அறிமுகம்

              கிறிஸ்து பிறப்பின் காலத்திற்குள் நாம் அனைவரும் பிரவேசித்துள்ளோம். 2022ம் ஆண்டு சர்வதேச அரங்கிலும் எமது இலங்கை தேசத்திலும் பல்வேறுபட்ட நிகழ்வுகள் இடம்பெற்றதை நாம் மறந்துவிடக்கூடாது. குறிப்பாக, உலகில் நிலவிவரும் அரசியல் பதட்டங்கள் மனித உயிர்களை காவுகொண்டது. மாத்திரமன்றி பொருட்சேதங்களையும் பொருளாதார சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. உதாரணமாக, உக்ரேன்மீது ரஷ்யாவின் படையெடுப்பு, வடகொரியா தென்கொரியா நாடுகளுக்கிடையே நிலவும் பதட்டம், சீனா தாய்வான் நாடுகளுக்கிடையே நிலவும் பதட்டம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். மேலும், மனித உயிர்களுக்கு அச்சம் விளைவிக்கும் கொரோனா வைரஸ் மறுபடியும் உயிர்பெற்றெழுந்துள்ளது. அத்துடன், குரங்கு அம்மையின் தாக்கமும் அதிகளவில் அதிகரித்துள்ளது. இவற்றுக்கிடையே உலகம் தாண்டவம் ஆடுகின்றது.

             

எமது இலங்கை தேசத்திற்குள் நாம் வரும்போது கொரோனாவின் தாக்கம் ஓரளவு குறைந்தபோதிலும் அதனைவிட மோசமான கொடிய அரக்கனாகிய பொருளாதார பிரச்சினைக்குள் நாடு அகப்பட்டுள்ளது. இவ்வருடத்தில் நிகழ்ந்த இளைஞர்களின் புரட்சியினால் பிரதமமந்திரி, ஜனாதிபதி போன்றவர்கள் பதவியை இழக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. அத்துடன், பொருட்களின் விலைகள் பல மடங்கு அதிகரித்துள்ளது. பொருட்தட்டுப்பாடு, கறுப்புச்சந்தை, பணவீக்கம் போன்றவற்றுக்கு இலங்கையில் தட்டுப்பாடு கிடையாது. மேலும், குரங்கு அம்மையின் தாக்கமும் மக்களை அச்சுறுத்திக் கொண்டே இருக்கின்றது. மருந்து பொருட்களுக்கான பற்றாக்குறை, விலையேற்றம் சிறுவர்களை வெகுவாகப் பாதிக்கின்றது. போதைப்பொருட்களின் விநியோகம், விற்பனை பாடசாலை மாணவர்களை அதிகளவில் பாதிக்கின்றது. மந்தப் போசணையின் விளைவாக பாடசாலை மாணவர்கள் மயங்கிவிழும் சூழல் அதிகரிக்கின்றது. மேலும், கல்விச் சுமையின் காரணமாக தற்கொலை செய்யும் சிறார்களின் வீதம் அதிகரிக்கின்றது. ஒருபக்கம் தொழிநுட்ப வளர்ச்சி என்ற போர்வையில் மறுபக்கம் பாலியல் வன்முறைகள் மனித உரிமை மீறல்கள், சிறுவர் துஷ்பிரயோகம் போன்றவைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. இவற்றின் பின்னணியிலேயே மறுபடியும் நாம் கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியை இணைந்து கொள்ள இருக்கின்றோம். எனினும், சிறுவர்கள் பாடசாலை புத்தகங்களுக்கும், கல்வி உபகரணங்களுக்கும் வடிக்கும் கண்ணீரும் எழுப்பும் அவலக் குரல்களும் இப்பண்டிகையில் அடிக்கடி நாம் நினைந்துக் கொள்ள வேண்டியதொன்றாகும். இவ்வொளியில் இயேசுவின் பிறப்பு சம்பவத்தை மீள்புரட்டிப்பார்க்க உங்களை அழைக்கின்றேன்.

