11 ஜூன் 2023

சுற்றுப்புற ஞாயிறு
படைப்புக்களுக்கான விடுதலை


யோவான் 20:19-23

ஆதியாகமம் – தொடக்கநூல் 1:1-2:3 வசனம் வரையுள்ள பகுதியில், படைப்புக்கள் அனைத்தும் இறைவனால் படைக்கப்பட்டது எனவும், அவைகள் நல்லது என்ற கருத்து நிலவுகின்றது. படைத்தவர் வேறு, படைப்பு வேறு என்ற சிந்தனை தெளிவாகக் காட்டப்படுகிறது.

படைப்புக்கள் அனைத்தும் இறைவனுக்கு சொந்தமானது என சங்கீதம் – திருப்பாடல் 24:1இலும், படைப்புக்கள் கடவுளுடைய மகிமையை வெளிப்படுத்துகின்றது என திருப்பாடல் – சங்கீதம் 19:1ம் வசனம் கூறி நிற்கின்றது.

எசேக்கியேல் 36:24ம் வசனம் முதல் உள்ள பகுதியில், படைப்புக்கள் அனைத்தையும் இறைவன் புதிதாக்குகிறார் என்ற கருத்து காண்பிக்கப்படுகின்றது. திருவெளிப்பாடு – வெளி 21:1-7ம் வசனம் வரையுள்ள பகுதியில், இறைவன் அனைத்தையும் புதிதாக்குகின்றார் என்ற சிந்தனை வலுப்பெறுகிறது. ஆசிய கிறிஸ்தவ சங்க மகாநாட்டின் போதும் ‘கடவுளே உம்முடைய ஆவியால் அனைத்து படைப்பையும் புதிதாக்கும்’ என்ற கருப்பொருள் படைப்புக்கள்மீது இறைவனுக்குள்ள கரிசனையை தெளிவாகக் காண்பிக்கின்றது.

திருப்பாடல் – சங்கீதம் 29ல், படைப்புக்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் கடவுளிடம் உண்டு என்பதை நாம் பார்க்கிறோம். ஆரம்பத்தில் மனிதன் தவறிழைத்ததன் விளைவாக படைப்புக்கள் மனிதனை கட்டுப்படுத்தியது. எனினும், ஆண்டவர் இயேசு காற்றையும் கடலையும் அதட்டியதனூடாக (மாற்கு 4:35-41) மறுபடியும் இயற்கையை ஆளும் உரிமையை மனிதனிடம் கையளிக்கின்றார். இதனையே திருப்பாடலை எழுதிய ஆசிரியரும் விபரிக்கின்றார்.

உரோமர் 8:22ல், முழுப் படைப்புக்களும் மீட்பிற்காக ஏங்குகின்றன என்ற கருத்து வலுப்பெறுகின்றது. அதாவது, மனிதர்கள் இயற்கைக்கு எதிராக செய்த தவறின் காரணமாக மீட்பு மனிதர்களுக்கு மாத்திரமன்றி முழுப் படைப்புக்களுக்கும் அவசியமாகின்றது. குறிப்பாக, மாற்கு 16ம் அதிகாரத்தில், முழுப் படைப்புக்களுக்கும் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டிய தேவை வலியுறுத்தப்படுகின்றது. எனவேதான், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “இயற்கைக்கு எதிராக நாம் இழைக்கும் தவறை இறைவன் மன்னிக்கக் கூடும். ஆனால், இயற்கை எதிர் யுத்தம் புரியும்” என்ற வாக்கினால் ஞாபகப்படுத்துகின்றார்.

யோவான் 20:19-23 வரையுள்ள பகுதியில், ஆண்டவர் இயேசு தமது சீடர்கள்மீது ஆவியை ஊற்றி, இயற்கையை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை அவர்களுக்கு வழங்குகின்றார். தமது ஆவியை சீடர்களுடன் பகிர்ந்துகொண்டு இயற்கையை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை மறுபடியும் கையளிக்கின்றார். சிறப்பாக, இயற்கையுடன் தொடர்புபட்ட அசீசீ நாட்டைச் சேர்ந்த புனித பிரான்சிஸ் அவர்கள் இயற்கைமீது கொண்ட அன்பினிமித்தம், சூரியனை அண்ணன் என்றும், சந்திரனை தங்கச்சி எனவும், தண்ணீரை தம்பி எனவும் கூறிநிற்கின்றார். எனவே, நாமும் இயற்கையை ஆதரிக்கக் கூடிய, அன்பு செலுத்தக் கூடிய வழிவகைகளை எமது நாளாந்த வாழ்வில் மேற்கொள்வோமாக.

ஆக்கம்: அற்புதம்