அறிமுகம்


2022ம் ஆண்டை நிறைவு செய்து 2023ம் ஆண்டிற்குள் காலடி
எடுத்து வைப்பதற்கு கடவுள் எமக்கு கிருபை அளித்துள்ளார். அதாவது,
தகுதியற்றவர்களாகிய எம்மீது கடவுள் தமது அன்பை பொழிந்துள்ளார்.
எனவே, புதிய வருடத்தில் நாம் எதை செய்ய வேண்டும் என்பது, பலரது
கேள்வியாகும். எனவே, இந்த புதிய வருடத்தில் பின்வரும் காரியங்களை
கடவுளின் நாமத்திற்கு மகிமையாகவும் மற்றவர்களின் நன்மைக்காகவும், கடவுளின் அருளோடு நாம் செய்ய முற்படுவோமாக.

1. இறையாசியை பிறருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


புதிய வருடத்தில் நாம் அனைவரும் கடவுள் எம்மை அசீர்வதிக்க
வேண்டுமென விரும்புகின்றோம். (ஆதியாகமம் – தொடக்கநூல் 12:1-3)
கடவுள் ஆபிரகாமை அழைத்து, “உன்னிமித்தம் பூமியில் உள்ள மக்கள்
அனைவரும் ஆசீர்வதிக்கப்படுவார்களாக” எனக் கூறினார். அதாவது, “நீ
மற்ற மக்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பாயாக” என கூறினார். இதன்படி, கடவுள் எம்மை இப்புதிய வருடத்தில் ஆசீர்வதிக்கும்போது நாம் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக வாழ முற்படுவோமாக. மேலும், மாற்கு 7:24-30 வரையுள்ள பகுதியில் கானானியப் பெண்மணி இயேசுவை நோக்கி, முதலில் பிள்ளைகள் சாப்பிடட்டும். அத்துடன், “நீர்
பிள்ளைகளை ஆசீர்வதித்து மிகுதியான ஆசீர்வாதம் இருக்குமே என்றால், என்னை ஆசீர்வதியும்.” இதேபோன்று நாம் கடவுளை நோக்கி, “கடவுளே முதலில் உலகமக்களை ஆசீர்வதியும் நீர். பின்னர், என்னை ஆசீர்வதியும்” என்ற உயரிய ஆன்மீகத்தை கற்றுக்கொள்ள முற்படுவோமாக.

2. கடவுளின் தேவையை புரிந்துகொள்வோமாக

நாம் அனைவரும் எமது இல்லங்களில், மன்றாடுவதற்காக
கடவுளிடம் செல்கின்றோம். எமது மன்றாடல்களில் பெருமளவு
சந்தர்ப்பங்களில் நாம் எமது தேவைகளை மாத்திரம், கடவுளிடம்
ஒப்புக்கொடுக்கின்றோம். இதனையே, ஏசாயா 6:1-8ல் நாம்
காண்கிறோம். ஏசாயா, உசியா அரசன் மரணமடைந்த பின்னர், அரசியல் சூழ்நிலை தொடர்பாக இறைவனிடம் மன்றாட ஆலயத்திற்கு
செல்கின்றான். அங்கு அவன், தன்னுடைய மன்றாடலை இறைவனிடம்
கூறும் வேளையில் இறைவன் தன்னுடைய இதயத்தை திறந்து
ஏசாயாவுடன் பேசுகின்றார். அதாவது, யாரை அனுப்புவேன்? யார் நமது
காரியமாக போவார்? இதுவே, இறைவனுடைய விருப்பமாகும்.
அப்பொழுது, ஏசாயா இதோ நான் இருக்கின்றேன். என்னை அனுப்பும்
எனக்கூறினார். இதன்படி, எமது மன்றாடல்களில் எப்பொழுதும் நாம்
எங்களுடைய வேண்டுதல்களை நாம் கூறிக் கொண்டிருக்காமல் மாறாக, இறைவனின் இதயத்துடிப்பை புரிந்துகொள்ள அழைக்கப்படுகின்றோம். மேலும், இறைவனின் திட்டத்தில் நாம் இணைந்து கொள்ளாமல் மாறாக, எமது திட்டத்தில் இறைவனை இணைந்து கொள்ளும் என கேட்காதிருப்போமாக. இதனையே, இயேசு செல்வந்த வாலிபனிடம் வேண்டிக் கொண்டார் (மாற்கு 10:17-22). ஆகவே, இப்புதிய வருடத்தில் மன்றாடல், இறைசித்தம் போன்றவற்றைக் குறித்து புதிய தெளிவான பார்வையை பெற்றுக் கொள்வதற்கு முயற்சிப்போமாக.

