Prayer.

உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் (கல்லறையில்) தேடுகிறதென்ன? அவர் இங்கே இல்லை. அவர் உயிர்த்தார்!
(லூக். 24:5ஆ-6அ)

பொதுவாக இயேசுவின் வாழ்வில் மிக முக்கிய நிகழ்வான உயிர்ப்பை பலர் நிருபிக்க இயலாத ஒரு நிகழ்வு என்பர். பேராயர் சாம் அமிர்தம் ஒருமுறை கூறினார், ‘சாதாரன மண் துகள்களை ஈர்க்கும் ஆற்றல் ஒரு காந்த துண்டுக்கு இருப்பது உண்மையானால், எல்லாம் வல்ல கடவுள் இயேசுவை உயிர்க்கச் செய்வதில் என்ன பிரச்சனை’ என்றார்.. நாம் படிக்கக் கேட்ட பகுதியில் அடக்கம் செய்யப்பட்ட இயேசுவின் உடலைக் காணவில்லை என்ற குறிப்பு வருகிறது. கல்லறை வெறுமையாக இருந்தது. அதைக்கண்டு பெண்கள் குழப்பம் அடைந்தனர் (லூக். 24:4). மாற்குவின் கூற்றுப்படி வெள்ளை உடை அணிந்த வாலிபன் ஒருவன் அங்கே உட்கார்ந்திருந்தான் (16:5). அங்கே வந்த மகதலேனா மரியாள், யாக்கோபின் தாயாகிய மரியாள், சலோமி (லூக்கா கருத்துப்படி யோவன்னாள்) ஆகியோர் நறுமணங்களை வாங்கிவந்து, பூத உடலில் தடவ முன்வந்தனர். வரும்போது, நமக்கு யார் கல்லறை வாசலைப்புரட்டி தருவார் என்றக் கேள்வியோடு வர, அங்கு கல்லறை வாசல் புரட்டப்பட்டிருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர்.

லூக்காவின் கூற்றுப்படி வெள்ளுடையில் இருவர் அங்கு வந்து நின்றனர் (24:4). வெண்ணிற ஆடை அணிந்தவரில் ஒருவன், ‘திகைக்க வேண்டாம். சிலுவையில் அறையுண்ட நசரேனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள், அவர் உயிர்த்தெழுந்தார். அவர் இங்கே இல்லை. இதுதான் அவரை வைத்த இடம்’ எனச்சுட்டிக் காட்டினான். அவ்விடத்தில் இயேசுவை சுற்றிவைக்கப்பட்ட வெண்மையானதொரு துணி மட்டுமேயிருந்தது.

வெண்ணிற ஆடை அணிந்த நபர்களின் கூற்றுக்கள் கவனத்திற்குரியவை. மாற்கு கூற்றுப்படி ‘நீங்கள் புறப்பட்டுச் செல்லுங்கள். பேதுருவிடமும், ஏனைய சீடரிடமும் உங்களுக்கு முன்பாக இயேசு கலிலேயாவுக்கு போய்க்கொண்டிருக்கிறார். அவர் உங்களுக்குச் சொன்னது போலவே அவரை அங்கே காண்பீர்கள் எனச் சொல்லுங்கள்’ என்றார் (16:7). லூக்காவின் கேள்வியின்படி, ‘உயிரோடிருப்பவரைக் கல்லறையில் தேடுவதேன்? அவர் இங்கே இல்லை. அவர் உயிருடன் எழுப்பப்பட்டார். கலிலேயாவில் இருக்கும்போது, அவர் உங்களுக்குச் சொன்னதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அவர் பாவிகளின் வசம் கையளிக்கப்பட்டு, சிலுவையில் அறையுண்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழும் சூழல் வரும் என்று சொன்னாரே’ என்று நினைவுபடுத்தினர் (24:5-7). அவர்கள் ஆண்டவரைத் தேடிய இடம் தவறாக இருந்தது. ஆண்டவரை இறந்தோரிடமும், கல்லறையிடமும் தேடுவதில் பயனில்லை. பின்வரும் மூன்று குறிப்புகளால் இச்சூழலின் தீவிரத்தை இன்னும் நாம் ஆழமாகப் புரிய முயலலாம்.

1) பயத்தில் உறைந்திருந்த ஆண் சீடர்கள் (மாற்.16:11,13-14, லூக்.24:11,21)

இயேசுவை சிலுவையில் அறைந்து, கொலை செய்த பின்னர் ஒருவித மயான அமைதி சீடர்களிடையே கவ்வ ஆரம்பித்தது. சீடர்களிடம் நம்பிக்கையின்மையும், பயமும் நிறைந்திருந்ததால் அவர்கள் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தனர், துயருற்று அழுதுகொண்டிருந்தனர் (மாற்.16:10ஆ). பேதுரு மட்டுமே ஓரளவு தைரியத்தை வரவழைத்து, சீடத்துவம்கொண்ட பெண்களைத் தொடர்ந்து, அதிகாலையில் கல்லறைக்கு ஒடினார். அவரும் அங்கே வெறுமையான கல்லறையையும் துணியையும் மட்டுமே கண்டார் (லூக். 24:12). யோவான் நூலாசிரியர் மட்டும் பேதுருவைப் பெயரிடாமல் ‘இன்னொரு சீடர்’ என குறிப்பிடுகிறார் (யோ.20:1-10). இந்தப் பயம் காரணமாகவே இயேசுவே அவர்களிடம் நேரடியாக வந்து பேசியப் பின்னரும், தம் காயத்தைக்காட்டிய பின்னரும் நம்பாமல் ஆச்சரியப்பட்டனர் (லூக்.24:41). இயேசுவே சீடர்களின் நம்பிக்கையின்மையை நேரடியாகக் கண்டிப்பதாக மாற்கு குறிப்பிடுகிறார் (16:14). பின்னர் உணவிற்காக சீடர்கள் பந்தியிலிருந்த போது, இயேசு அவர்கள் நடவே வந்து, அப்பத்தை ஆசீர்வதித்து, பகிர்ந்து கொடுத்தவிதம், அவர் குரல், செய்கைமுறை மூலம் அவர்கள் மனக்கண்கள் திறந்ததாக லூக்கா எழுதுகிறார் (24:30-31). இயேசுவின் அனைத்து சீடர்களும் ஆண்களாக இருந்தபோதும், அவர்களின் நம்பிக்கை, தைரியம் ஆகியவை நெருக்கடிக்காலத்தில் கேள்விக்குரியதாக அமைந்தன.

