Differently Abled: Dignity and Dependence
திருமறை பகுதிகள்:
யாத்திராகமம் 4: 10 – 17
மத்தேயு 17 : 14 – 21
அப்போஸ்தலர் 3 : 1 – 10
#. உட்புகும் முன்…
# ஒருமுறை எங்கள் ஆலயத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகை நாட்களில் மாற்றுத் திறனாளிகள், எங்கள் வழிபாட்டில் பங்கு பெற்றிருந்தார்கள். அருளுரை ஆரம்பிக்கும் முன்பதாக அவர்களில் ஒருவர் நாங்கள் ஒரு பாடல் பாடுகிறோம் என்று கேட்டார். சரி பாடுங்கள் என்று அதற்கு ஏற்பாடு செய்தோம். அவர்கள் பாடின பாடல் எங்கள் திருச்சபையினுடைய விசுவாசத்தை அசைத்தது. அப்படி என்ன பாடல் என்கின்றீர்களா? கண்பார்வையற்ற அந்த பத்து பேர் பாடின பாடல் “கண்டேன் என் கண் குளிர கர்த்தனை இன்று கண்டேன் என் கண் குளிர..” என்ற கீர்த்தனை பாடல். அவர்கள் பாடின விதமும், உணர்ந்து பாடின முறையும், தாளம் தப்பாமல், மனனமாக, இசைந்து பாடிய பாங்கு அனைவருக்கும் ஒரு புதிய அனுபவத்தை தந்தது. என்றும் நினைவில் நீங்காத இடம் பெற்றன. புறக் கண்களோடு பார்த்து பழகின நமக்கு, அகக் கண்களோடு இயேசுவை கண்டோம் என்று அவர்கள் பாடல் வழியாக பகிர்ந்து கொண்ட நற்செய்தி என்றும் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது….
# ட்ராபிக் சிக்னலில் நிற்கும் போதெல்லாம், பார்வையற்ற ஒருவர் அல்லது இருவர் உண்டியல் குலுக்கி கொண்டே வருவார்கள். அதை பார்க்கும் பொழுதெல்லாம் கம்யூனிச தோழர்கள் எவ்வாறு உண்டியல் குலுக்கி வசூலித்து போராட்டத்தை நடத்துகிறார்களோ, அதே போல இவர்களும் தங்கள் வாழ்க்கை போராட்டத்தை நடத்துகிறார்கள் என்ற எண்ணம் தான் எழுகின்றது. ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளும் ஒரு போராளிகளே….
# நான் வளர்ந்த வால்பாறை பகுதிகளில், அன்றைய காலகட்டங்களில் ஒவ்வொரு எஸ்டேட்டுகளிலும் நற்செய்தி கூட்டங்கள் நடைபெறும். அப்பொழுதெல்லாம் அன்புக்குரிய திரு. ஏசையன் ஐயா அவர்கள் (கோவை திருமண்டலத்தைச் சார்ந்த அருள்பணி. யோசபாத் அவர்களின் தகப்பனார்), கண் பார்வையற்ற அவரும் அவருடைய குடும்பமும் ஹார்மோனியத்தோடு நற்செய்தியை பாடல் வழியாக நடத்துவார்கள். எஸ்டேட் மக்களுடைய வாழ்வில் விசுவாசம் பெருகுவதற்கும், திருச்சபை வளர்வதற்கும் அவர்களின் பங்கு அளவிட முடியாதது அதற்கு ஈடு எதுவும் கிடையாது…..
# “மாற்றுத்திறனாளிகள்” என்ற சொல்லை அறிமுகப்படுத்தி, அவர்தம் வாழ்வில் ஒளி ஏற்றி, அவர்களின் திறமை உலகமெங்கும் அறியச் செய்த, முத்தமிழ் அறிஞர். கலைஞர் அவர்களை நினைக்காமல் இருக்க முடியவில்லை…
# எங்கள் ஊரிலும் இன்றைய பீத்தோவான்கள்( மாற்றுத்திறனாளிகள்) கூரை வேய்ந்த வாகனங்களில் வந்து பாடுவார்கள், இசைப்பார்கள்…அதுவும் குறிப்பாக “மாதா உன் கோவிலில் மடிதீபம் ஏற்றினேன்..” என்ற பாடலை அவர்கள் இசைத்து, பாடுவதை கேட்கும் பொழுது “உருகாத நெஞ்சமும் உருகும், கரையாத நெஞ்சமும் கரையும், விசுவாசமும் பெருகும், பக்தியும் வளரும்….
