5 ஜுன் 2022
பெந்தேகோஸ்தே நாள் – தூய ஆவியே எம்மை விடுதலை செய்ய வாரும்
லூக்கா 4:16-21

• தூய ஆவியர் மக்களுக்கு விடுதலை அளிக்கின்றார். 1968ம் ஆண்டு சுவீடனில் உள்ள உத்சலா என்ற இடத்தில் நடைப்பெற்ற அனைத்துலக திருச்சபை மன்ற கூட்டத்தின் கருப்பொருளாக கடவுளே எம்மை விடுவித்தருளும் என்ற தொனிப் பொருள் காணப்பட்டது. இதன்மூலம் இவ்வுலகமே ஏன் இயற்கையே விடுதலைக்காக ஏங்கித் தவிக்கின்றது.

• பாபிலோனிய அiடிமைத்தனத்திலிருந்து மீண்டு வந்த இஸ்ராயேல் மக்கள் மத்தியில் 3ம் ஏசாயா மேசியாவின் திருப்பணியைப் பற்றி இறைவாக்கு உரைக்கின்றார். இதனை, ஏசாயா 61:1-11 வரையுள்ள பகுதியில் நாம் படிக்கின்றோம். இப்பகுதியை ஆண்டவர் இயேசு நாசரேத்தூர் பிரகடனத்தில் செப ஆலயத்தில் பயன்படுத்துவதை நாம் காணலாம் (லூக்கா 4:16-21). எனினும், ஏசாயா கூறுகின்ற கடவுளின் பழிவாங்கும் வருடத்தைப் பற்றி இயேசு எதனையும் கூறவில்லை.

• நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 4:16-21)ல் கர்த்தருடைய ஆவியானவர் தன்மேல் இருக்கின்றார் என இயேசு ஆரம்பிக்கின்றார். கர்த்தருடைய ஆவியானவர் ஒருவர்மீது இருக்கும்போது அவர் விடுதலை சார்ந்த பணிகளில் ஈடுபடுவார். எனவேதான், இயேசு கடவுள் இவ்வுலகில் எல்லோரையும் சமமாக படைத்திருக்கும்போது ஏழை பணக்காரன் என்ற சமத்துவம் அற்ற நிலை சுரண்டலின் விளைவாகவே தோன்றுகின்றது என்கிறார். எனவே, யார் உங்களை தரித்திரராக்கியது என சிந்துக்குமாறு தரித்திரரைப் பார்த்து கூறினார். இதுவே தரித்திரருக்கான நற்செய்தியாகும். மேலும், சிறைப்பட்டோருக்கு விடுதலை என்பது மன்னிப்பு, ஒப்புரவு ஆகியவற்றினூடாக சிறைக் கதவுகள் மூடப்படுவதையே குறிக்கின்றது. அத்துடன், பார்வையற்றோருக்கு பார்வை என்பது, வெறுமனே சரீரபார்வையைக் குறிக்காமல் நல்லது எது தீயது எது என பார்க்கும் பார்வையையே குறிக்கின்றது. ஆறுதலற்று இருக்கும் மக்களுக்கான ஆறுதல் இயேசுவின் விடுதலைச் செயற்பாட்டினால் கிடைக்கின்றது. கடவுளுடைய அனுக்கிரக வருஷத்தை அறிவித்தல் என்பது ஜுபிலி வருடம் அல்லது விடுதலையின் வருடத்தை அறிவித்தலாகும். இங்கு கடன்பட்டவருக்கும் நிலத்திற்குமான விடுதலையாகும். இதற்காக மக்கள் ஜுபிலி வருடம் வரை காத்திருந்தனர். ஆனால், இயேசு மக்களை நோக்கி ஒவ்வொரு நிமிடத்தையும் ஜுபிலி வருடமாக பிரகடனப்படுத்தும்படி வேண்டுகிறார். இதுவே ஆவியினால் நிறைந்த மனிதருடைய செயற்பாடாகும். மேலும், செப ஆலயத்திற்கு வெளியே இருந்த மக்களுடன் பேசும்போது சீதோன் நாட்டிலுள்ள செரப்தா பட்டணத்தைச் சேர்ந்த விதவையை கடவுள் எலியா மூலம் போஷித்தார் எனவும், புற இனத்தவரான நாகமானை கடவுள் எலிசா மூலம் குணப்படுத்தினார் எனவும் காண்பித்து கடவுள் தாராள மனதை மக்களுக்கு எடுத்துக் காட்டினார். இவ்வாறு யூதர்கள் தங்களுக்கு மாத்திரம் கடவுளை சிறைப்பிடித்து வைத்திருந்த சிறையிலிருந்து மக்களை விடுவித்தார்.

