமுகப்படுத்துகின்றனர். இவற்றில் யோவான் 14:6ல் இயேசுவை வழி, விடுதலை, உண்மை ஆகிய உருவகங்களினூடாக யோவான் அறிக்கையிடுகிறார். இதில் உண்மையென்பதே முக்கியமானதாகும்.

• தத்துவ அறிஞனாகிய பிளேட்டோ இவ்வுலகை இரண்டாகப் பிரிக்கின்றார். முதலாவதாக சாயல் உலகு எனவும், இரண்டாவதாக உண்மை உலகு எனவும் கூறுகின்றார். நாம் அனைவரும் சாயல் உலகிலேயே வாழ்கின்றோம். எம்மை உண்மை உலகிற்கு எடுத்துச் செல்ல யாரால் முடியும் என்ற வினா அக்காலத்தில் தத்துவ அறிஞர்களிடையே காணப்பட்டது. இவ்வினாவிற்கு, யோவான் பதிலளிக்கும் வகையில் இயேசுவே இவ் உண்மையான உலகிற்குள் எம்மை அழைத்துச் செல்ல முடியும் என்கின்றார்.

• நற்செய்தி பகுதியில் யோவான் 17:6-19ல் உன்னத குருத்துவ செபத்தில் உண்மையைப் பற்றி இயேசு கூறுகின்றார். அதாவது, உண்மையால் சீடர்களைக் காத்துக் கொள்ளும் எனவும் மன்றாடுகின்றார். பிலாத்து இயேசுவை நோக்கி, உண்மையென்றால் என்ன என வினாவியபோது இயேசு மௌனம் சாதித்து நானே அந்த உண்மை எனக் கூறினார். அதாவது, உண்மையை நீங்கள் அறிவீர்கள் உண்மை உங்களை விடுதலையாக்கும். எனவே, உண்மை ஓர் விடுதலையின் கருவியுமாகும்.

• 1ம் உடன்படிக்கை வாசகத்தின்படி (யாத்திராகமம் 34:1-9) அங்கு பத்து கட்டளைகளின் தொகுப்பைப் பற்றி நாம் படிக்கின்றோம். கட்டளைகள் அல்லது கற்பனைகள் வெறுமனே எழுத்தேடுகளில் காணப்படுவதைவிட உள்ளங்களில் பதிக்கப்படும் உண்மைகளாக இருக்க வேண்டும். இதனையே, எரேமியா 31:31-34 வரையுள்ள பகுதியில் நாம் படிக்கலாம்.

• பவுல் எபேசியருக்கு எழுதிய கடிதத்தில் எபேசியர் 4:7-16ல் உண்மையைப் பற்றி பேசுகின்றார். அதாவது, உண்மையை அறிவிக்க கடவுள் அநேகரை அழைத்துள்ளார். எனவே, நற்செய்தியாளர்கள் உண்மையை துண்டுப் பிரசுரங்களிலோ, இறுவட்டுக்களிலோ அல்ல மாறாக, அவர்கள் தங்கள் வாழ்வில் தாங்கிச் சுமக்க வேண்டும். இதுவே, கிறிஸ்துமீது வைக்கும் பற்றுறுதிக்கான அடையாளமாகும்.

• நாம் வாழும் இன்றைய பல்சமய சூழலில் கிறிஸ்துவாகிய உண்மையை பல வடிவங்களில் மக்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். உதாரணமாக வாழ்வு சார்ந்த முறை, உரையாடல் சார்ந்த உறவு போன்றவைகளை கடைப்பிடித்தல் அவசியமாகின்றது.

ஆக்கம்: அற்புதம்

4 thought on “கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்ளுதல்”

Comments are closed.