திருமறை ஆய்வு

              ஒத்தமை நற்செய்திகளில் ஒன்றான மத்தேயு நற்செய்தி 2:16-18 வரையுள்ள வசனங்களில் இயேசுவின் பிறப்பின்போது இடம்பெற்ற அப்பாவி சிறுவர்களின் மரணத்தைப் பற்றி நாம் படிக்கின்றோம். இந்நிகழ்வு ஞானிகளால் ஏமாற்றப்பட்ட ஏரோதுவின் பழிவாங்கும் ஓர் செயலாகும். இச்சம்பவம் மத்தேயு நற்செய்தியில் மாத்திரம் காணப்படுகின்றது. இங்கு வரலாற்றில் நடைப்பெற்ற ஒரு நிகழ்ச்சியை மத்தேயு இந்நிகழ்வுக்கு ஆதாரமாக்குகின்றார். கி.மு. 605-586 ஆகிய காலப்பகுதிகளில் இஸ்ராயேல் மக்கள் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டார்கள். இப்பேர்ப்பட்ட சூழ்நிலையில் பாபிலோனிய இராணுவம் எருசலேமுக்குள் நுழைந்து அங்குள்ள இளைஞர்களை வழுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு பாபிலோனியாவுக்கு அழைத்துச் சென்றனர். அப்பொழுது, பிள்ளைகளின் பின்பதாக அவர்களின் தாய்மார், புலம்பலோடு பின்தொடர்ந்தனர். எனினும், இவர்கள் ராமா என்ற இடம் வரையில் மாத்திரம் பின்தொடரமுடியும். எனவே, பெண்கள் எல்லோரும் அவ்விடத்திலே கூடியிருந்து அந்தப் பிள்ளைகள் தங்களை விட்டு பிரிவதை பொறுக்கமுடியாமல் ஓலமிட்டு புலம்பி அழுதனர். எனவேதான், ராகேல் தனது குழந்தைகளுக்காக அழுகிறார் என்னும் வாக்கியமும் கூறப்படுகின்றது.

              பெத்லகேமில் ஞானிகளால் ஏமாற்றப்பட்டுவிட்டேன் என உணர்ந்த ஏரோது, இயேசு பிறந்த காலத்தை கணிப்பிட்டு அதற்கு உட்பட்ட இரண்டு வயது நிரம்பிய குழந்தைகளை கொலை செய்தான். இதனால், பெத்லகேமிலே எழுப்பிய அழுகுரல் ராமாவிலே ஏற்பட்ட அழுகுரல்களுக்கு சமமாக காணப்பட்டது என மத்தேயு வர்ணிக்கின்றார். இங்கு, ஏரோது தனது பதவிக்கு யாரேனும் சவால் விடுப்பார்களெனில் அவர்களை கொலை செய்வது சாதாரண ஓர் நடவடிக்கையாகும். அதாவது, தனது இரண்டு மனைவிமாராளும் நான்கு பிள்ளைகளாலும் தனது ஆட்சி பறிபோகும் என உணர்ந்த ஏரோது அவர்களை கொலை செய்தார். அப்பேர்ப்பட்ட ஏரோதுவுக்கு சிறுபிள்ளைகளை கொல்லுவது என்பது சாதாரண ஓர் செயலே ஆகும். எனவேதான், ஏரோதுவின் வீட்டில் ஓர் பிள்ளையாக பிறப்பதைவிட ஓர் பன்றியாகப் பிறப்பது மேன்மை நிறைந்த செயலாகும் எனக் கருதினர். இங்கு, பிள்ளைகளின் இறப்பு ஓர் பெரும் துயர நிகழ்வாகும். மறுகரையில், எகிப்தை நோக்கிய இயேசுவினதும் பெற்றோரினதும் பயணம் அதில் புலப்படும் இறைபராமரிப்பு என்றுமே ஆச்சரியத்துக்கு உரியதாகும்.

