March 2, 2022, Wednesday
Ash Wednesday

Cross: A Call to Vicarious Suffering

1 Kings17: 12 – 24
Psalm 102
Philemon 2:1-11
Mark 8:31-38

சாம்பல் புதன்

மாற்கு 8:31:38

• மனித வாழ்வில் துன்பங்களை நாம் ஒவ்வொருவரும் அனுபவிக்கின்றோம். அவைகளிலிருந்து எம்மால் விலகிவிட முடியாது. இதற்கு விதி கர்மக் கோட்பாடுகள் காரணங்கள் என நாம் நியாயப்படுத்துகின்றோம். ஆனால், நாம் நன்மை செய்வதன் ஊடாக அடையும் துன்பம் மேலானது என்பதை இங்கு பார்க்கின்றோம். இதுவே, லெந்து காலத்திற்கான அழைப்பாகும்.

தன்னார்வ துன்பம்

• முதலாம் உடன்படிக்கை (1அரசர் / 1 இராஜாக்கள் 17:12-24) சீதோன் நாட்டு செரப்தா பட்டணத்திலுள்ள விதவை தன்னிடத்தில் இருந்த உணவு பதார்த்தத்தை தனது இயலாமையின்போதும் வெறுமையின்போதும் இறைவாக்கினராகிய எலியாவுடன் பகிர்ந்து கொள்கின்றார். இதன் மூலம், தனது இல்லாமையின்போது நிச்சயமாக அவள் துன்பப்படுவாள். ஆனால், அவளுடைய தன்னார்வ துன்பம் இப்பொழுது வெற்றியில் நிறைவடைகின்றது.

துன்பத்திலும் நன்மை செய்தல்

• திருப்பாடல் 102ல் ஆசிரியர் தன் எதிரிகளால் ஏற்படும் துன்பங்களை பற்றி பேசுகின்றார். அதன் காரணமாக, தன் உணவைக் கூட உண்ணமுடியாத நிலை காணப்படுகின்றது என்கிறார். இங்கு தனது துன்பங்களின் மத்தியில் வன்முறைக்கு வன்முறை செய்யாமல் தீமையை நன்மையினால் மேற்கொள்ளுகின்றார். அதாவது, துன்பம் நியாயமற்றது என கருதியும் துன்பப்படுத்துவோர் மீட்படைய வேண்டும் என்பதையே இலக்காக கொண்டார்.

பிறருக்காக இழத்தல்

• பிலிப்பியர் 2:1-11ல் பவுல் ஆதித்திருச்சபையில் பாடப்பட்ட கிறிஸ்துயியல் பாடலை இங்கு காண்பிக்கின்றார். கிறிஸ்து இறைவனோடிருந்தும் அதனைப் பெரிதுபடுத்தாமல் மக்களுடன் தன்னை அடையாளப்படுத்துவதற்காக அடிமையின் தாழ்மையின் ரூபமெடுத்து மரணத்தை ருசிபார்த்தார். இங்கு, கிறிஸ்து தான் இருந்த நிலையை பிறருக்காக இழக்கின்றார். இது அவரடைந்த துன்பமாகும். மேலும், தன் உயிரை பிறருக்காக தியாகம் செய்வது இன்னுமோர் வகையான துன்பமாகும். இவைகள் அனைத்தையும் அவர் அனுபவித்து ஈற்றில் எல்லாப் பேர்களுக்கும் மேலாக அவருடைய திருப்பெயரை மக்கள் வழிபடும் அளவிற்கு அவர் உயர்த்தப்பட்டார்.

சிலுவை இல்லையேல் உயிர்த்தெழுதல் இல்லை

• நற்செய்தி பகுதியில் மாற்கு சிலுவை சுமக்குமாறு இயேசு கூறிய வார்த்தையை நியாபகப்படுத்துகின்றார். அதாவது, மற்றவர்களின் நன்மைக்காக நாம் தெரிந்தெடுக்கும் துன்பமே சிலுவை ஆகும். இங்கு, ஆண்டவர் இயேசு இவ் அனுபவத்தை பெறுமாறு ஒவ்வொருவரையும் அழைக்கின்றார். அதாவது, நாம் மற்றவர்களுக்கு நன்மை செய்வதன் ஊடாக அடையும் துன்பமாகும். இதன்படி, துன்பம் இல்லையேல் மாட்சி இல்லை. சிலுவை இல்லையேல் உயிர்த்தெழுதல் இல்லை என்பது புலனாகின்றது.

அருளம்பலம் ஸ்டீபன்
அருளம்பலம் ஸ்டீபன்

இலங்கை