# மாற்றுத்திறனாளிகள் என்று சொல்லும் போதெல்லாம் நாம் நினைவில் வருவது ஐடா ஸ்கடர் அவர்களும், ஹெலன் கெல்லர் அவர்களும், லூயி பிரயில் போன்றவர்கள் தான் நம் நினைவில் வருவர். என் மனதில் வால்பாறை பேருந்து நிலையத்தில் புல்லாங்குழல் வாசித்து மக்களை மகிழ்வித்த பார்வையற்ற அன்புக்குரிய ஐயா அவர்களும், எங்கள் ஆலயத்தில் ஒவ்வொரு ஆராதனைக்கும் முதலாவதாக வரும், நடக்க முடியாத திரு முத்துமாணிக்கம் ஐயா அவர்களும், கல்லூரி நாட்களில் NSS மூலமாக ஒருவருக்கு பரீட்சை எழுதினேன் அந்த மாணவி குளோரி அவர்களும், எங்கள் ஆலயத்தில் ஒவ்வொரு வழிபாட்டின் போதும் இசையின் வழியாக திருப்பணி ஆற்றும் திரு. ஏசுதாஸ் அவர்களும் மனதில் வந்து போகின்றனர்…
இன்றைய திருமறை பகுதிகள் வழியாக மாற்றுத்திறனாளிகள், திருமறையில் எவ்வாறு சித்தரிக்கப்பட்டுள்ளார்கள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பதை அறிய முற்படுவோம்…
1). இறைவனின் மீட்பு திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பார்வையாளர்கள் அல்ல பங்கேற்பாளர்கள்…(யாத்திராகமம் 4: 10 – 17)
திருமறை பல தலைவர்களை நமக்கு அடையாளம் காட்டியுள்ளது. அப்படிப்பட்ட ஒருவரில் மிகச்சிறந்த தலைவர் மோசே அவர்கள்….
எகிப்தில் பல நூறு ஆண்டுகள் அடிமைத்தனத்தில் வாழ்ந்த இஸ்ரவேல் சமூகம், தங்கள் அடிமைத்தனத்திலிருந்து இறைவனை நோக்கி முறையிட்டார்கள். அவர்களின் கூக்குரலை நான் கேட்டேன். அவர்களின் பாடுகளை நான் அறிந்தேன். அவர்கள் இடுகின்ற கூக்குரல் என் சன்னதியில் வந்து எட்டினது என்று கடவுள் மோசே இடம் முட்ச்செடி வாயிலாக உணர்த்துகின்றார்…
அடிமைப்பட்டு ஒடுக்குதலில் கிடந்த இஸ்ரவேல் சமூகத்தை விடுவிக்கும் திட்டத்தை மோசே இடம் ஆண்டவர் வலியுறுத்துகின்றார்…
இந்த உயர்ந்த திருப்பணிக்கு நான் உன்னை தெரிந்து கொண்டேன், உன்னை அனுப்புகிறேன், நீ போ என்று இறைவன் மோசே இடம் பணித்தார்….
