(கொலோசேயர் 2:8-15)

சிலுவை விடுதலையைக் கொண்டு வருகிறது என்பதை மரபு சார்ந்த விளக்கங்களின்படி கிறித்தவர் ஐயமின்றி நம்புவர். ஆனால் சமயசார்பற்ற சூழலில் இன்று கேள்விகளால் அவ்விளக்கங்கள் குடைந்தெடுக்கப்படுகின்றன. சிலுவை - விடுதலை ஆகிய இரு சொற்களும் தன்னில்தானே அதிக செறிவைப் பெற்று நிரம்பியுள்ளன.  சிலுவை பலருக்கு சாபம், துன்பம் என்பது யூதரும், கிரேக்கரும் மட்டுமல்ல (1கொரி.1:23-24), வலதுசாரி இந்துக்களும் அப்படித்தான் பார்க்கின்றனர். சாபத்திற்குரிய சிலுவையை ஏன் காலையில் எழுந்தவுடன் எங்கள் கண்கள் காணுமாறு கோவில்களில் எழுப்பியிருக்கிறீர்கள்? என என்னிடம் சிலர் கேள்வி எழுப்பினர் (தஞ்சை தமிழ் பல்கலைக்கழக அனுபவம்).

சிலுவை சிலருக்கு ஒரு அடையாளத்தைத் தருகிறது. சாதியத்தின் அடையாளம், மதத்தின் அடையாளம், திரைப்பட அடியாட்களின், போக்கிரிகளின் அடையாளம் போன்றவைகள் சிலுவைச் சின்னத்தால் இன்றும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. சிலுவை சிலருக்கு கலைச்சின்னம். தாலி மாலை, சாதாரண தங்கச்சங்கிலி, அழகுக்கலைப் பொருட்கள் இவைகளில் சிலுவையை தொங்கவிடுவது ஆகும். சிலுவை சிலருக்கு சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட தகுதியைத் தருகிறது. புனிதச் சிலுவை கல்லூரிக் கல்வி மூலம் புதுத் தகுதி, பெருமை வருகிறது. சிலுவை சிலருக்கு சில அமைப்புகளின் சின்னம் செஞ்சிலுவைச் சங்கம், நீலச்சிலுவை சங்கம்.

விடுதலையை நாம் எப்படி புரிகிறோம்? நாம் பேசும் விடுதலைக்கும், பொதுவுடமை பேசுவோர் விடுதலைக்கும் வேறுபாடு உள்ளதா? நாம் மார்க்சியத்தையும் தாண்டிச் செல்லவேண்டும்.

ஆனால் நாம் விடுதலையை, மீட்பை ஆன்மிகமாக்கி, மண்ணை வெறுத்து, விண்ணை நாடிச் செல்கிறோம். நம் ஆன்மா, முடியுமானால் ஒரு சில ஆன்மாக்களுடன் விண்ணை அடைவதுதான் இன்று விடுதலை எனப் பார்க்கின்றனர். இவை பரவலாக தமிழக கிறித்தவத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விளக்கங்கள். ஆனால் இறையியல் ரீதியாக ஆழமாக சிலுவையை எப்படி நாம் புரிந்துகொள்வது? விடுதலைக்கு ஒரு சிலுவை தேவையா? அல்லது சிலுவையிலிருந்து நமக்கு விடுதலையா? எதிலிருந்து விடுதலை? – பாவத்திலிருந்தா? பொருளாதார பற்றாக்குறையிலிருந்தா? ஆன்மா விடுதலையா? எல்லாவற்றையும் இணைத்த ஒரே விடுதலையா!

மொத்தத்தில் விடுதலைக்கு ஒரு துன்பம், சிலுவை தேவையா என்பது பலரது கேள்வியாகும். அந்த சிலுவையை ஒருவர் சுமப்பதா? அல்லது குழுவாக சுமப்பதா? சிலுவையை நாம் அன்றாடம் சந்திக்கும் துன்பங்களோடு பொருத்திப்பார்க்க முடியுமா? பெரும்பாலானோரும் அப்படித்தான் பார்க்கின்றனர்.

பால்டன் சீன் என்பார் கூறும்போது, ‘மேற்கு நாடுகளில் சிலுவையில்லாத (துன்பம் இல்லாத) கிறிஸ்துவும், கிழக்கு நாடுகளில் கிறிஸ்து இல்லாத துன்பமும் காணப்படுகின்றன’ என்றார். ஆசியாவில் வறுமை, சாதியம், ஏற்றத்தாழ்வுகள் அதிகம். இவைகளிலிருந்தும் விடுதலை வேண்டும் என்பதில் ஐயமில்லை.