2) தைரியத்தை வரவழைத்த பெண் சீடர்கள் (மாற்.16:1-8)

எல்லாரைப் போல பெண்களும் அச்சம் கொண்டனர். ஆனால் விடியற்காலையில் கல்லறைக்கு செல்வதற்கு முன் அவர்கள் பெற்ற தைரியம் மிக அசாதாரணமானது. அங்கு சென்று அக்கல்லறையில் உடலைக்காணோம் என்று அழுதனர் (யோ.20:11-15). பின்னரே கல்லறைக்கு வெளியே நடுக்கம் கொண்டனர், மெய்மறந்தனர், பேச்சு இழந்தனர், அச்சம் கொண்டனர் (மாற். 16:8). பெண்கள் கல்லறைக்கு வரத்துணிந்த பின்னரே, பேதுரு வந்தார் என்பதை ஏற்கனவே நாம் கண்டோம். விவிலியத்தின் தொடக்கநூல் முதல் பெண்களை எதிர்மறையாகவே காட்டி வந்துள்ளனர். உலகில் பாவத்திற்கும், சாபத்திற்கும், தீட்டுக்கும் மூலகாரணம் ஒரு பெண்மணி, ஏவாளே எனக்கூறி தொடர்ந்து பெண்களை இரண்டாம் நிலைக்கு தள்ளிய செயல்களால்தானோ என்னமோ, இயேசுவின் உயிர்ப்பின் நற்செய்தி அவர்கள் மூலம் சீடருக்கும், நம் அனைவருக்கும் முதலாவது அருளப்படுகிறது. உயிர்ப்பின் நற்செய்தி பெண்கள் வழியாகவே தரப்படுகிறது என்றச் செய்தியில் ஒரு தலைகீழ் மாற்றத்தைக் காண முடிகிறது. நெருக்கடியான சூழல்களில், கலவர காலங்களில் கூட ஆண்கள் அனைவரும் ஓடி ஒளியும் சூழலில்கூட பெண்கள் தைரியமாக குழந்தை, குட்டிகளோடு தங்கள் வசிப்பிடங்களிலேயே சமாளிக்கிற தைரியத்தை இன்றும் நம்மிடையே காணமுடியும்.

3) உண்மையை உணர்ந்த அரசு அலுவலர்கள் (மாற்.15:39இ,16:12)

இயேசுவின் உள் வட்டத்திலும், வெளி வட்டத்திலும் இல்லாத சமயசார்பற்ற சில பணியாளர்கள், அரசுபணியர் குறிப்பாக நூற்றுவர் தலைவர், கிராமத்தினர் போன்றோர் இயேசுவின் மரணத்திற்கும், உயிர்ப்புக்கும் சாட்சிகளாக மாறினர் (15:39). ‘இம்மனிதர் (இயேசு) உண்மையாகவே இறைமகன்’ என நூற்றுவர் தலைவன் சான்று பகர்ந்தார். வயல் வெளிகளில் வாழ்ந்து வந்த கிராமத்தினர் இருவருக்கு, இயேசு வேற்று உருவில் தோன்றியதாகவும், அதை அவர்கள் மற்றவர்க்கும், சீடர்க்கும் கூறியதாகவும், ஆனால் அவர்கள் அனைவரும் நம்ப மறுத்ததாகவும் மாற்கு பதிவுசெய்கிறார் (16:12-13).

உயிர்ப்பு என்பது செயல்பாட்டில் மட்டுமே பார்க்க முடியும். காண முடியாத ஒன்றை தொட்டுக்காணும் நிலையே உயிர்ப்பாகும். வார்த்தை ஊன் வடிவம் கொண்டதே ஓர் உயிர்ப்பு ஆகும். இயேசு உண்மையாகவே உயிர்த்தார் என்பதின் அடையாளம், பயந்து ஓடிய சீடர்கள் பிற்காலத்தில் உயிரைப் பொருட்படுத்தாது இரத்த சாட்சிகளாக இறக்க துணிந்ததின் சூட்சமத்தில் அடங்கியுள்ளது. உயிர்ப்பு அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியக்கூடியது!

சாலமன் விக்டஸ்
சாலமன் விக்டஸ்

அருட்பணியாளர், இறையியலாளர்,
முன்னை முதல்வர்,
தமிழ்நாடு இறையியல் கல்லூரி

(உயிர்ப்பு அருளுரைக்கான பிற விவிலியத் தலைப்புகள் -மத்.28:6,10, மாற்.16:6, யோ.20:17ஆ)