pexels-photo-707344-707344.jpg

Creation Proclaims Glory of God

லூக்கா 8:22-25

•            படைப்புக்கள் பற்றி ஒவ்வொரு சமயங்களும் வேறுபட்ட கருத்தியல்களை எம்மிடையே முன்வைக்கின்றது. ஆனால், திருமறைக் கூறும் உண்மையின்படி தொடக்கநூல் 1ம், 2ம் அதிகாரங்களில் இறைவனே படைப்பாளராகவும் படைப்புக்கள் இறைவனுக்கு கீழ்ப்பட்டவைகள் என்ற உண்மை காண்பிக்கப்படுகின்றது. படைப்புக்கள் நல்லது என்ற செய்தியும் அங்கு பொதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், அக்காலத்தில் நிலவிய சிந்தனைபடி, கடவுள் உலகத்தைப் படைக்கவில்லை என்றும் அவரிடமிருந்து புறப்பட்டுவந்த எயோன்கள் அல்லது தூதர்களே உலகத்தைப் படைத்ததாகவும் மக்கள் நம்பினர். மேலும், சடப்பொருள் தீயது. ஆவி நல்லது. எனவே, கடவுள் தீய சடப்பொருளைக் கொண்டு உலகைப் படைத்திருக்கமாட்டார் என்ற உண்மையும் பேசப்பட்டு வந்தது. இதனால் படைப்புக்கள் தீயது என்ற சிந்தனை மக்கள் மத்தியில் பொதிக்கப்பட்டிருந்தது. எனவேதான், இங்கே திருமறை ஆசிரியர் படைப்புக்கள் நல்லது என்ற செய்தியை எடுத்துக் காண்பிக்கின்றார்.

•            திருப்பாடல் 24:1ல் படைப்புக்கள் அனைத்தும் இறைவனுக்கே சொந்தம் எனவும், திருப்பாடல் 19:1ல் படைப்புக்கள் ஊடாக நாம் இறைவனின் செயற்பாட்டை கண்டுகொள்ள முடியும் எனவும், அவரது மாட்சியை படைப்புக்கள் வெளிப்படுத்துகின்றது என்ற உண்மையும் இங்கு காணப்படுகிறது. இத்திருப்பாடல் எகிப்திய, பாபிலோனிய புராணங்களிலிருந்து எடுக்கப்பட்டிருக்கின்றது என்ற செய்தி ஆச்சரியத்திற்கு உரியதே ஆகும். அச்சமயங்களிலும் இறைமாட்சி படைப்புக்களினூடாக வெளிப்படுகிறது என்ற உண்மையை நாம் காணலாம். மேலும், இறைவன் தன்னை படைப்புக்களினூடாக வெளிப்படுத்துகின்றார். தொடக்கநூல் 12:7ல் கருவாலி மரத்தண்டையில் இறைவன் ஆபிரகாமுக்கு தன்னை வெளிப்படுத்தல், விடுதலைப்பயணம் 3:14ல் இறைவன் தன்னை எரியும் நெருப்பின் மத்தியில் மோசேக்கு வெளிப்படுத்தல் ஆகிய உண்மைகளை நாம் காணலாம்.

•            படைப்புக்கள் அனைத்தும் இறைமாட்சியை வெளிப்படுத்துகின்ற அதேவேளை படைப்புக்களை பராமரிக்கவும் பண்படுத்தவும் இறைவன் எம்மை அழைத்துள்ளார் என்னும் பொறுப்புசார்ந்த உண்மையும் இதற்கூடாக வெளிப்படுகின்றது. இதை சரிவர நாம் செய்யாதபடியால் உரோமையர் 8:22ல் கூறப்படுவதுபோல் முழு படைப்புக்களும் பிரசவ வேதனைபடுகின்றன என்ற செய்தி காணப்படுகின்றது. எனவே, இப்படைப்புக்கள் அனைத்திற்குமே நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டுமென மாற்கு 16:15ல் நாம் வாசிக்கின்றோம்.

•            லூக்கா 8:22-25 வரையுள்ள பகுதியில், இயேசு கடலையும் காற்றையும் அதட்டியதன் ஊடாக இயற்கைக்கும் அப்பாற்பட்ட புதுமையை இயேசு ஆற்றுகின்றார். இதனை மாற்கு 4:35-41லும் நாம் காணலாம். அப்பங்களைப் பலுகச் செய்த புதுமை, இயேசு கடலில் நடக்கும் புதுமை, அத்துடன் தண்ணீரை திராட்சை ரசமாக்கும் புதுமை, மரணத்திலிருந்து மக்களை உயிர்பெற்றெழச் செய்யும் புதுமை இவைகள் அனைத்தும் இயற்கைக்கும் அப்பாற்பட்ட இயேசுவின் புதுமைகளாக நாம் கருதலாம். ஆரம்ப காலத்தில் கடவுள் மனிதனைப் படைத்து இயற்கையைப் பராமரிக்கும் பொறுப்பை அவனிடத்திலே கொடுத்தார். எனினும், மனுக்குலம் இயற்கைக்குக் கட்டுப்பட்டதை தொடக்கநூல் 3:1-10 வரையுள்ள பகுதியில் நாம் படிக்கலாம். இவ்வாறு கட்டுப்பட்ட மனிதனை இயற்கையிலிருந்து மீட்டு மறுபடியும் இயேசு இயற்கையை கட்டுப்பாட்டுக்குள்; கொண்டுவந்ததன் விளைவாக மனுக்குலம் இழந்த இயற்கை மீதான அதிகாரத்தை மறுபடியும் பெற்றுக்கொடுத்ததையே இப்புதுமை எங்களுக்கு எடுத்துக் காண்பிக்கின்றது. அதாவது, இயற்கையை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை இயேசு மறுபடியும் எமக்குத் தந்தார். எனினும், எமது தவறுகளின் விளைவாக இவ்வதிகாரம் மறுபடியும் இயற்கைவசம் கைவசமாகியுள்ளது. இதன் காரணமாகவே இன்றும் இயற்கை சீற்றம் புரிவதை நாம் அவதானிக்கலாம். மானிடர்கள் இயற்கைக்கு எதிராக தவறிழைக்கும்போது இறைவன் அவர்களை மன்னிக்கக்கூடும். எனினும், இயற்கை எதிர்த்தாக்கம் புரியும் என்ற தற்போதைய திருத்தந்தையின் வாக்கை நாம் மனதில் இருத்திக் கொள்ளவேண்டும். எனினும், இயற்கை ஊடாக தன்னை தொடர்ந்தும் வெளிப்படுத்தி மாட்சிமையடையும் இறைவனின் தொடர்ந்தும் வெளிப்படுத்தும் தன்மைக்காக இறைவனை நாம் போற்றுவோமாக.  

ஆக்கம்: அற்புதம்