இறையியல் விளக்கம்

              பெத்லகேமிலே ஏற்பட்ட அப்பாவி சிறார்களின் மரணத்தை இன்றைய 2022ம் ஆண்டு நிகழ்வுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தல் மிக அவசியமாகின்றது. குறிப்பாக, பிள்ளைகளின் மரணம் ஓர் சமூக பாவத்தின் விளைவே ஆகும். ஏரோது என்ற அரசனின் தவறினால் அன்று சிறார்கள் கொல்லப்பட்டனர். இப்பேர்ப்பட்ட சமூகப்பாவம் மோசே பிறந்தபோதும் எகிப்தில் ஏற்பட்டது. அன்று பார்வோன் என்பவர் செய்த தவறின் விளைவாக சிறுவர்கள் கொல்லப்பட்டனர். இன்றும் சிறார்கள் பிறருடைய தவறுகளால் பாதிக்கப்படுவதை நாம் காணலாம். குறிப்பாக, இவ்வாண்டில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் பாணியை குடிக்க எழுபதுக்கும் மேற்பட்ட சிறார்கள் கெம்பியாவில் பரிதாபமாக மரித்தனர். மேலும், இந்தோனேஷியாவில் நூறுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் தவறான மருந்தை அருந்தியதால் பரிதாபமாக உயிர்துறந்தனர். இலங்கையில் முல்லைத்தீவு என்ற பகுதியில் தந்தையின் போதைப்பொருள் வில்லைகளை தவறாக அருந்திய இரண்டு வயது குழந்தை நோயுற்ற நிகழ்வு எம் எல்லோருடைய உள்ளங்களையும் நெகிழச்செய்கின்றது. இவ்வாறாக, பல நிகழ்வுகள் சமூகப் பாவத்தின் விளைவுகள் சிறுவர்களுக்கு ஏற்படும் தவறாகும். அதாவது, ஒருவருடைய தவறு இன்னுமொருவரை பாதிக்குமென்ற உண்மை ஓர் வரலாற்று உண்மையாகும். இன்றும் அது யதார்த்தமாகின்றது. எனவே, சிறுவர் உரிமைகள் தொடர்பாக திருச்சபை அதிகளவில் சிந்திக்க வேண்டும்.

              அப்பாவி சிறுவர்களின் மரணம் தொடர்பாக நாம் சிந்திக்கும் வேளையில் ஆண்டவர் இயேசுவின் மீட்புத்திட்டத்தில் இச்சிறார்களும் இணைந்துள்ளனர். அதாவது, ஆண்டவர் இயேசுவின் மரணம் ஓர் திட்டமிடப்பட்ட சதியாகும். மாற்கு 3:6இல் அரசியல்வாதிகளான ஏரோதியரும் சமயவாதிகளான சதுசேயரும் ஒன்றிணைந்து திட்டம் தீட்டி இயேசுவைக் கொலை செய்தனர். எனவே, இயேசுவின் மரணமும் ஓர் அப்பாவின் மரணமாகும். அதேவகையில், சிறார்களின் மரணமும் அப்பாவிகளின் மரணமாகும். எனவேதான், இயேசுவின் மீட்புத் திட்டத்தில் இச் சிறார்களும் இணைந்துள்ளனர் என்ற கருத்தை வலியுறுத்த விரும்புகின்றேன். மீட்புத்திட்டம் என்பது, ஓர் தொடர்நிலை சார்ந்ததாகும். இன்றும், நாம் அவ் மீட்புத்திட்டத்தில் பங்குதாரர்களாக மாற அழைக்கப்படுகின்றோம். குறிப்பாக, நற்செய்தியின் பொருட்டு தம் உயிரை தியாகம் செய்த பேதுரு போன்றவர்கள் இரத்தச் சாட்சிகளாக கருதப்படுகின்ற அதேவேளையில் நீண்ட காலம் நற்செய்திக்காக சாட்சியாக வாழ்ந்து இயற்கை மரணம் எய்திய இயேசுவின் சீடராகிய யோவானையும் ஓர் சாட்சியாளனாகவே நாம் கருத வேண்டும். இதன்வகையில், இச்சிறுவர்களும் சாட்சியாளர்களே ஆவர்.