மோசே ஆண்டவரிடம் நான் மந்த நாவும், திக்கு வாயும் உடையவனாக இருக்கிறேன், என்று தன் குறைகளை,தன் நிலையை எடுத்துரைக்கின்றார்…
மோசே கடவுளிடம் தன் குறைபாடுகளை எடுத்துக் கூறும் பொழுது கடவுள் மோசேயிடம் இருக்கும் திறன்களை கருத்தில் கொண்டு, தன் மீட்பு பணியில் மோசையை பணியமர்த்துகின்றார்…
நான் உன்னோடு இருக்கின்றேன் என்ற உறுதியை மோசே இடம் தந்த கடவுள், மாபெரும் விடுதலை பணியில் மோசேயை முன்னிறுத்தி தன் மக்களை விடுவிக்கின்றார்…
மோசே கடவுளிடம் தன் குறைகளை காண்பித்ததோடு சரி. ஆனால் ஒருபோதும் தன் குறைகளை மாற்றுவதற்கு அல்லது இதிலிருந்து என்னை விடுவியும் என்று ஆண்டவரிடம் கேட்கவில்லை இது அவரின் சிறப்பு இயல்புகளில் ஒன்று…
கடவுளின் படைப்பில் அனைவரும் சமமானவர்களே. இந்த உலகம் குறைபாடுகளை பார்க்கும் பொழுது கடவுள் அவர்களின் திறன்களை காண்கின்றார் அவைகளை வெளிப்படுத்துகின்றார். ….
தகுதி உள்ளவர்களை ஆண்டவர் அழைப்பதில்லை மாறாக அழைத்து தகுதிப்படுத்துகின்ற ஆண்டவர் என்பதை மோசே வழியாக திருமறை நமக்கு கற்பிக்கின்றது…
மாற்றுத்திறன் படைத்த மோசையை கடவுள் மாண்போடு நடத்துகின்றார். அவரோடு இறைவன் தன்னை சார்பு உடையவராக இணைத்துக் கொள்கின்றார்…
கடவுள் காட்டுகின்ற இந்த வழி உலகம் அறிந்து கொள்ள வேண்டிய வழி. மீட்பு திட்டத்தில் மோசே, சிம்சோன் போன்றோர் கடவுளின் கருவிகளாக பயன்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள அழைக்கப்படுகின்றோம்…
மோசேயை போன்ற பலரும் திருமறையில் பார்வையாளராக அல்ல மாறாக கடவுளின் மீட்பு திட்டத்தில், விடுதலைப் பயணத்தில் பங்கேற்பாளர்களாக கடவுள் அவர்களை பயன்படுத்தினார், பயன்படுத்துகின்றார் என்ற புதிய வரலாறை நாம் எழுதுவதற்கு
நாம் தெரிந்து கொள்ளபட்டிருக்கிறோம்…
உலக வரலாற்றில் மாபெரும் தலைவர்களாக அடையாளம் காட்டப்பட்டுள்ளவர்கள், பெரும்பாலானோர் “நா வன்மை உடையவராக, வீரதீர செயல்கள் புரிந்தவராக… காட்டப்படுவர். ஆனால் கடவுள் இதற்கு நேர் எதிராக, “மந்த நாவும் திக்கு வாயும் உடைய ” மோசே அவர்களை மீட்பின் கருவியாக, ஒரு மாபெரும் விடுதலை போராளியாக, தலைவராக இந்த உலகத்திற்கு காட்டியுள்ளார்…
# மாற்றுத்திறன் உடையவர்களை கடவுள் எவ்வாறு இனம் கண்டு கொண்டாரோ அதேபோல இனம் கண்டுகொள்ள இந்த திருமறை பகுதி நம்மை அழைக்கின்றது.
# மாற்று திறனாளிகளை கடவுள் எவ்வாறு மாண்போடு தனது கருவியாக பயன்படுத்தினாரோ அதைப்போல அவர்களை நடத்துவதற்கு இந்த திருமறை பகுதி நம்மை வழிகாட்டுகின்றது.
# கடவுள் எவ்வாறு மாற்றுத்திறனாளிகளோடு தன்னை இணைத்து சார்பு உடையவராக தன்னை உலகத்திற்கு வெளிப்படுத்தினாரோ அப்படி நம்மை வெளிப்படுத்த இந்த திருமறை பகுதி நமக்கு நெறிமுறைகளை வகுக்கின்றது.
