8 ஒக்டோபர் 2023

அங்கவீனத்தன்மையுள்ள மக்களினுடைய ஞாயிறு
மூளைவளர்ச்சி குறைந்த மக்களினுடைய ஞாயிறு
வாழ்க்கையின் முழுமையைத் தேடும் ஞாயிறு

யோவான் 5:1-9

• உலகில் சிறப்பாக ஆசியாவில் 600 மில்லியன் மக்கள் அங்கவீனத்தன்மையுள்ளவர்களாகக் காணப்படுகின்றார்கள். பொதுவாக இவர்களை அங்கவீனர்கள் எனவும் அதாவது, செயற்படும் தன்மை அற்றவர்கள் என அழைப்பர். மேலும் ஒரு சிலர் இவர்களை மாற்றுத்திறனாளிகள் என அழைப்பர். ஏனெனில் இவர்களிடம் ஏனைய சிறப்புத் திறமைகள் காணப்படுவதனால் இப்பெயர் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனினும், இன்றைய உலகில் பொதுவாக இவர்களை அங்கவீனத்தன்மையுள்ள மக்கள் என்ற பெயரினாலேயே அழைப்பார்கள். அதாவது, Persons with disability இங்கே ஆள்தன்மை முக்கியத்துவப்படுத்தப்படுவதாக காணப்படுகின்றது.

• விடுதலைப்பயணம் – யாத்திராகமம் 4:10-17ல், சிறப்பாக இந்த மக்களை பொறுத்தவரையிலே அங்கவீனத்தன்மையுள்ள மக்களை படைத்தவர் இறைவன் என்ற கருத்து மோயீசனுக்கு அல்லது மோசேக்கு வெளிப்படுத்தப்பட்டிருந்தாலும் உண்மையில் கடவுள் படைப்பில் இவ் அங்கவீனத் தன்மை காணப்படவில்லை என நாம் பார்க்கின்றோம். மேலும், திருவெளிப்பாடு – வெளி 21:1-7ல், புதிய வானம் புதிய பூமி பற்றி கூறுப்படுகின்ற வேளையிலும் அங்கவீனத்தன்மையுள்ள மக்களைப் பற்றி எதுவும் கூறப்படுவதில்லை. எனவே, படைப்பிற்கும் இறுதியியலுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியிலேயே இவ் அங்கவீனத்தன்மை ஏற்படுவதை நாம் பார்க்கின்றோம்.

• திருப்பாடல் – சங்கீதம் 37ல், அங்கவீனத்தன்மைக்கும் பாவத்திற்கும் இடையிலே தொடர்பு இல்லை என்ற கருத்து வலியுறுத்தப்படுகின்றது. பொதுவாக யூதர்கள் மத்தியில் அங்கவீனத்தன்மைக்கும் பாவத்திற்கும் இடையிலே தொடர்பு இருக்கின்றது என்ற கருத்து ஆங்காங்கு காணப்படுகிறது. எனவேதான், யோவான் 9:1-5ல், பிறவியிலே பார்வையின்றி பிறந்தவன் இவன் செய்த பாவமா அல்லது இவனை பெற்றவர்கள் செய்த பாவமா என சீடர்கள் இயேசுவிடம் வினாவியபோது அவர் பாவத்துக்கும் இவனுக்குமிடையில் தொடர்பில்லை. மாறாக, இறை மாட்சி வெளிப்படும்படியாகவே இவைகள் நடைபெற்றன எனக் கூறுகிறார். எனவே, இதற்கூடாக தனிப்பட்ட பாவமல்ல சமூகப் பாவமே இப்பிறப்புக்குக் காரணம் என நாம் பார்க்கலாம்.

• 2 கொரிந்தியர் 12:1-10ல், பவுல் தன்னிடத்தில் காணப்பட்ட முற்களை அகற்றுமாறு இறைவனிடம் மூன்று முறை மன்றாடியதாகவும் ஆனால் கடவுள் அவரை நோக்கி, “என் கிருபை உனக்குப் போதும்” எனக் கூறுகின்றார். எனவே, இங்கு கடவுள் அளிக்கும் அற்புதத்தைவிட கிருபை மேலானதாகும். எனவே, அங்கவீனத்தன்மையுள்ள மக்கள் இறைவனிடமிருந்து புதுமையை எதிர்பார்க்கின்ற அதேவேளை கடவுளின் கிருபை எங்களோடிருக்கின்றது. அது புதுமையைவிட மேலானது என்ற செய்தியை ஏற்றுக்கொள்ள அழைக்கப்படுகின்றார்கள்.

• யோவான் எழுதிய நற்செய்தி 5ம் அதிகாரத்தில், 38 வருடங்கள் பெதஸ்தா குளத்தருகே உட்கார்ந்திருந்த முடக்குவாதமுடைய ஒரு மனிதனை இயேசு குணப்படுத்தியதை நாம் பார்க்கின்றோம். இங்கு அந்த மனிதனுக்கு யாருமே உதவி செய்ய ஆயத்தமற்றவர்களாக இருந்தார்கள். இயேசு அவனிடத்தில் சென்று அவனுக்கு விடுதலை அளிக்கின்றார். எனவே, அதேவகையில் இன்றும் அங்கவீனத்தன்மையுள்ள மக்கள் விடுதலைக்காக காத்திருக்கின்றார்கள். அவர்கள் மக்கள் வருவார்கள். யார் எங்களை விடுதலை செய்வார்கள் என்று பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். எனவே, அவர்களுக்கான அறிவூட்டல், விழிப்புணர்வு வழங்கல், அவர்களுக்கு வேண்டிய விடுதலையை வழங்கல் போன்ற பல காரியங்களுக்காக அவர்கள் இன்று ஏங்கிக்கொண்டே இருக்கிறார்கள். எனவே, அன்று முடக்குவாதமுற்ற மனிதனை இயேசு குணமாக்கியதுபோல இன்றும் நாங்கள் அங்கவீனத்தன்மையுள்ள மக்களுக்கு ஆறுதலாக, உற்சாகமளிப்பவர்களாக, விடுதலையாளர்களாக, ஏற்றுக்கொள்பவர்களாக மாறுவோமாக.

ஆக்கம் : அற்புதம்