filmmaking, church, christianity-8695625.jpg

Christ’s Invitation to be an Expression of Mission

• கென்றபரி பேராயரான வில்லியம் டெம்பள் அவர்கள் தூதுப்பணி பற்றி பின்வருமாறு கூறுகின்றார். “ஒரு தனிமனிதனோ அல்லது சமூகமோ கடவுளின் அன்பை தமது வார்த்தையாலோ இல்லையேல் அடையாளச்செயல்கள் மூலமோ வெளிப்படுத்துவதே தூதுப்பணி ஆகும். ஆரம்பத்தில் கடவுள் தன்னை ஓர் தூதுப்பணியாளராகவே வெளிப்படுத்தினார். தூதுப்பணி இயலே இறையியலுக்கான அடித்தளம் ஆகும்.”

• எசேக்கியேல் 34:25-31 வரையுள்ள பகுதியில், இஸ்ராயேல் மக்கள் பாபிலோனியா தேசத்தில் அடிமைகளாக கி.மு. 6ம் நூற்றாண்டில் இருந்த வேளையில் அவர்கள் மத்தியில் இரண்டாம் ஏசாயா, எரேமியா, எசேக்கியேல் ஆகியோர் பணியாற்றினர். எசேக்கியேல் இறைவாக்கினர் முதலாவது முற்றுகையின்போது தனது மனைவியை இழந்தார். பின்னர் அவர் வலுக்கட்டாயமாக பாபிலோனியாவுக்கு அடிமையாக இழுத்துச் செல்லப்படுகிறார். இத்தகைய சூழ்நிலையிலேயே இஸ்ராயேலர்களின் மேய்ப்பர்கள், அரசர்கள் ஆகியோருக்கு எதிராக இறைவாக்கினர் தனது இறைவாக்கை உரைக்கின்றார். எசேக்கியேல் 34:10ல், இவர்கள் தங்களுடைய மந்தைகளை சரிவர மேய்க்காமல், நசல்கொண்டவைகளை திடப்படுத்தாமல், துரத்துண்டவைகளை தேடிக்கண்டு பிடிக்காமல் தங்களைத் தாங்களே மேய்த்து கொழுமையானவற்றை அடித்து புசிக்கின்றார்கள் என்ற செய்தியை எசேக்கியேல் முன்வைக்கின்றார். இதனூடாக கடவுளின் பணியை எந்தளவிற்கு அழைப்புப் பெற்றவர்கள் நிறைவேற்றவில்லை என்ற உண்மையும் புலனாகின்றது. இவைகள் ஓர் அரசாட்சியின் வீழ்ச்சிக்காலப் பகுதியில் எழுந்த சிந்தனைகளாகும். அத்துடன், இறைவன் தன்னுடைய மந்தைகளை தானே மேய்க்கப்போவதாகக் குறிப்பிடுகின்றார். இங்கு புதிய நல்லாயனுக்கான கனவு பிறப்பதை நாம் காணலாம். இவைகள் இயேசுவில் நிறைவடைவதாக யோவான் 10:1-10ல் நாம் காணலாம்.

• 1 பேதுரு 2:9ல், இறைவன் நம் எல்லோரையும் ராஜரீக ஆசாரிய கூட்டமாகவும் பரிசுத்த ஜாதியாகவும் அழைத்துள்ளார் என்ற செய்தி வலுப்பெறுகின்றது. இறைவனில் அழைப்பில் எல்லோருக்குமான குருத்துவம் இங்கு காண்பிக்கப்படுகின்றது. குருத்துவம் ஒரு சில கோத்திரங்களுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல் அது எல்லோருக்கும் உரியதான சிறப்பழைப்பாகும். அவ் அழைப்புக்காகவே நாம் அனைவரும் பிரித்தெடுக்கப்பட்டுள்ளோம் என்ற செய்தி வலுப்பெறுகின்றது. இத்தகைய செய்தியையே சீர்த்திருத்தவாதியாகிய மார்டின் லூதரும், ஏனைய புரட்டஸ்தாந்து சீர்த்திருத்தவாதிகளும் தமது சீர்த்திருத்தத்தின் மையச் செய்தியாக தேர்ந்தெடுத்தனர் என்பதை நாம் அவதானிக்கலாம். மேலும் யோவான் 20:19-23ல், பேதுருவின் தரிசனம் இங்கு நிறைவேறுவதையும் நாம் காண்கின்றோம். அதாவது ஆண்டவர் இயேசு தமது திருப்பணியில் பெண்களை நற்செய்தி பணியாளர்களாக அனுப்புவதை நாம் பார்க்கின்றோம். யோவான் 4ம் அதிகாரத்தில் சமாரியப்பெண்ணை நாம் காண்பதோடு, யோவான் 20ம் அதிகாரத்தில் மகதலேனா மரியாளை நோக்கி, “இதோ எனது உயிர்ப்பின் செய்தியை நீ சென்று சீடர்களோடு பகிர்ந்துகொள்” என அழைக்கின்றார். இதனூடாக தமது தூதுப்பணியில் ஆண்கள் மாத்திரமல்ல பெண்களும் அதை எடுத்துச் செல்லும் கருவிகள் என்பதை இயேசு காண்பிக்கின்றார்.

• கடவுளுடைய திருப்பணியை சரிவர மக்கள் ஆற்றாத வேளையில் கடவுள் அப்பணியை இன்னுமொருவரிடம் கையளிப்பது திருமறைக்குள் காணப்படும் ஓர் சிறந்த வரலாறாகும். மேய்ப்பர்கள் சரிவர மேய்க்காதபோது நல்லாயனாகிய மேய்ப்பரை கடவுள் பரிசாக தந்தார். அதனூடாக எல்லோருக்குமுரிய குருத்துவம் தரப்பட்டிருக்கின்றது. உரோமையர் 9:10,11ல், யூதர்கள் சரிவர பணியைச் செய்யாதபடியால் கடவுள் கிறிஸ்தவர்களை தெரிவு செய்தார் என்று கூறுகின்றார் பவுல். கிறிஸ்தவர்கள் அந்தப் பணியைச் சரிவர செய்யாதபட்சத்தில் கடவுள் இன்னுமொருவரை தெரிந்தெடுப்பதில் ஐயமில்லை என்கிறார் பவுல். எனவே, இறைவனால் அளிக்கப்பட்டிருக்கின்ற எத்தகைய தூதுப்பணியாக இருந்தாலும் அவற்றை நாங்கள் இயேசுவின் உயிர்ப்பின் பிரசன்னத்தில் உணர்ந்து ஆற்றுவதனூடாக பரிசுத்த கூட்டமும் அவருக்கு உகந்த திருப்பணியாளர்களாகவும் எம்மால் மாறமுடியும்.

ஆக்கம் : அற்புதம்