நம் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் மிக மூர்கமானவைகளாக இருக்கின்றன. எப்படியெனின், 2000 ஆண்டுகளுக்கு முன் மீட்பர் பிறந்த அந்த நாளைக் கொண்டாடுகிறோம் என்ற பெயரில் அந்த நாளில் நடந்த பல அவலங்களை மறைத்து நமக்கு கொண்டாட ஒரு பண்டிகைவேண்டும் என்ற அளவில் உலகப்பண்டிகைகளுக்கு ஒத்த அனுசரிப்பாகத் நாம் கிறிஸ்மஸ்சை கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்

“இதோ எல்லா மக்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் நற்செய்தி” என்று கிறிஸ்துவின் பிறப்பைப்பற்றி விவிலியம் கூறினாலும், ‘வரலாற்று கிறிஸ்மஸ்’ நாள் உண்மையில் நாம் எண்ணுவதைப்போன்ற மகிழ்ச்சியான நாளாக இருக்கவில்லை. “திருமணத்திற்கு முன் நீ கருக்கொள்வாய்” என்ற செய்தி ஒரு கன்னிப் பெண்ணுக்கு மகிழ்ச்சியான செய்தியா?“உனக்கு நிச்சயிக்கப்பட்டிருப்பவள் முன்பே கருவுற்றிருக்கிறாள்” என்ற செய்தி நிச்சயிக்கப்பட்டு கனவுலகில் மிதக்கும் வாலிபனுக்கு மகிழ்ச்சியான செய்தியா? குழந்தை பிறப்பதற்கு இடம் கிடைக்காமல் ஒரு கர்ப்பவதி அலைந்து திரிந்தது மகிழ்ச்சியான செய்தியா? குழந்தை பிறக்க சுகாதாரமற்ற இடமே கிடைத்தது என்பது மகிழ்ச்சியான செய்தியா? குழந்தையை காண வந்த ஞானிகள் உயிருக்கு பயந்து வேறுவழியாய் ஓடியது மகிழ்ச்சியான செய்தியா? இயேசுவை கொல்லவேண்டும் என்று எண்ணற்ற 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டு அப்பிள்ளைகளுடைய தாய்மார்கள் ஆறுதலின்றி எழுப்பிய அழுகுரல்கள் ஒலித்தனவே அது மகிழ்ச்சியான செய்தியா? இதில் எங்கே இருக்கிறது தற்போது நாம் கொண்டாடும் கொண்டாட்டத்தின் மகிழ்ச்சி? நம் கொண்டாட்டத்தின் மகிழ்ச்சி போலியானது மற்றும் உலகம் சார்ந்தது, நிச்சயம் அப்படிப்பட்ட மகிழ்ச்சியை கிறிஸ்மஸ் கொண்டிருக்கவில்லை.

நான் நடத்திய ஒரு கிறிஸ்மஸ் வழிபாட்டில் அருளுரையின் தொடக்கத்தில் சபையார் எழுந்து நின்று 1 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தச் செய்தேன். ஒரு குழந்தை பிறப்பை கொண்டாடும் இந்த நேரத்தில் பல குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை நிச்சயம் நாம் நினைவுகூறவேண்டும் என்பதை உள்ளடக்கிய மௌன அஞ்சலியாக அது இருந்தது. அக்குழந்தைகளின் மரணம் ஒரு மீட்பர் தப்பிப் பிழைப்பதற்கான நேரத்தை கொடுத்து, கொலைகாரர்களின் கவனத்தை சிலநேரங்கள் திசைத்திருப்பியிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை மீட்பர் பிழைக்க உதவிய அக்குழந்தைகளும் இரத்த சாட்சிகளே, எபிரேயர் 11 ஆம் அதிகாரத்தில் ஆபேல் முதல் இடம்பெற்றுள்ள மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகளின் பட்டியலில் 37-ஆம் வசனத்தில் வரும் வாளால் அறுப்புண்டார்கள், பட்டயத்தால் வெட்டப்பட்டார்கள் என்பது இவர்களையும் குறிக்கிறது என்பது என் விசுவாசம்.

இப்படி பல துயரங்களும் துன்பங்களும் அரங்கேரிய அந்த நாளைத்தான் நாம் அந்த நிகழ்விற்கே தொடர்பில்லாதபடியான போலி கொண்டாட்டத்தை நம் இஷ்டதிற்கு கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். கிறிஸ்து பிறந்தநாளில் அந்த துயரங்கள் நடுவிலும் அந்த நிகழ்வுகள் ஊடாக கடந்து சென்றவர்களை அந்த துன்பங்கள் அவர்களை மேற்கொள்ளவில்லை. மாறாக கடந்து சென்ற அன்னை மரியாள், யோசேப்பு, ஞானியர் போன்ற ஒவ்வொருவரின் ஆற்றலும் துணிவும் நமக்கு பெரும்வியப்பை தருகிறது. இறைதூதர் அறிவித்த அந்த மகிழ்ச்சி உண்மையில் துணிவின் மகிழ்ச்சியாகும். இழப்பை சந்தித்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஆறுதலின் மகிழ்ச்சியாகும். அவர்களுக்கு அருளப்பட்ட ஆற்றலின் தரும் மகிழ்ச்சியாகும். நிச்சயம் நம் ஆடம்பரத்தை கொண்டாடும் கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியாக அது இருக்கவில்லை. எனவே நாம் கொண்டாடும் கிறிஸ்மஸ்சும் ஆறுதல் ஆற்றல் துணிவைத் தரும் மகிழ்ச்சியை நம்மை சுற்றிவாழ்பவர்களுக்கு தரும் ஒன்றாக இருக்கவேண்டும்.

“ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ‘ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள்’ யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்” (எபிரெயர் 2: 14, 15)

கிறிஸ்மஸ் கூடாது என்பது கட்டுரையின் நோக்கமல்ல, ஆண்டவர் இயேசுவின் பிறப்பை நிச்சயம் கொண்டாடப்பட வேண்டும், ஆனால் அதை அனுசரிக்கும் பாரம்பரிய முறையில் இன்னும் பல மாற்றங்கள் தேவை என்பதையே இக்கட்டுரை முன்வைக்கிறது. தற்போது கொரோனா இரண்டாம் அலையில் நம்மை சுற்றி பலர் தம் அன்புக்குரியவர்களை இழந்திருக்கிறார்கள். பல திருப்பணியாளர்கள் தன் இன்னுயிரை ஈந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலிலும் “யார் எப்படி இறந்தால் நமக்கென்ன எங்கள் கொண்டாட்டம் தான் எங்களுக்கு முக்கியம்” என்று மனச்சாட்சியின்றி வழக்கம்போல கொண்டாடும் ஆடம்பரக்கொண்டாட்டமாக நம் கொண்டாட்டங்கள் இருக்கப்போகின்றனவா அல்லது வரலாற்றில் இழப்பை சந்தித்த மக்களோடு திருச்சபை தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு கடவுளுக்கு சான்றுபகர்ந்ததைப்போல நாமும் சான்றுபகரப்போகிறோமா என்பது நம் கையில்தான் உள்ளது!

<sub>அருள்பணி.பா.கிருஸ்து அடியான்</sub>
அருள்பணி.பா.கிருஸ்து அடியான்

ஆயர், தமிழகம்.