# வெறும் பார்வையாளர்களாக அல்ல பங்கேற்பாளர்களாக நமது திருச்சபை இயக்கத்தில் மாற்றுத்திறனாளிகளை முன்னிறுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம் என்பதை இது நமது சுட்டிக்காட்டுகிறது…
2). வந்து விட்ட இறை ஆட்சியில் மாற்றுத்திறனாளிகள் அடிமைகள் அல்ல அடையாளங்கள்… (மத்தேயு 17 : 14 – 21)
நீண்ட நெடிய உலக வரலாற்றில் அடிமைச் சமூகம் என்ற ஒரு சமூகக் கட்டமைப்பு, கட்டமைக்கப்பட்டு அது தக்க வைக்கப்பட்டு கொண்டே இருந்து வந்துள்ளது…
சாதி, சமய, இன, பொருளாதார, அரசியல், நிறம், மொழி, பண்பாடு, கலாச்சாரம் போன்ற பல காரணிகளால் ஒரு சமூகம் விளிம்பு நிலையிலேயே வாழ நிர்பந்திக்கப்பட்டு வந்திருக்கின்றார்கள். இவர்கள் அடிமை சமூகமாகவே புறந்தள்ள பட்டிருந்தார்கள். இதை மாற்றுவதற்கு முயலாமல் அதை காப்பதிலேயே உயர்குடி சமுதாயமும் , சமயங்களும், சமய தலைவர்களும், அரசியல்வாதிகளும் முனைப்போடு இருந்து வந்துள்ளார்கள் ….
இந்த விளிம்பு நிலை சமுதாயத்தில் இன்னும் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளவர்கள் இந்த மாற்றுத்திறனாளிகள் எனும் அடிமை சமூகம் …
சமயத்தின் பெயராலும், கர்ம வினை கோட்பாடுகளாலும், முற்பிறவியில் செய்த பாவங்கள் என்ற கருத்துகளாலும் உடலில் ஊனமுற்றோரை பாவமாக, சாபமாக, கடவுளின் தண்டனையாக கருதப்பட்ட காலம் அன்று தொட்டு இன்றும் இருந்து வருகிறது….
தன் நெருங்கிய உறவு முறை திருமணம் போன்ற நிகழ்வுகளினாலும், சொத்துக்கள் பிறருக்கு செல்லக்கூடாது என்று நெருங்கிய உறவு திருமண முறைகளினாலும் அங்கவீனம் உடையவர்களை சமூகம் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது….
பிறப்பாலும், நோய்களினாலும், விபத்துகளினாலும் உடலில் ஊனமுற்றோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அவர்களைப் பற்றிய கரிசனையும், அன்பும், மதிப்பும் சமூகத்தில் அவர்களுக்கு உரிய இடமும், மாண்பும் மறுக்கப்பட்டு கொண்டே வருகிறது…
திருமறை பகுதி காட்டுகின்ற இந்த மனிதர், பேச முடியாதவர், பிறவியிலேயே குறைபாடு உடையவர். விளிம்பு நிலையில் இருந்த அந்த மனிதரை ஆண்டவர் கண்டு கொள்கின்றார். அவருக்கு மருத்துவ உதவி செய்கின்றார். அவரை குணமாக்குகின்றார்…..
இயேசு கிறிஸ்து தான் வாழ்ந்த நாட்களில், இது போன்ற பல மாற்றுத் திறனாளி மக்களுக்கு அவர் பார்வையை தந்தார். நடக்க இயலாதவர்களுக்கு நடக்கும் திறனை தந்தார். கேட்கும் திறன் அற்றவர்களுக்கு கேட்கும் ஆற்றலை வெளிப்படுத்தினார்….
ஏன் இவ்வாறு அற்புதங்களை செய்கிறீர்கள் என்று கேட்கும் பொழுது ஆண்டவர் இயேசு கிறிஸ்து இது வெறும் அற்புதங்கள் அல்ல இவைகள் “அடையாளங்கள்” என்பதை சுட்டிக் காட்டுகின்றார்….
இறை ஆட்சி வர இருக்கின்றது என்ற நம்பிக்கையோடு இருந்த மக்களிடத்திலே, ஆண்டவர் இயேசு கிறிஸ்து “இறை ஆட்சி வந்துவிட்டது” என்பதை பறைசாற்றும் அடையாளங்களாக, இந்த அற்புதங்கள் இருக்கிறது என்பதை ஆண்டவர் சுட்டிக் காட்டுகின்றார் (Realised Eschatology)….