1. சிலுவையில் அதிகமாக விஞ்சிநிற்பவைகளில் ஒன்று இழப்பு

அது ஒரு தியாக உணர்வைத் தருகிறது. கோதுமை மணி நிலத்தில் விழுந்து சாவதால் புதியதொரு வாழ்வைத் தருகிறது (யோ.12:23-24). ஏன் ஒருவர் மட்டுமே இழக்கவேண்டும் என்பது இன்றைய உரிமைக்குரல்கள். ‘நீதிக்காக துன்புறுவோர் பேறு பெற்றோர். கடவுளின் அரசு அவர்களுடையது’ (மத்.5:10). இவற்றை யார் செய்வது? இந்த குழுவினர் மட்டுமே ‘நியாயத்திற்காக துன்புறவேண்டும்’ எனக் கூறப்படவில்லை. நீதிக்காக எவரும் துன்புற முன்வரலாம்! ஒர் அழைப்பு தரப்படுகிறது. பொது நன்மைக்காகத்தான் இழப்பு தேவைப்படுகிறது (1பேது.2:20). ஒரு தாய்மைப் பொருளாதாரம் என்பது அதுதான். அதனைக் குமரப்பா, நிலைத்த பொருளாதாரத்திற்கான அடித்தளம் என்கிறார். புத்தர் கூறும்போது துன்பங்களுக்கு காரணம் ஆசை என்றார். ஆனால் ஒரு பெண் பிரசவ வலிக்காகப் பயந்து திருமணம் செய்யாமல் இருந்துவிட்டால் துன்பம் நீங்கிவிடுமா? உலகில், இந்தியாவில் மாந்தர் திருமணம் செய்வதே வெறும் ஆசை தான் காரணம் எனலாமா? இயேசுநாதரைப் பொறுத்தவரை சில துன்பங்களுக்குப் பொருள் இருக்கிறது. அந்த துன்பத்தை நேர்மறையாக மாற்றுவது என்பதுதான் இயேசுவின் பாடம். ‘முதலில் அவர்கள் பேறுபெற்றவர்கள்’ எனப் பார்ப்பது அவசியம் (மத்.5). இங்கு சாபம் ஒரு பேறாக மாற்றப்படுகிறது. இழந்தவர் எல்லாம் இழந்தவரல்ல (யோ.12:42). துன்பத்தை படைப்பாற்றல் மிக்கதாக எப்படி மாற்றுவது? பவுலடியாரைப் பொறுத்தவரை துன்பத்தின் வழியே நற்பண்புகள் உருவாகின்றன எனப்பார்த்தார் (உரோ.5:34). ஒருவிதத்தில் இப்படிப்பட்ட தியாகிகள் புதைக்கப்படவில்லை, விதைக்கப் பட்டிருக்கின்றனர். சிலுவையைப்பற்றிய அருளுரைகள் தியாகிகளுக்கு வலிமையைத் தருகின்றன. மற்றவர்களுக்கு பைத்தியமாக உள்ளது (1கொரி.1:15). எனவே மற்றவர்கள் பார்வையில் நாம் வேடிக்கையானோம், பைத்தியக்காரரானோம் என்கிறார் பவுல் (1கொரி. 1:25, 4:9).

2. சிலுவை அதிகாரத்தின் கோரத்தை படம்பிடித்து, திரை விலக்கிக் காட்டுகிறது

அதிகார குவியலுக்கிடையே ஒருவித அழுகிய துர்நாற்றம் அடிக்கிறது என புரிந்தவர் பவுல் அடிகளார். கொலோ.2:14-ல் நமக்கு எதிரான ஒப்பந்த விதிகளை, கடன் பத்திரத்தை ஆண்டவர் அழித்துவிட்டார். அதிகாரத்தின் கோரத்தை சிலுவையில் ஆணி அடித்துவிட்டார் என்கிறார் பவுல். மற்றவர்கள் இயேசுவை சிலுவையில் அறைந்தனர் என்பதைவிட நம் கடன்களை, சாபங்களை, அவர் சிலுவையில் அறைந்து, அவற்றின் மீது வெற்றி சிறந்தார். அதிகாரத்தின் கோரத்தை சிலுவை திரை கிழித்துக் காட்டுகிறது என்கிறார் பவுல் அடிகளார். எவ்வளவு ஒரு கொடியவரை, போக்கிரியை காவல்துறை நேரடித் தாக்குதலில் சுட்டுச் சீரழித்தாலும், (சந்தனமர வீரப்பன், பிரபாகரனைப் போன்று ஒரு முடிவுக்கு தள்ளினாலும்,) தொடர்ந்து யாரும் அரசைப் பாராட்டுவதில்லை. மாறாக அதிகாரத்தின் மமதையை அது என்றும் படம்பிடித்துக் காட்டும். கொடூரக் கொலையும் அதிகாரத்தின் வெளிப்பாடே! இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப்போரின் வன்முறைகள் அரசு பயங்கரவாதத்தை திரைவிலக்கிக் காட்டுகிறது. எரிச்சலடையச் செய்கிறது. அதிகாரத்தின் துர்வாடையை வெளியரங்கமாக்குகிறது.

