1கொரிந்தியர் 3: 7-10

நடுகிறவரும் நீர்ப்பாய்ச்சுகிறவரும் ஆண்டவருடன் ஒப்பிடுகையில் வெறுமையானவர்களே. மனிதர் தம் சுயவிருப்பாற்றலால் எதையும் செய்ய இயலாது. அவர்களால் எதையும் விளைவித்திடவோ பெருக்கிடவோ இயலாது. அவர்கள் எவ்வளவுதான் நட்டாலும், நீர்ப்பாய்ச்சினாலும், அனல்பறக்க ஆன்மீகம் பேசினாலும் முடியாது.

நடுபவரும் நீர்ப்பாய்ச்சுபவரும் ஒருவரே என்பது கிரேக்க மொழியில் உள்ள வார்த்தையின் படி நடுதலும் நீர்ப்பாய்ச்சுதலும் ஒரே செயலே என்பதே ஆகும். பவுல் இங்கே குறிப்பிடுகையில் “ஒவ்வொரு மனிதரும் தம் சொந்த வெற்றியினால்” என்று குறிப்பிடவில்லை. மாறாக, “ஒவ்வொரு மனிதரும் தம் உழைப்பினால்” என்று குறிப்பிடுகிறார். திருப்பணியில் நற்செய்தி அறிவிக்கும் பணிக்காய் உழைக்க வேண்டும் என்பது தான் நமக்கு பணிக்கப்பட்டுள்ளதே தவிர வெற்றி பெறுவது நோக்கமாயிருக்க கூடாது. ஆண்டவர் நம்மை வெற்றிப்பெற்ற திருப்பணியாளர்களாக இருப்பதற்காக அழைக்கவில்லை. மாறாக, நாம் உண்மையுள்ள திருப்பணியாளர்களாக இருந்திட வேண்டும் என்பதற்காகவே அழைத்திருக்கிறார்.

நாம் அறுவடைப் பணியில் உழைப்பதற்காய் குறிப்பாக கடவுளின் உடன்பணியாளராக உழைப்பதற்காய் அழைக்கப்பட்டுள்ளோம். கடவுளின் நோக்கத்தை நிறைவேற்றிட கடவுளின் நிலத்தில், கடவுளின் பண்படுத்தப்பட்ட தோட்டத்தில் அவரது திராட்சைத் தோட்டமாக விளங்கும் திருச்சபையிலும் சமூகத்திலும் பணிசெய்ய அழைக்கப்பட்டிருக்கிறோம்.

இங்கு பவுல் திருச்சபையை கிறிஸ்துவை அடித்தளமாகக் கொண்டு கட்டுகிறார். சிலுவையில் அறைப்பட்ட இயேசுகிறிஸ்துவை அடித்தளமாய் கொண்டு அழகாய் வடிவமைக்கப்பட்டுள்ள திருச்சபை கிறிஸ்துவின் சிற்பக்கலையாயும் கிறிஸ்துவே சிற்பக்கலை வல்லுநராயும் இருக்கிறார். அன்று முதல் இன்று வரை திருச்சபையை கட்டியெழுப்பும் எவரும் அந்த சிற்பக்கலை வல்லுநருமான கிறிஸ்துவை அடித்தளமாகக் கொண்டேக் கட்டி எழுப்புகின்றனர். நாம் கட்டியெழுப்பும் திருச்சபையும் கிறிஸ்துவை அடித்தளமாகக் கொண்டதே. நாமும் பவுலைப் போலவே “சிலுவையில் அறையப்பட்ட இயேசு” என்பதை மட்டுமே நற்செய்தியின் சாரமாகக் கொண்டு அருட்பணியாற்றவும் திருப்பணி நிறைவேற்றவும் திருச்சபையைக் கட்டியெழுப்பவும் வேண்டும்.

சிலுவையில் அறையப்பட்ட இயேசுகிறிஸ்து ஒருவரே திருச்சபையின் முதன்மை வல்லுநர். அவர் வழியில் நாமும் பணியாற்றுவோம்.

மூவொரு கடவுளுக்கே புகழ்ச்சி உரித்தாகுக.

மறைத்திரு. டால்ட்டன் மனாசே
ஆற்காடு லுத்தரன் திருச்சபை