விண்ணிலே ஓர் நட்சத்திரத்தைக் கண்டு பணிந்து கொள்ள வந்துள்ளோம்
மத்தேயு 2:2

18-25 தை 2022

• 1908ம் ஆண்டு முதல் திருச்சபை ஒருமைப்பாட்டு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக, திருச்சபை பிரிவுகளுக்கு இடையே ஒற்றுமையை மேற்கொள்ள இக்காலத்தைப் பயன்படுத்துகின்றனர். உதாரணமாக, ரோமன் கத்தோலிக்க திருச்சபை பிரிவு, புரட்டஸ்தாந்து திருச்சபை பிரிவு, சுயாதீன திருச்சபை பிரிவு போன்ற பிரிவுகளை மையப்படுத்தியே இவ்வாறு கடைப்பிடிக்கப்படுகின்றது.

• தை 18ம் திகதி புனித பேதுருவின் திருநாள் மற்றும் தை 25ம் திகதி புனித பவுலின் மறுரூபமாகுதலின் திருநாள். எனவே, இவ் ஐக்கிய வாரம் பேதுருவிலிருந்து ஆரம்பித்து பவுலின் மறுரூபமாகுதல் தினத்துடன் நிடைவடைகின்றது.

• சிறப்பாக, ஒவ்வொரு வருடமும் ரோமன் கத்தோலிக்க திருச்சபை பிரிவின் ஒருமைப்பாட்டு ஆணைக்குழுவும், புரட்டஸ்தாந்து திருச்சபை பிரிவின் ஒருமைப்பாட்டு அமைப்பும் ஒன்றிணைந்து தலைப்பினை தெரிவு செய்வர். இவ்வருடம் கருப்பொருளாக, “விண்ணிலிருந்து ஓர் வின்மீனைக் கண்டு அவரை பணிந்து கொள்ள வந்தோம்.” என்பதே ஆகும்.

• மத்தேயு நற்செய்தி யூதருக்கு எழுதப்பட்டதாக காணப்பட்டபோதிலும் அது எல்லாரையும் உள்வாங்கும் தன்மையுள்ளதாகக் காணப்படுகின்றது. குறிப்பாக, இயேசுவின் பிறப்பில் ஞானிகளின் வருகை (மத்தேயு 2:1-12), எல்லோருக்குமான நற்செய்தி (மத்தேயு 28:19,20). மத்தேயு 13ம் அதிகாரத்தில் காணப்படும் கடுகுவிதை உவமை, வலை உவமை போன்றவைகளும் அனைத்துலகக் தன்மையை எமக்கு எடுத்துக் காட்டுகின்றது. எனவேதான், ஒருமைப்பாட்டு பயணம் எல்லோரையும் உள்வாங்கியதாக காணப்படவேண்டும்.

• ஞானிகள் விண்ணிலே விண்மீனைக் கண்டார்கள் என்பதனூடாக இறைவன் வரலாற்றிலே பல வழியினூடாக தன்னை மக்களுக்கு வெளிப்படுத்துகின்றார். இங்கு, இயற்கையினூடாக தன்னை வெளிப்படுத்துகின்றார். எனவே, எமது ஒருமைப்பாட்டு பயணத்தில் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையே நல்லுறவு பேணப்படுவது அவசியமாகின்றது (மாற்கு 16:15, ரோமர் 8:22). எனவேதான், ஆசிய கிறிஸ்தவ சங்கம், “கடவுளே உமது ஆவியால் இயற்கையைப் புதுப்பித்து பாதுகாத்தருளும்” என்ற கருப்பொருளை தமது செயலமர்வுக்காக தெரிந்தெடுத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

• கடவுளுக்குரிய, மதிப்பையும் மரியாதையையும் ஒரு மனிதனோ அல்லது சமூகமோ வார்த்தையாலோ செயலாலோ தெரிவிப்பதே வழிபாடு என்கின்றோம். இதனொளியில், எமது ஒருமைப்பாட்டு பயணத்தில் நாம் எல்லாத் துதி, புகழ், மகிமை அனைத்தையும் இயேசுவுக்கே தெரிவிக்க வேண்டும்.

• ஒருமைப்பாட்டு பயணம் ஓர் நற்செய்திப் பயணம் ஆகும். இதனை நாம் பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இயேசுவைக் கண்ட அந்திரேயா மேசியாவைக் கண்டேன் என தன் சகோதரனாகிய பேதுருவுக்கு அறிவிக்கின்றான். இந்த வேதப்பகுதியிலும் ஞானிகள் நட்சத்திரத்தைக் கண்ட வேளையில் அந்நற்செய்தியை ஒருவருடன் ஒருவர் பகிர்ந்து கொண்டார்கள். இதேபோன்று, நாமும் ஒருமைப்பாட்டு நற்செய்தியை வாழ்க்கையில் பகிர்ந்து கொள்வோம். தேவை ஏற்பட்டால் மாத்திரம் வார்த்தையை உபயோகிப்போம்.

• ஒருமைப்பாட்டு பயணம் ஆரம்பத்திலேயே கிழக்காசிய பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டதொன்றாகும். எனவேதான், இதற்கு சான்று பகரும் வகையில் கிழக்கில் ஓர் நட்சத்திரம் தோன்றியது என்ற வேதப்பகுதியும் சிறந்ததோர் ஆதாரமாகும். எனவே, அன்று ஞானிகள் நீண்ட தூரம் பயணப்பட்டு இயேசுவைப் பார்க்க வந்ததைப் போன்று ஒருமைப்பாட்டு பயணமும் ஓர் நீண்;ட பயணமாகும்.

• திருத்தந்தை பெனர்டிக் அவர்கள், “கிறிஸ்துவண்டை நாம் நெருங்கிச் செல்லும்போது எம்மைப் பிரித்து நிற்கும் எல்லா தடைகளையும் எம்மால் மேற்கொள்ளமுடியும்” என்கிறார். மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “தடைகளை தாண்டி நாம் செல்லும்போது எமது சகோதரர்களை நாம் காணலாம்” என்கிறார். இதற்கு உதாரணமாக, யாக்கோபுவும் அவனுடைய பிள்ளைகளும் தடைகளைத் தாண்டிச் சென்ற வேளையில் சகோதரனாகிய யோசேப்பைக் கண்டார்கள். நாமும் எம்மைப் பிரித்து வைக்கும் தடைகளை தாண்டிச் செல்வதனூடாக ஒருவரையொருவர் கட்டியணைக்க முடியும்.

அருட்பணி அருளம்பலம் ஸ்டீபன்
அருட்பணி அருளம்பலம் ஸ்டீபன்

இலங்கை

One thought on “திருச்சபை ஒருமைப்பாட்டு வாரம்”

Comments are closed.