              இயேசுவின் பிறப்பின்போது கொல்லப்பட்ட அப்பாவி சிறார்கள் தங்கள் வாழ்வை தியாகம் செய்ததன் விளைவாக ஏரோதுவின் சீற்றத்தை தணித்திருப்பார்கள். அதாவது, இயேசுவைக் கொல்ல வேண்டும் என்ற சிந்தனையுடனும் சீற்றத்துடனும் செயற்பட்ட ஏரோதுவின் கோபம் என்னும் பசி ஓரளவு தீர்ந்திருக்கும். அதாவது, இயேசுவைக் கொல்லுதல் என்பது, உண்மையைக் கொல்லுதல் ஆகும், மேலும், வாழ்வை அழிப்பதாகும். மேலும், விடுதலையை கொல்லுதல் ஆகும் (யோவான் 14:6). எனவே, ஏரோது இயேசுவைக் கொல்ல முயற்சிசெய்த வேளையில் அது அவனுக்கு கைகூடவில்லை. எனவே, இன்றும் அநேகர் இயேசுவைக் கொல்லும் ஏரோதுக்களாக வலம் வருகின்றனர். எங்கு உண்மைக் கொல்லப்படுகின்றதோ, அங்கு இயேசு கொல்லப்படுகின்றார். எங்கு வாழ்வு அழிக்கப்படுகின்றதோ அங்கு இயேசு கொல்லப்படுகின்றார். எங்கு விடுதலை நசுக்கப்படுகின்றதோ, அங்கு இயேசு கொல்லப்படுகின்றார். அதாவது, கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட ஒருவரை நாம் அழிக்கும்போது, நாம் கடவுளின் படைப்பை அழிக்கின்றோம். தங்களுக்காக குரலெழுப்ப முடியாத சிறார்கள் இன்றும் நீதிக்காக ஏங்குகின்றார்கள்.

யார் இந்த அப்பாவி சிறார்கள்?

              நாம் திருமறையை திறந்த மனதோடு கற்றுக் கொள்ளும்போது சிறுவர்கள் பற்றிய உண்மைகளை எங்களால் கண்டு கொள்ள முடியும். இவர்கள் கடவுளுடைய கொடைகள் (திருப்பாடல் – சங்கீதம் 127:3). மேலும், கடவுள் தன்னுடைய செய்தியை மக்களுடன் பகிர்ந்துகொள்வதற்காக பயன்படுத்தும் கருவிகளாக இவர்கள் காணப்படுகின்றனர். குறிப்பாக, (2 அரசர் – 2 இராஜாக்கள் 5:1-19) இப்பகுதியில், தொழுநோயாளியாகிய நாகமான் இல்லத்தில் இருந்த சிறுபெண்ணே நாகமானுக்கு நற்செய்தியை எடுத்துக்கூறி சுகத்தைப் பெற்றுக்கொடுத்தாள். மேலும், சிறார்கள் பகிர்வு உள்ளம் கொண்டவர்கள். இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் ஐயாயிரம் பேர்களுக்கு மேற்பட்ட மக்களுக்கு போஷித்த புதுமையில் ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் இயேசுவிடம் கையளித்தவர் ஓர் சிறுவனே ஆவர் (யோவான் 6:10). அத்துடன், கடவுள் ஆபிரகாமை நோக்கி, அவரது மகனாகிய ஈசாக்கை தனக்கு பலியிடுமாறு வேண்டிக் கொண்ட போதிலும், ஈற்றில் பிள்ளையாண்டான்மீது கையை வையாதே எனக் கூறுகின்றார் (தொடக்கநூல் – ஆதியாகமம் 22:12). ஏனெனில், அக்காலத்தில் மக்களிடையே தவறான நம்பிக்கைகள் காணப்பட்டன. அதாவது, கடவுள் நரபலியை விரும்புகின்றார் என்பதாகும். எனவே, இதற்கு பதிலுரைக்கும் வகையில், இறைவன் நரபலியை விரும்புவதில்லை என்ற செய்தி இந்நிகழ்வினூடாக புலப்படுகின்றது. மேலும், கடவுளுடைய சிறுவர்கள் கடவுளுடைய ராஜ்ஜியத்தின் அடையாளங்களாக காணப்படுகின்றனர் (மாற்கு 10:12-16). எனவே, நாம் சிறுவர்களுக்கு எதிராக எமது சிந்தனையாலும், சொல்லாலும், செயல்களாலும் தவறிழைக்கும்போதும், இடறல்களை ஏற்படுத்தும்போதும் நாம் கடவுளின் சாயலுக்கெதிராகவும், கடவுளின் உபகரணங்களுக்கு எதிராகவும், கடவுளின் அரசுக்கு எதிராகவும், பகிர்வுள்ளோர் கொண்டோருக்கு எதிராகவும் தவறிழைக்கிறோம் என்ற மனநிலையை நாம் உருவாக்கிக்கொள்ளுதல் வேண்டும்.