பார்வையற்றோர் பார்வை பெறுகின்றார்கள், நடக்க முடியாதவர்கள் நடக்கின்றார்கள், மரித்தவர்கள் உயிரோடு எழும்புகிறார்கள் இவைகள் எல்லாம் இறை ஆட்சி வந்துவிட்டது, துவங்கி விட்டது என்பதின் அடையாளங்கள் என்பதை ஆண்டவர் இயேசு கிறிஸ்து தெளிவாக எடுத்துக்காட்டுகின்றார்….
இயேசு கிறிஸ்து இந்த பார்வையற்ற, பேச முடியாத மனிதருக்கு செய்த அற்புதம் ஒரு அடையாளம். அது இறைவனின் ஆட்சி துவங்கிவிட்டதின் அடையாளங்கள் என்பதை ஆண்டவர் இந்த பகுதி வழியாக வலியுறுத்துகின்றார்….
இந்த உலக ஆட்சியில் அடிமை சமூகம் இருந்து கொண்டே இருக்கும் ஆனால் இறை ஆட்சி என்பது அடிமைகள் அற்ற, மாண்போடு மனிதரை மனிதராக மதிக்கும் ஒரு சமூக அமைப்பு, சமத்துவ சமூகம், அன்பின் கூட்டுறவு….
ஆண்டவர் இயேசு கிறிஸ்து, இந்த பார்வையற்ற மனிதருக்கு, பேச முடியாத நபருக்கு செய்த இந்த அற்புதம் ஒரு அடையாளமே.
# இந்த அடையாளம் என்பது இறை ஆட்சி துவங்கி விட்டது என்பதை வலியுறுத்துகின்றது.
# இறை ஆட்சியில் மாற்றுத்திறனாளிகள் மாண்போடு நடத்தப்படுவார்கள் என்பதை காட்டுகின்றது…
# மாற்றுத்திறனாளிகளோடு இறைவன் சார்ந்து இருக்கின்றார், அவர்களோடு உடன் இருக்கின்றார் என்பதை சுட்டிக் காட்டுகின்றது…
# இறை ஆட்சியில் அடிமைகள் அற்ற ஒரு சமூகம் அற்புதங்களினாலும் அடையாளங்களினாலும் கட்டமைக்கப்பட்டு வருகிறது என்பதை வலியுறுத்துகின்றது…
# இயேசு கிறிஸ்துவின் இந்த அற்புதம் இறை ஆட்சியில் அனைவரும் சமம் என்பதை முன் நிறுத்துகின்றது…
# இறை ஆட்சியில் கடவுளின் முன்னுரிமை மாற்றுத் திறனாளிகளுக்குரியது என்பதை இயேசு கிறிஸ்துவின் அற்புதம் மேலும் வலியுறுத்துகிறது…
# இறை ஆட்சியில் விளிம்பு நிலை மக்கள் மையத்தை நோக்கி நகர்வது தடுக்க இயலாது என்பதை இந்த அற்புத வழியாக இயேசு கிறிஸ்து வலியுறுத்துகின்றார்…
இயேசு கிறிஸ்துவின் அற்புதங்கள் வெறும் அற்புதங்களாக மட்டும் பார்க்கப்படுவதை தவிர்த்து, அவை இறை ஆட்சியின் அடையாளங்கள், இறை ஆட்சி இயேசு கிறிஸ்துவில் துவங்கிவிட்டது என்பதின் அடையாளங்களாக நாம் கருத்தில் கொண்டு, இயேசுவின் சிந்தையோடு நம்மை இணைத்துக் கொள்ள இந்த திருமறை பகுதி வலியுறுத்துகின்றது….
3). நாசரேத் ஊர் நசரேயர் உறவில் மாற்றுத்திறனாளிகள் சார்ந்து இருப்பவர்கள் அல்ல சேர்ந்து இருப்பவர்கள்… (அப்போஸ்தலர் 3 : 1 – 10)
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உயிர்பிக்குப் பின்பு, இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் உயிர்படைந்தார்கள். முடங்கி கிடந்தவர்கள் ஏற்றம் கண்டார்கள். ஊமையாகி போனவர்கள் உரக்க பேசினார்கள்…..