• புதிய உடன்படிக்கை வாசகத்தின்படி திருத்தூதர்பணிகள் 2:1-13 பகுதியில் திருச்சபை மீது தூய ஆவியரின் வருகையை நாம் பார்க்கின்றோம். அன்று பயத்துக்குள் சிறைப்பிடிக்கப்பட்டு உண்மையை கூற விரும்பாத பேதுரு தூய ஆவியால் நிரப்பப்பட்டபோது இயேசுவின் மரணத்திற்கான காரணத்தை பகிரங்கமாக அறிக்கையிடுகின்றார். இதனை திருத்தூதர்பணிகள் 2:33-38 வரையுள்ள பகுதியில் நாம் காணலாம். மேலும், யூதர்களின் அறுவடை விழாவாகிய அன்றே தூய ஆவியரின் வருகை இடம்பெற்றது. இதன்மூலம், தூய ஆவியர் பண்டிகைகளுக்கு அப்பால் செயற்படக் கூடியவர் என உணர்த்துகின்றார். மேலும், அவர் எல்லோருக்குமுரியவர் என்பதை அங்கிருந்த பார்த்தர், மேதர், பொந்து, கப்பதோக்கியர் மக்களும் கண்டு கொண்டனர். மேலும், பெந்தேகோஸ்தே அனுபவம் நற்செய்தி பல இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கான ஆரம்பமேயாகும். இதனூடாக, தூய ஆவியர் எல்லா தடைகளையும் தாண்டி செயற்படுவதற்கு மக்களுக்கு உதவி அளிக்கின்றார்.

• யாத்திராகமம் அல்லது விடுதலைப்பயணம் 19:1-10ல் கடவுள் சீனாய் மலையில் இறங்கியதைப் போன்றே பெந்தேகோஸ்தே அனுபவமும் காணப்பட்டது. மேலும், பெந்தேகோஸ்தே நாள் பல வாக்குத்தத்தங்கள் நிறைவேறப்பட்ட திருநாளாகும். உதாரணமாக: யோவேல் 2:17 மாம்சமான யாவர் மீதும் கடவுள் ஆவியரைப் பொழிவார் என்ற வாக்குறுதி நிறைவேறுகிறது. மேலும், திருமுழுக்கு யோவான், நான் உங்களுக்கு தண்ணீரினால் திருமுழுக்கு அளிக்கின்றேன். எனக்குப் பின் வருபவர் தூய ஆவியினாலுமம் அக்கினியினாலும் திருமுழுக்கு அளிப்பார் என்ற வாக்குறுதி இங்கு நிறைவேறுகின்றது. அத்துடன், ஆண்டவர் இயேசு தமது சீடர்களை நோக்கி, நான் உங்களுக்கு ஒரு தேற்றரவாளனை அனுப்புவேன். அவர் எப்பொழுதும் உங்களுடன் இருப்பார் என்ற வாக்குறுதியும் இங்கு நிறைவேறுகின்றது. மேலும், பாபேல் கோபுரத்தில் மொழிக் குழப்பம் ஏற்பட்டது (ஆதியாகமம் 11:1-10). ஆனால், இங்கு மொழிகள் இணைக்கப்பட்டன. எனவே, இதுவோர் ஒற்றுமையின் திருநாளாகும்.

ஆக்கம்: அற்புதம்