முடிவுரை

              எங்களை கொல்லாதிருங்கள் என்னும் குரலை கிறிஸ்துபிறப்பின் காலத்தில் நாம் அடிக்கடி கேட்டு வருகின்றோம். குறிப்பாக, இயேசு பிறந்த ஊராகிய பெத்லகேமில் நடைப்பெற்றுவரும் யுத்தத்தில் விளைவாக எங்களை கொல்லாதிருங்கள் என்ற குரல் இன்றும் ஒலிக்கின்றது. மேலும் உண்மை, நீதி, அன்பு, ஒற்றுமை போன்ற விழுமியங்கள் அழிக்கப்பட்டுவரும் சூழ்நிலையில் அவைகளும் எங்களைக் கொல்லாதிருங்கள் என கெஞ்சுகின்றன. மேலும், காற்றில் பரவி வருகின்ற தூசுக்களின் செறிவுகள் நாளுக்கு நாள் அதிகரிப்பதனால் இயற்கை மாசுப்படுகின்றது. மேலும், பண்டிகை நாட்களில் அதிகளவு சூழல் மாசடைகின்றது. இதன் பின்னணியில் இயற்கை, படைப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைந்து எங்களை கொல்லாதிருங்கள் என குரலெழுப்புகின்றன. மேலும், இன்றைய காலப்பகுதியில் சிறுவர்கள் தமது கல்வியை தொடரமுடியாத அளவிற்கு கடினப்படுகின்றனர். எனவே, அவர்கள் ஒன்றிணைந்து கல்வியை கொல்லாதிருங்கள் எனக் கதறுகின்றனர். மேலும், கருவறைக்குள் குழந்தைகள் எங்களைக் கொல்லாதிருங்கள் எனக் கதறுகின்றனர். எனவே, இப்பேர்ப்பட்ட அழுகுரல்களின் மத்தியில் மனிதர்களை, இயற்கையை, விழுமியங்களை பாதுகாப்பதே இப்பண்டிகையின் நோக்கமாகும். எனவே, வாழ்வளிக்க வந்த ஆண்டவரின் நோக்கங்களை கருத்திற் கொண்டு நாமும் வாழ்வைப் பற்றி சிந்தித்து வாழ்வின் வார்த்தைகளைப் பேசி, வாழ்வின் செயற்பாடுகளை முன்னெடுக்க முயற்சிப்போமாக. உங்களனைவருக்கும் கிறிஸ்து பிறப்பின் நல்லாசிகளை தெரிவிக்கின்றோம்.

ஆக்கம் : அற்புதம்

One thought on “எங்களை கொல்லாதிருங்கள்…”

Comments are closed.