mosaic, picture, art-409427.jpg

எசேக்கியேல் 37:1-14

•            இன்று திருச்சபை தூய ஆவியார் பொழியப்பட்ட திருநாளை நினைந்துக் கொள்வதை நாம் பார்க்கின்றோம். ஆண்டவர் இயேசு விண்ணேற்றம் அடைந்து பத்தாவது நாளிலும் உயிர்த்தெழுந்து ஐம்பதாவது நாளிலும் திருச்சபைக்கு தூய ஆவியார் பொழியப்பட்ட திருநாளை பெந்தேகோஸ்தே திருநாள் என்று அழைக்கின்றோம். பெந்தே என்பது ‘ஐம்பது’ என்று பொருள்படுகின்றது. இதனை ஆதித்திருச்சபை அறுவடையின் விழாவாக பழைய ஏற்பாட்டு காலத்திலிருந்து நினைந்துகொண்டது. இவ் அறுவடையின் விழா அன்றே தூய ஆவியார் திருச்சபைமீது பொழியப்பட்டார். அதாவது, இந்நாளிலேயே கடவுள் இஸ்ராயேல் மக்களுக்கு மோசே மூலம் பத்து கட்டளைகள் கொடுக்கப்பட்டதையும் நாம் நினைந்துகொள்கின்றோம்.

•            பெந்தேகோஸ்தே திருநாளில் திருச்சபை உதயமானது என்று பொதுவாக நம்பப்படுகின்றது. எனினும், ஒருசிலர் ஆண்டவர் இயேசு தமது சீடர்கள்மீது தூய ஆவியை ஊதி அவர்களை தூய ஆவியால் நிரப்பப்பட்டபோது திருச்சபை உருவானது என்ற விளக்கத்தை அளிப்பவரும் உண்டு. மேலும் தொடக்கநூல் 12:1-3ல், கடவுள் ஆபிரகாமை அழைத்த நாளிலிருந்தே திருச்சபை உருவானது என்று ஒருசிலர் விவாதிப்பார். எனினும், சீடர்கள் பலப்பட்டு திருப்பணியை முன்னெடுத்துச் செல்வதற்கு பெந்தேகோஸ்தே நிகழ்வு மிகவும் முக்கியமானதொன்றாகக் காணப்படுவதை நாம் அவதானிக்கலாம். இந்நாளிலேயே சீடர்கள் புதுப்பிக்கப்பட்டதை நாம் பார்க்கின்றோம். குறிப்பாக, “இயேசுவை அறியேன்” என மறுதலித்த பேதுரு தூய ஆவியினால் நிரப்பப்பட்டவுடன் திருத்தூதர்பணிகள் 2:32-38 வரையுள்ள பகுதியில், “யூதர்களே நீங்கள் திருச்சட்டம் அறியாத உரோமர்கள் கையில் இயேசுவைக் கொடுத்து கொலை செய்தீர்கள்” இதற்கு நாங்கள் சாட்சிகள் எனக் கூறுவது இதற்கு எடுத்துக் காட்டாக அமைகின்றது.

•            கி.மு.6ம் நூற்றாண்டில் இஸ்ராயேல் மக்கள் பாபிலோனியாவில் அடிமைகளாகக் காணப்பட்டனர். சிறப்பாக, கி.மு.586ல் நேபுகாத்நேச்சார் என்னும் அரசன் பாபிலோனியாவிலிருந்து எருசலேமை முற்றுகையிட்டு ஆலயத்தை அழித்து அநேகரை பாபிலோனியாவுக்கு சிறைப்பிடித்துச் சென்றான். முதலாவது சிறையிருப்பு கி.மு.605ம் ஆண்டில் நடைப்பெற்றது. எசேக்கியேல் தனது முதலாவது சிறையிருப்பில் தனது மனைவியை இழந்தார். பின்னர் எசேக்கியேல் பாபிலோனியாவுக்கு அடிமையாக அழைத்துச் செல்லப்படுகின்றார். எசேக்கியேல், எரேமியா, இரண்டாம் ஏசாயா ஆகியோர் அடிமைத்தன காலத்திலேயே பாபிலோனியாவில் பணியாற்றிய இறைவாக்கினர் ஆவார். இவர்கள் சிறப்பாக இஸ்ராயேல் மக்களின் நம்பிக்கையை புதுப்பித்து செயற்பட்டனர். சிறப்பாக இஸ்ராயேல் மக்கள் தமது சொந்த தேசமாகிய எருசலேமுக்கு தாங்கள் போகமாட்டோம் என்ற நம்பிக்கையிலே தான் காணப்பட்டனர். இவ்வாறு சோர்வுற்ற மக்களை எசேக்கியேல் உலர்ந்த எலும்புகள் நிகழ்வுடன் உற்சாகப்படுத்துகிறார். “உலர்ந்த எலும்புகளுக்கு கடவுள் உயிர்கொடுக்க முடியுமேயென்றால், அவர் உங்களுக்கும் உயிர் அளிக்க வல்லவராயிருக்கிறார். உங்கள் நம்பிக்கைகள் புதுப்பிக்கப்பட்டு நீங்கள் மறுபடியும் சொந்த நாட்டிற்கு செல்வீர்கள்” என்ற இறைவாக்கை எசேக்கியேல் கூறுகிறார். இதனூடாக அவநம்பிக்கையிலிருந்து மக்கள் நம்பிக்கைக்குள் அழைக்கப்படுகின்றனர். அவர்கள் நம்பிக்கை புதுப்பிக்கப்படுவதை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது.

•            இன்று நாம் வாழுகின்ற எமது சூழலில் பலவிதமான அவநம்பிக்கைகள் எம்மை சூழ்ந்துக்கொண்டிருக்கின்றன. எங்கள் நம்பிக்கைகள் மரணித்துபோய்விட்டன. இத்தகைய சூழ்நிலையிலேயே எங்கள் நம்பிக்கைகளைப் புதுப்பிக்குமாறு தூய ஆவியாரை நாம் அழைப்போமாக. சிறப்பாக, மானிட வாழ்வில் நம்பிக்கைகள் மாத்திரமல்ல இயற்கை குறித்த நம்பிக்கைகளும் எங்களுக்கு மிக அவசியமாகின்றது. ஆசிய கிறிஸ்தவ சங்க மகாநாட்டில், ‘கடவுளே உமது ஆவியால் இயற்கையை புதுபித்து பராமரித்தருளும்’ என்ற கருப்பொருளில் இறுதி மகாநாடு இந்தியாவில் உள்ள கோவலப் பகுதியில் நடைப்பெற்றது. எனவே, இதற்கூடாக இவ் இயற்கை புதுப்பிக்கப்படவேண்டும் என்றும் பராமரிக்கப்பட வேண்டும் என்ற நம்பிக்கை இன்று எழுகின்றது. எனவே, மனிதர்களுடைய அவநம்பிக்கைகள் மாத்திரமல்ல இயற்கைகே ஏற்பட்டிருக்கின்ற அவநம்பிக்கைகளையும் நாம் அகற்றி நம்பிக்கையுள்ள உலகை உருவாக்க எங்களை நாங்கள் படைப்போமாக.

ஆக்கம்: அற்புதம்