10 டிசம்பர் 2023

வேதாகம ஞாயிறு
யோவான்ஸ்நானகன் அல்லது திருமுழுக்கு யோவானின் பிறப்பு
Word of God – Light to our path
லூக்கா 1:67-80

• திருமறையை நாம் படித்துப்பார்க்கும்போது படைப்பில் ஈடுபட்ட வார்த்தை, இறைவார்த்தை ஊடாக பேசப்பட்ட வார்த்தை, மனுவுரு எடுத்த வார்த்தை, நிறைவாக எழுதப்பட்ட வார்த்தை ஆகிய நான்கு நிலைகளில் வார்த்தை பயன்படுத்தப்படுவதை நாம் பார்க்கின்றோம்.

• ஏசாயா 55:6-13ல், இஸ்ராயேல் மக்கள் தம்முடைய தேசத்திற்கு திரும்பிப் போகின்ற பின்னணியில் இவ்வார்த்தைகள் பேசப்படுகின்றன. அதாவது, மனிதர்களுடைய வார்த்தைகளே அல்லாமல் மனிதனுக்கு தோன்றுகின்ற வழிகளேயல்லாமல் இறைத்திட்டம் இறைவார்த்தைகளில் நடவுங்கள் என ஏசாயா பேசுகின்றார். இதனையே 2 தீமோத்தேயு 3:16-18ல், இறைவார்த்தைகள் அனைத்தும் தேவ ஆவியினால் அருளப்பட்டு எழுதப்பட்டது எனவும் அவைகள் போதிப்பதற்கும், கற்பிப்பதற்கும், நீதிவழியில் எம்மை நடத்துவதற்கும் ஏற்றவைகளாகக் காணப்படுகின்றன என பவுல் தீமோத்தேயுவுக்கு ஆலோசனைக் கூறுகின்றார்.

• திருப்பாடல் – சங்கீதம் 119:105-117 வரையுள்ள பகுதியில், ‘இறைவார்த்தை மானிடர்களுடைய கால்களுக்கு தீபமும் அவர்கள் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கின்றது’ எனக் கூறப்படுகின்றது. நாம் வாழும் இருள் நிறைந்த உலகில் இறைவார்த்தைகள் எமக்கு ஒளியாக நடக்க வேண்டிய வழிகளை சிறப்பாக இந்த திருவருகை நாட்களில் எங்களுக்குக் காண்பிக்கின்றது.

• கலாத்தியர் 1:11-23 வரையுள்ள பகுதியில், பவுல் இறைவார்த்தைகள் அனைத்தும் தனக்கு ஏனைய சீடர்களிடமிருந்தோ, பாரம்பரியங்களிலிருந்தோ தான் பெற்றுக்கொள்ளவில்லை. மாறாக, இவைகள் அனைத்தும் கடவுளிடமிருந்து நேரடியாக வெளிப்படுத்தப்பட்டன எனக் கூறுகின்றார். எனவே இறைவார்த்தைகள் இறைவெளிப்பாட்டின் வடிவம் எனக் கூறுகின்றார்.

• லூக்கா 1:67-80 வரையுள்ள பகுதியில், சகரியாவின் பாடலைப் பற்றி பார்க்கிறோம். தூபபீடத்தின் வலப்பக்கத்தில் தேவதூதன் காட்சியளித்து, “உமக்கொரு மகனை நான் கொடுப்பேன்” என்ற வாக்கை நம்பி சகரியா இப்பொழுது இப்பாடலைப் பாடுகின்றார். இப்பாடல் லூக்கா நற்செய்தியில் மாத்திரம் காணப்படுகின்றது. இங்கு யோவான்ஸ்நானகன் நசரேய விரதத்தின்படி வளர்க்கப்பட வேண்டும் என்கிற பொருத்தனையையும் நாம் காணலாம். எனவே, யோவான்ஸ்நானகனும் அன்று சிறப்பாக வழி தெரியாத மக்களுக்கு வழியை ஆயத்தப்படுத்த அவர் அனுப்பப்பட்டார். கர்த்தருக்கு வழியை ஆயத்தைப்படுத்தவும் அவருக்கு பாதைகளைச் செவ்வைப்பண்ணுவதுமே அவரின் பிரதான அழைப்பாகும். இறைவார்த்தையின் அடித்தளத்தில் அவர் அங்கு ஏற்படுத்திய வழியிலேயே மனுமைந்தன் இயேசுவும் பிரயாணித்தார்.

• இறைவார்த்தைகள் அன்றுபோல் இன்றும் உயிருள்ளவைகளாக இருக்கின்றன. அவைகள் நிரந்தரமானவைகள். ‘வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும் நீதிச்சட்டத்திலிருப்பவைகள் ஒருபோதும் ஒழிவதில்லை’ என மத்தேயு 5:17,18ல் பார்க்கிறோம். எனவே, இந்த நிரந்தரமான வார்த்தைகளில் நாம் நம்பிக்கை வைத்து நிரந்தரமான ஆண்டவரை நோக்கி பயணிப்போமாக. ஆமேன்.

ஆக்கம்: அற்புதம்