இயேசுவின் சீடர்களில் பேதுருவும் யோவானும் இயேசு கிறிஸ்துவின் இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றார்கள். உரங்கொண்ட சீடர்களை உருவாக்கினார்கள்….
பேதுருவும் யோவானும் எருசலேம் தேவாலயம் செல்கின்றார்கள். அப்படி செல்லும் பொழுது அலங்கார வாசலருகே, ஒரு யாசித்து வாழுகின்ற, பிச்சை எடுத்துப் பிழைக்கின்ற ஒரு மனிதரை காண்கிறார்கள்…
அந்த மனிதரும் பிறவியிலேயே நடக்க முடியாதவர் பிறரை சார்ந்து வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டிருந்தார் என்பதை இந்த திருமறை பகுதி நமக்கு தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது….
அவரை பிச்சை எடுக்க வைத்து அவர் ஈட்டும் வருமானத்தின் வழியாக யாரோ ஒருவர் வாழ்வதற்கு அவரை அடிமையாக பயன்படுத்தப்பட்டு இருப்பதையும் இந்த திருமறை நமக்கு தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது….
பேதுருவும் யோவானும் வழி கடந்து போகும் பொழுது அந்த மனிதர் இவர்களிடத்தில் யாசிக்கின்றார். வாழ்வதற்கு நிதி உதவி செய்யுங்கள் என்று கேட்கின்றார்….
பேதுருவும் யோவானும் அந்த மனிதரிடம் சொல்லுகின்ற பதில் ஆச்சரியத்தை உண்டாக்குகிறது. வெள்ளியும், பொன்னும் எங்கள் இடத்தில் இல்லை. உனக்கு உதவி செய்வதற்கு எங்களிடம் பணம் இல்லை, நிதியும் இல்லை, பொருளாதார வசதியும் இல்லை என்று கூறுவதின் அர்த்தத்தை அடுத்த திருமறை பகுதி நமக்கு விளக்கி காட்டுகின்றது…
எங்களின் குருநாதர் இயேசு கிறிஸ்து, உன்னை சந்திக்க நேர்ந்திருந்தால் உனக்கு பண உதவி தந்து மேலும் உங்களை அடிமையாகவே வாழ, சார்ந்தே வாழ விடமாட்டார்…என்ற உணர்வை பேதுருவும் யோவானும் தங்கள் செயலால் பிரதிபலிக்கின்றனர்…
வெள்ளியும், பொன்னும், பண உதவியும் உன்னை மேலும் அடிமையாக்கும். உன்னை சார்ந்து வாழவே அது வழி வகுக்கும் எனவே நீ எழுந்து நட என்று அற்புதங்களால் அவருக்கு மறு வாழ்வளிக்கின்றார்கள்…
பேதுருவும் யோவானும் உண்டாக்கிய சீர்திருத்தங்களில் ஒன்று இந்த அற்புதத்தில் மறைந்து இருக்கிறது. அது சார்ந்து இருப்பவர்களை சமுதாயத்தில் சேர்ந்து வாழ்வதற்கு வழிவகை செய்தது…
பேதுருவும் யோவானும் தங்கள் குருவாகிய நாசரேத் ஊர் நசரேயனாகிய இயேசு என்பவரின் வழித்தோன்றல்கள், இயேசுவின் சிந்தையை அணிந்தவர்கள், இயேசுவின் செயல்பாட்டாளர்கள் என்பதை இந்த அற்புதத்தின் வழியாக உலகிற்கு தங்களை வெளிப்படுத்தி இருக்கின்றார்கள்…