3. புதுமைகளைக் குறித்த புதிய பார்வை

நாம் அனைவரும் இறைவன் எமக்கு பலவிதமான
குறைபாடுகளிலிருந்து விடுதலை தரவேண்டுமென இறைவனிடம்
மன்றாடுகின்றோம். பல சந்தர்ப்பங்களில் எங்கள் மன்றாடல்கள்
கேட்கப்பட்டு பதில் கிடைக்கின்றது. மாறாக, வேறு சில சந்தர்ப்பங்களில் நாம் எதிர்ப்பார்க்கும் பதில்கள் கிடைக்கப் பெறுவதில்லை. மாறாக, மாற்றுப் பதில்கள் எமக்குக் கிடைக்கின்றன. அவற்றையும் எமது மன்றாடல்களுக்கான பதில் என ஏற்றுக் கொள்ளும் மனநிலை எமக்கு வேண்டும். குறிப்பாக, 2 கொரிந்தியர் 6:9லே பவுல் தன்னிடமுள்ள ஓர் முள்ளு அகல வேண்டுமென மன்றாடுகின்றார். அதனால், கடவுள் அவரை நோக்கி, “என் கிருபை உனக்குப் போதும். உன் பலவீனத்தில் என் பலன் பூரணமாக விளங்கும்” எனக் கூறுகின்றார். இது மன்றாடலுக்கான ஓர் மாற்றுப் பதிலாகும். இதனை ஏற்றுக்கொள்ள நாம் பழகிக் கொள்ளவேண்டும். மேலும், மாற்கு 15:34-35ல் ஆண்டவர் இயேசு சிலுவையில் தொங்கும்போது, “என் தேவனே, என் தேவனே, ஏன்
என்னைக் கைவிட்டீர்?” என பிதாவை நோக்கி மன்றாடினார். ஆனால்,
பிதாவானவர் இம்மன்றாடலுக்கு மௌனமாக இருந்தார். மௌனமாக
இருத்தலும், இன்னுமோர் வகையான பதிலாகும். எனவே, எங்கள்
மன்றாடல்களுக்கு கடவுள் மௌனமாக இருக்கின்றார் என்றால் அதுவும்
ஒருவகையான பதிலாகும். எனவே, இப்பேர்ப்பட்ட மாற்றுப்
பதில்களையும் இறைவன் அருளும் பதில் என இப்புதிய வருடத்தில் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாம் அப்படிச் செய்யும்போது, இறைவனைக் குறித்த புதிய புரிந்துணர்வுகளை ஏற்றுக்கொள்ள முடியும்.

