25 ஜூன் 2023

சீடத்துவமும் சான்று பகருதலும்
யோவான் 3:22-30

திருத்தூதர்பணிகள் – அப்போஸ்தலர் 1:8ன்படி, தூயஆவியர் உங்களிடத்தில் வரும்போது, நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும் சமாரியாவிலும் உலகின் இறுதிவரை எனக்கு சான்று பகருங்கள் என ஆண்டவரின் கட்டளையை நாம் பார்க்கின்றோம். எனவே, சீடத்துவத்தின் இறுதிநிலை இறைவனுக்கு எமது வார்த்தையாலும் வாழ்க்கையாலும் சான்று பகர்வதே ஆகும். இச்சான்றுபகர்தலின் இறுதியாக மரணமும் எமக்கு ஏற்படலாம்.

2 அரசர் – 2 இராஜாக்கள் 2ம் அதிகாரத்தில், எலியாவின் விண்ணேற்பை நாம் பார்க்கிறோம். பூவுலகத்தில் அவர் பகிர்ந்துகொண்ட தூய்மையான வாழ்வு, நீதியான வாழ்வு அவர் விண்ணேற்றம் அடைவதற்கு காரணமாக அமைந்திருந்தது. விண்ணேற்றம் அடையும்போது, எலியா தனது சீடனாகிய எலிசாவை பலப்படுத்தி இறைவல்லமையை அவருடன் பகிர்ந்து கொள்கின்றார். அதாவது, சீடத்துவத்திற்கு ஏற்ற வகையில் அவரை பலப்படுத்துகின்றார்.

திருப்பாடல் – சங்கீதம் 119ல், இறைவார்த்தையை கற்றுக்கொள்ளுதல் சீடத்துவத்தின் மையமாகும். 2 தீமோத்தேயு 2:16-18ல், வேதவாக்கியங்கள் அனைத்தும் கற்பிப்பதற்கும் போதிப்பதற்கும் நீதி வழியில் எம்மை நடத்திச் செல்லும் கருவிகளாக இருக்கின்றன. எனவே, இதனொளியில் கற்றுக்கொள்ளுதல் சீடத்துவத்தின் ஓர் அடையாளமாகும். யோவான் 3:1-6 வரையுள்ள பகுதியில், நிக்கோதேமுகூட கற்றுக்கொள்வதற்காக இயேசுவிடத்தில் வருகின்றார்.

நற்செய்தி வாசகத்தில் யோவான் 3ம் அதிகாரத்தில், சீடத்துவத்தின் அடையாளச் சின்னமாக திருமுழுக்கு காணப்படுகிறது. திருமுழுக்கின் ஊடாகவும் நாம் இறைவனுக்கு சான்று பகர்கின்றோம். தூய ஆவியர் வருகையின்போது, திருத்தூதர்பணிகள் – அப்போஸ்தலர் 2:38ம் வாக்கியத்தில், பேதுருவின் உரையை அடுத்து முதலில் மூவாயிரம் பேரும் பின்னர் ஐயாயிரம் பேரும் திருமுழுக்கு பெறுகின்றனர். அதற்கூடாக சீடர்கள் சீடத்துவத்தைப் பெற்று சான்று பகர்ந்தனர்.

மத்தேயு 28:19,20ல், நீங்கள் உலகமெங்கும் புறப்பட்டுச் சென்று அனைத்து மக்களையும் சீடராக்கி அவர்களுக்கு திருமுழுக்கை அளியுங்கள் என்று கூறும் இயேசுவின் கட்டளையை மறந்துவிட முடியாது. சீடத்துவத்தினூடாக அவருக்கு சான்று பகர்வது மிக அவசியமாகின்றது. எனவே, இயேசுவின் உண்மையான சீடர்களாக மாறி அவருக்கு சான்று பகர எங்களை நாங்கள் அர்ப்பணிப்போமாக.

ஆக்கம் : அற்புதம்