# பிச்சை எடுக்க வைத்து பிழைக்கின்ற ஒடுக்கும் சமூகத்திற்கு எதிராக பேதுருவும் யோவானும் ஒன்றாக அணிவகுத்து நின்றார்கள்..
# வெள்ளியும் பொன்னும் இந்த உலகத்தில் மாற்றங்களை கொண்டு வராது. அது மேலும் பணக்காரர்களை பணக்காரர்களாக்கும், ஏழைகளை ஏழைகள் ஆக்கும் என்ற கருத்தியலில் ஒன்றிணைந்து நின்றார்கள்…
# சார்ந்து இருக்கும் மாற்றுத்திறனாளிகள் சமூகத்தை, சமூகத்தில் சேர்ந்து இருக்கும் சமூகமாக உருவாக்குவதற்கு இருவரும் களத்தில் இணைந்து பணியாற்றினார்கள்…
# பேதுருவும் யோவானும் மாற்றுத்திறனாளிக்கு மறுவாழ்வு கொடுத்து தங்களோடு இணைத்துக் கொண்டு ஆலயத்தில் வழிபடுவதற்கு உண்டான உரிமையை மீட்டெடுத்து கொடுத்தார்கள்…
# குறைபாடு உடையவர், மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் மறுமலர்ச்சியையும் சமூக மாற்றத்தையும் அவர்கள் ஒன்றாக இணைந்து வடிவமைத்தார்கள்…
# திருச்சபை என்ற மாபெரும் இயக்கத்தில் மாற்றுத்திறனாளிகளின் உணர்வுகளுக்கும், உறவுகளுக்கும் பேதுரு மற்றும் யோவானும் மதிப்பையும் மாண்பையும் வழங்கினார்கள்…
# இயேசுவின் சிந்தையை கொண்டவர்கள், இயேசு கிறிஸ்துவை போல அற்புதங்கள், அடையாளங்களை செய்ய முடியும். அந்த அற்புதங்களும், அடையாளங்களும் இறை ஆட்சியை இம்மண்ணில் நிறுவுவதற்கு உதவியாக இருக்கும் என்பதை வலியுறுத்துகின்றார்கள்…
பேதுருவும் யோவானும் செய்த இந்த அற்புதங்கள், இயேசு கிறிஸ்துவின் அன்பை பிரதிபலிக்கின்றது. இயேசு கிறிஸ்து விரும்பின சீடத்துவத்தை வெளி காட்டுகின்றது. இறை சித்தத்தை செயல்படுத்துவதற்கு திருச்சபையை வழிநடத்துகின்றது…
#. நிறைவாக…
# மாற்றுத்திறனாளிகள் பார்வையாளர்கள் அல்ல பங்கேற்பாளர்கள்… அடிமைகள் அல்ல அடையாளங்கள்… சார்ந்து இருப்பவர் அல்ல சேர்ந்து வாழ வேண்டியவர்கள்…
# இயேசு கிறிஸ்துவின் நட்பு வட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உயர்ந்த இடம் உண்டு. நம்முடைய நட்பு வட்டத்தில் அவர்களுக்கு உன்னத இடத்தை கொடுக்க அழைக்கப்பட்டிருக்கிறோம்…
# மாற்றுத்திறன் படைத்தோர் நமக்கு தந்த மருத்துவமனைகளையும், நிறுவனங்களையும், ஆலயங்களையும், படைப்புகளையும் பேணி பாதுகாத்திடுவோம். அவர்களின் உயர்ந்த பங்களிப்பிற்கு நாம தடை கற்களாக அல்ல படிக்கற்களாக இருந்திடுவோம்….
# ஒவ்வொரு திருச்சபையிலும் மாற்று திறனாளிகளுக்கான இருக்கைகளையும், அவர்களுக்கான வாய்ப்புகளையும், தலைமைத்துவத்தையும் உருவாக்கி புதிய சீர்திருத்தத்தை உருவாக்கிடுவோம் …
# பார்வை அற்றோருக்கு விழியாக… நடக்க இயலாதவருக்கு தோளாக… செவித்திறன் இல்லாதவருக்கு திறன் ஊக்கியாக… பேச இயலாதவரின் குரலாக இருந்திடுவோம்….
இறைவனின் ஆசி என்றும் நம்மோடு இருப்பதாக…. தொடர்ந்து இணைந்திடுவோம்… திருமறை கற்றிடுவோம்… இறை வழி சென்றிடுவோம்…
இறைப்பணியில்
உங்களோடு