4. தூதுப்பணியைக் குறித்த முழுமையான புரிந்துணர்வு


ஓர் மனிதனோ சமூகமோ கடவுளுடைய அன்பை வார்த்தையாலோ
செயல்களாலோ பிறருக்கு எடுத்துக் கூறுவதே தூதுபணி ஆகும்.
இத்தூதுப்பணிக்குள் நற்செய்திப்பணி ஒரு பகுதி ஆகும் (மத்தேயு 28:19-
20). மேலும், ஏனைய தூதுப்பணிகளும் காணப்படுகின்றது என்பதை
கருத்தில் கொண்டு அப்பணிகளை ஆற்றுவதற்கு நாம் முற்பட வேண்டும். உதாரணமாக, ஒப்புரவாக்கும் பணி (2 கொரிந்தியர் 5:16-20), நீதிக்கும் அமைதிக்குமான பணி (சங்கீதம் – திருப்பாடல் 85:10), இயற்கையைப் பராமரித்து பாதுகாக்கும் பணி (ரோமர் 8:22, ஆதியாகமம் – தொடக்கநூல் 1:25-28), பிற சமயங்களுடனான நல்லுறவை ஏற்படுத்தும் பணி (ஏசாயா 11:6-9), அங்கவீனத்தன்மையுள்ள மக்களுக்கான விடுதலைப்பணி (மாற்கு 10:46-52) போன்ற பல துறைகளில் எமது பணிகள் ஆற்றப்பட வேண்டும். அதாவது, ஓர் கிறிஸ்தவன் நகரத்தில் காணப்படும் செயற்பாடுகளில்
தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும் (லூக்கா 13:31). இவ்வாறாக,
அவன் செயற்படும்போதே தூதுப்பணியைக் குறித்த முழுமையான
தெளிவைப் பெற முடியும். தூதுப்பணி கடவுளுடையதாகும். நாம்
அனைவரும் அப்பணியை புரியும் உபகரணங்கள் ஆகும். இதை நாம்
மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.

5. திருவிருந்தின்போது…


ஆண்டவர் இயேசுவினால் உருவாக்கப்பட்ட அருட்சாதனங்களில்
ஒன்றாக திருவிருந்து காணப்படுகின்றது. திருவிருந்தின்போது பொதுவாக இயேசுவின் மரணம், உயிர்ப்பு, அவரது வருகை போன்றவைகள் ஞாபகப்படுத்தப்படுகின்றன. அத்துடன், நாம் அவருடனும் அவர் எம்முடனும் இணைந்து கொள்கின்றார். அத்துடன், நாம் எதிர்காலத்தில் இறையரசில் அருந்தப் போகின்ற விருந்திற்கான முன்னடையாளங்களாக திருவிருந்து காணப்படுகின்றது என்ற உண்மைகள் எம்மிடையே நிலவுகின்றது. எனினும், திருவிருந்தில் பேதுருவின் மறுதலிப்பு, யூதாசின் காட்டிக்கொடுப்பு போன்றவைகளையும் நாம் நினைந்து கொள்ள வேண்டும். அப்பொழுதே, எமது வாழ்வின் அனுபவங்களுடன் இது
இணைக்கப்படுகின்றது. அத்துடன், (மாற்கு 3:6) ஏரோதியரும்
சதுசேயரும் இணைந்து இயேசுவை திட்டமிட்டு கொலை செய்வதைப்
போன்று இன்றைய உலகில் திட்டமிடப்பட்டு கொல்லப்பட்ட அப்பாவி
மக்களின் இரத்தங்களும் நினைந்து கொள்ளப்படவேண்டும். மேலும், 1
கொரிந்தியர் 11:25ன் படி பவுல் திருவிருந்தியை ஓர் உடன்படிக்கையின்
அடையாளச் சின்னமாக கருதுகின்றார். குறிப்பாக, நாம்
திருவிருந்தின்போது, கிறிஸ்துவின் சரீரமாகிய திருச்சபை எந்நிலையில் காணப்படுகின்றது என்ற சிந்தனையை வளர்த்து எமது நிலையிலும் குறைந்த நிலையில் உள்ளவர்கள் எமது நிலைக்கு உயர்த்த முற்படும் ஓர் உடன்படிக்கையின் நிகழ்வாக அல்லது பொறுப்பு வாய்ந்த நிகழ்வாக அல்லது உத்தரவாதமுள்ள நிகழ்வாக இதனை கருத்திற்கொள்ள வேண்டும்.

