வசந்தகாலப் பூக்கள் 16

பதினாறாம் தியானம்

தவசு நாட்களில் நாம் கடைப்பிடிக்கும் இன்னுமோர் பிரதான அறச் செயலாக பிறருக்குத் தானம் வழங்கும் நிகழ்வு கடைப்பிடிக்கப்படுகின்றது. இத்தகைய தானம் வழங்கும் செயற்பாடு எல்லா சமயங்களிலும் காணப்படுகின்றது. சிறப்பாக இஸ்லாம் சமயத்தில் றமழான் மாதத்தில் வரும் நோன்பின்போது மக்களுக்குத் தான தர்மங்கள் வழங்கப்படுகின்றன. இந்துக்களும் இத்தகைய தர்மங்களில் ஈடுபடுவதை நாம் அவதானிக்கலாம்.

மத்தேயு 25:31-46 பகுதியில் ஆண்டவர் இயேசு நான் பசியாய் இருந்தேன் எனக்கு ஆகாரம் தந்தீர்கள். நான் தாகமாய் இருந்தேன் எனக்குத் தண்ணீர் தந்தீர்கள். நான் ஆடையின்றி இருந்தேன் எனக்கு ஆடை தந்தீர்கள். நான் சிறையில் இருந்தேன் என்னை வந்து பார்த்தீர்கள் எனக் கூறினார். அப்பொழுது மக்கள் அவரை நோக்கி, ஐயா நீர் எப்பொழுது இத்தகைய அனுபவமுள்ளவராக இருந்தீர் எனக் கேட்டனர். அப்பொழுது இயேசு இவ்வுலக மக்கள் எப்போது தேவையுள்ளவர்களாக இருக்கிறார்களோ அப்பொழுது நீங்கள் அவர்களுக்குச் செய்யும் உதவி எனக்கே செய்கின்றீர்கள் எனக் கூறினார்.

நாம் வாழும் உலகில் தேவையுள்ள மக்களும் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டவர்கள் எனக் கருதி நாம் அவர்களுக்கு உதவி செய்தல் அவசியமாகின்றது. எனவே நாம் வழங்கும் உதவி மக்களுக்கு அல்ல மாறாக இறைவனுக்கே செய்கின்றோம் என்ற மனநிலை உருவாக வேண்டும். இவ்வாறு நாம் செய்யும்போது எமது செயல்களின் அடித்தளத்தில் எமக்கு நடுத்தீர்ப்பு ஏற்படுகின்றது. எனவே நடுத்தீர்ப்பில் நாம் சித்தியடைய இந்நாட்களில் நற்செய்கைகளை செய்வோமாக.

செபம் – இறைவா உமது நடுத்தீர்ப்பிலிருந்து நான் தப்பித்துக்கொள்ள நற்செய்கைகளைச் செய்யும் நல்லாவியை எனக்குள் ஊற்றியருளும். ஆமென்.

2 thought on “கொடையும் நடுத்தீர்ப்பும்”

Comments are closed.