3. சிலுவை மரண பயத்தைப் போக்குகிறது

உடலைக் கொலை செய்து, ஆன்மாவைத் தொட முடியாதவர்க்கு பயப்பட வேண்டாம் (லூக்.12:4, மத்.10:28). ‘சாவே உன் கூர் எங்கே, பாதாளமே உன் வெற்றி எங்கே?(1கொரி.15:55). விவிலியத்தில் யோபுவும் இதைப்போன்ற வார்த்தைகளையே பயன்படுத்துவார் (யோபு 13:14-15,19:25-26). அந்த மனஉறுதி உடல்ரீதியான துன்பத்தைப் போக்குகிறது. ஆனால் சிலர் துன்பத்தை ஆன்மிகப்படுத்தி நியாயப்படுத்திவிடும் அபாயமும் உள்ளது என்பதை மறந்துவிடக்கூடாது. அதிக வைராக்கியமுடையோர்க்கு உடல் துன்பம் தெரிவதில்லை. இயேசு மற்றவர்களுக்காக வலியைத் தாங்கினார். புது நம்பிக்கையை அணிந்துகொண்டார். பயத்தைப் போக்கினார். அது போன்ற ஆற்றல் இயேசுவின் சீடர்களுக்கும் வந்தது. அவர்கள் சிலுவையைவிட கொடூரமான மரணங்களை சந்தித்தனர் (காண்க. நீர்க்குமிழிகள் பக்.74).

முடிவுரை:- கிறித்தவர்களில் பெருவாரியினர் இயேசுநாதரிடமிருந்து கற்றுக்கொண்டவைகளை பிற்காலத்தில் ஒரு விதத்தில் ஆன்மீகப்படுத்திவிட்டனர். ஆனால் ஏனையோர் இயேசுவிடமிருந்து விடுதலைக் கூறுகளை மட்டுமே தெரிந்தனர். ஒருமுறை கேரள மார்க்சிய கட்சிக் கண்காட்சியில் இயேசுவின் படத்தை புரட்சியாளர் கார்ல் மார்க்சின் அருகில் வைத்தனர். அந்த தைரியம் நமக்குகூட வந்ததில்லை. ஏனெனில் அவர்கள் இயேசுநாதரை எப்போதுமே ஒரு புரட்சிநாயகராகக் காண்கின்றனராம்! அதனை கேரள கிறித்தவர்கள் எதிர்த்தனராம்?


நல்லார்க்கு ஒருநாளும் சிலுவை முடிந்துவிடும் நிகழ்வு அல்ல. அது ஒரு தொடர் நிகழ்வு; அதுவே நாம் கொடுக்கும் சீடத்துவ விலை. பெரும்பாலும் ‘சிலுவை முடிந்துவிட்டது” எனக் கூறுபவர் மற்றவர்கள் மீது சிலுவை சுமத்துபவர் ஆகிவிடுகிறார். தொடர்ந்து விடுதலையடைந்து வர சிலுவை உதவுகிறது. சிலுவை ஒரு தொடர் நிகழ்வு விடுதலை பெற்றுவிட்டோம் என்பது ஒருவித போலித்தனம். இயேசு ஆட்டுக்குட்டியாக உலக தோற்றமுதல் அடிக்கப்படுகிறார் (திரு.வெளி.13:8). உலக தோற்றமுதல் சிலுவையில் அறையப்படுகிறார்.
எப்படிப்பட்ட விடுதலையை நாம் செய்ய வேண்டும்? இவ்வுலகில் பலிக்கடாக்களாக்கப்பட்டோர் விடுதலையடைவர் என்பதின் பொருள், அப்படிப்பட்டோர் சிலுவையைச் சுமக்க கடவுளால் வலுவூட்டப்படுகின்றனர் என்பதாகும். நமக்கு சிலுவை என்பது ஒரு புது அடையாளமாக, விடுதலைக் கருத்தியலாக இயேசுவால் கொடுக்கப்பட்டிருக்கிறது.

நிலைவாழ்வு என்பது மகிழ்வும், ஓய்வும், சொகுசும் மிகுந்த ஒரு வாழ்வல்ல, மாறாக அவ்வாழ்வு பொறுப்புகள் நிறைந்தவையாகும்.

சி.எஸ். லூயிஸ்

Painting courtesy Rev. Immanuel Paul Vivekanandh

சாலமன் விக்டஸ்
சாலமன் விக்டஸ்

அருட்பணியாளர்,
இறையியலாளர், இந்தியா