6. மாறாத இறைவன்


காலங்கள், வருடங்கள் கடந்து போனாலும் இறைவன்
இருக்கின்றவராக இருக்கிறார் (யாத்திராகமம் – விடுதலைப்பயணம் 3:14). இதனை, இஸ்ரயேல் மக்கள் உணர்ந்து கொண்டனர். இப்படிப்பட்ட
உணர்வு ஆதித்திருச்சபை மக்கள் நீரோ மன்னனினால் துன்பப்பட்ட
வேளையில் கடவுளை அல்பாவாகவும் ஓமேகாவாகவும்
(தொடக்கமானவராகவும் முடிவானவராகவும்) புரிந்துகொண்டனர்.
கடவுள் எங்களில் ஒருவராக எங்கள் துன்பங்களில் இணைந்து
கொள்கிறார். இது எமக்குக் கிடைக்கும் ஓர் பலமான செய்தியாகும்.
அதாவது, மனிதர்கள், அவர்களது வார்த்தை மாற்றமுடையதாக
காணப்படும். ஆனால், இறைவனின் செயற்பாடு என்றும்
நிலையானதாகும். உலக மையமாக்கல், பொருளாதார மையமாக்கல்,
உலகப் பொருள் முதல் வாதம், நவீன தொழிநுட்ப வளர்ச்சி போன்ற
வளர்ச்சிகள் ஒருபுறம் அதிகரித்துக் கொண்டு சென்றாலும், மறுபுறம்
நன்மை அகன்று தீமை எம்மிடையே குடிகொண்டுள்ளது. இன்று
நன்மைக்கும் தீமைக்குமிடையே போராட்டம் நிகழ்வதில்லை. மாறாக,
தீமைக்கும் அதிக தீமைக்குமிடையே போராட்டம் நடைபெறுகின்றது.
இப்போராட்டத்தின் மத்தியிலும் இறைவனின் மாறாத்தன்மையை நாம்
புரிந்துகொள்ள அழைக்கப்படுகின்றோம். (சங்கீதம் – திருப்பாடல் 46:10)
நீங்கள் அமர்ந்திருந்து நானே கர்த்தர் என்று அறிந்துகொள்ளுங்கள். இந்த வார்த்தை இறைவனை அறிந்துகொள்ள அனுபவிக்க, அறிக்கையிட எமக்கு உதவுகின்றது. இப்பேர்ப்பட்ட புதிய புரிந்துணர்வு இன்று அவசியமாகின்றது.

7. வழிபாடு பற்றிய புதிய சிந்தனை


இறைவனுக்குரிய மதிப்பையும் மரியாதையையும் செலுத்துமிடமே
வழிபாடு என அழைக்கப்படுகின்றது. இவ்வழிபாடு ஓர் ஆன்மீக
கூட்டிற்குள் எம்மை தள்ளாமல் மாறாக, வழிபாட்டில் நீதி (ஆமோஸ் 5:18-
21), உண்மை (யோவான் 4:24), ஒப்புரவாகல் (மத்தேயு 5:24)
போன்றவைகள் காணப்பட வேண்டும். உண்மையில் ஆலய வழிபாடு
நிறைவடைந்த பின்னரே உண்மையான வழிபாடு ஆரம்பிக்கின்றது
என்பர். மேலும், ஓய்வுநாள், ஓர் தூய்மையின் நாளாக மாத்திரம்
கடைப்பிடிக்காமல் மாறாக, அதுவோர் விடுதலையின் நாளாக
மாற்றப்படவேண்டும் (மாற்கு 3:1-6), லூக்கா 13:10-17).
எனவே, வழிபாடு ஓர் விடுதலை சார்ந்த மையத்தில் செயற்படுதல்
மிக அவசியமாகின்றது.

முடிவுரை

அன்பானவர்களே, இப்புதிய வருடத்தில் இறைவனின்
இருப்புநிலை, வழிபாடு, மன்றாடலைக் குறித்த புதிய தெளிவு,
இறையாசியைப் பகிர வேண்டிய தேவை, திருவிருந்தைக் குறித்த
சமூகப்பார்வை, தூதுப்பணியைக் குறித்த பரந்த சிந்தனை போன்ற
உண்மைகளை நாம் மனதில் இருத்தி, இவற்றைக் கடைப்பிடிக்க
கடவுளின் அருளையும் ஆசியையும் பெற்றுக்கொள்வோமாக.

அருட்பணி. ஸ்டீபன் அருளம்பலம்
அருட்பணி. ஸ்டீபன் அருளம்பலம்