முழக்கம் 06

மனிதனை மனிதன் என மதிக்கத் தெரியாத உலகில் வாழும் மனிதமே..
மனிதன் என்பதற்கு கூட தகுதி பெறாத விலங்கினமாக வாழுகின்றோம் இப் பூமியிலே. அன்று தொட்டு இன்று வரை மனிதம் “சாதி என்னும் வெறியிலே” சமூகத்தில் பலரை ஓரங்கட்டி ஒதுக்குகிறது. உன்னை விட நான் தான் பெரியவன் என்பதை காட்டிக் கொள்வதற்காக சாதியத்தை தூக்கிப் பிடிக்கிறது மனிதம்.

இன்று கிறிஸ்தவர்களுக்குள்ளும் சாதியம் நிறைந்தே காணப்படுகின்றது. திருச்சபையில் சாதியம் நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்கம் செலுத்துகிறது. சாதியத்தால் மக்கள் ஒரங்கட்டப்படுகின்றார்கள், ஒடுக்கப்படுகின்றார்கள், ஏற்றத்தாழ்வுகளும் பிரிவினைகளும் நிறைந்தே காணப்படுகின்றது. திருச்சபை மந்தைகள் மட்டுமல்ல, ஆயர்களும் இந்த சாதியத்தை தூக்கிப்பிடித்தவர்களாக எமது கிறிஸ்தவ சமூகத்தில் இருப்பது வருத்தமாக இருக்கின்றது.

ஆயர்களும் இந்த சாதியத்தை தூக்கிப்பிடித்தவர்களாக எமது கிறிஸ்தவ சமூகத்தில் இருப்பது வருத்தமாக இருக்கின்றது.

ஆமோஸ் சாம் துஷாந்தன்

ஆண்டவர் இயேசு தனது இறுதி இராப்போசனத்தின் போது அப்பத்தை எடுத்து அதைப் பிட்டு, இது உங்களுக்கான என் உடல். அப்படியே கிண்ணத்தை எடுத்து இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை (1கொரி 11;24,25) என்று சொல்லி தன்னுடைய உடல் உதிரத்தை பகிர்ந்து கொடுத்தார். ஒரே கிண்ணத்தில் ஒரே ஆண்டவருடைய திருவுடல் திருவுதிரத்தைப் பெறுகின்றன நாம் இன்னும் சாதி என்கின்ற கொடிய அலகையினாலே சிறைப்பட்டவர்களாக, தீமைக்கு துணை போகின்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஒரே கிண்ணத்தில் பருகுகின்ற நாம் நமக்குள் வேறுபாடுகளை உருவாக்குகின்றோம். “எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக!” (யோவான்17:21) என்று ஆண்டவர் இயேசு நமக்கு கூறினார்.

நாம் சாதி என்கின்ற கொடிய நோய் பிடித்தவர்களாக சாதியத்தை வைத்து பிரிந்து வாழ்கின்றோம். ஆண்டவர் இயேசு நாம் யாவரும் ஒன்றாய் இருந்து இறையாட்சிக்காக உழைக்க வேண்டும் என எதிர்பார்த்தார். ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து எதனை எம்மிடம் எதிர்பார்த்தாரே அதனை நாம் செய்யாதவர்களாக பொய்யான கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

கிறிஸ்தவர்களாகிய நாம் கிறிஸ்துவை முன்மாதிரியாகக் கொண்டு ஒடுக்கப்பட்டோரை நேசிக்கவும் ஓரங்கட்டப்பட்டோர் விடுதலை பெறவும், சாதியமற்ற கிறிஸ்துவின் சமூகத்தை உருவாக்கி பிறருக்கு நாம் முன்மாதிரிகளாக செயற்படுவோம். கிறிஸ்து எம்மில் செயலாற்றுவார்.

#திருச்சபையில்சாதியைஒழிப்போம்

ஆமோஸ் சாம் துஷாந்தன்
ஆமோஸ் சாம் துஷாந்தன்

அருட்பணியாளர்,
சகல புனிதர்கள் ஆலயம்,
மஸ்கெலிய.

சாதிய மறுப்பு கிறிஸ்தவத்தின் நிபந்தனை
என்பதை உலகறிய செய்வோம் !!
சாதியம் கிறிஸ்துவுக்கு எதிரான கோட்பாடு
என்பதை உரக்க சொல்லுவோம் !!