4 செப்டெம்பர் 2022
கிறிஸ்தவ கல்வி – திருச்சபையின் பணி

Education as a Ministry of the Church

மத்தேயு 5:1-12

• திருச்சபை பொதுவாக நற்செய்தி பணியையே தனது பணியாக கொண்டுள்ளது. ஆனால், கிறிஸ்தவ கல்வி திருச்சபையின் ஒரு பணியாக நாம் கருத வேண்டும். இக்கல்வியைக் கொடுப்பதற்கு அருளுரைகள், வேதபடிப்புக்கள், நவீன தொழிநுட்பங்கள் போன்ற அணுகுமுறைகளை நாம் பயன்படுத்தலாம்.

• முதலாம் உடன்படிக்கை வாசகத்தின்படி இஸ்ராயேல் மக்கள் பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து மீண்டு வந்த பின்னர் அவர்கள் மத்தியில் நிலவ வேண்டிய ஒழுக்கத்தைப் பற்றி நெகேமியா 8:1-8ல் கூறுகின்றார். அங்கு கல்வி என்பது நியாயப்பிரமாணத்தை கடைப்பிடிப்பதன் மூலம் ஊடாகவே ஒரு வாழ்க்கை கல்வியாக காணப்பட்டது. இத்தகைய சிந்தனைகளே திருப்பாடல் அல்லது சங்கீதம் 119:41-48 பகுதியில் நாம் காணலாம். அங்கு ஆசிரியர் நியாயப்பிரமாண வார்த்தைகளை உள்ளத்தில் இருத்திக் கொள்ளுமாறு கேட்கின்றார். ஏனெனில், அவைகள் மனிதனுக்கு வாழ்வளிக்கின்றன.

• இரண்டாம் உடன்படிக்கையின்படி அப்போஸ்தலர் அல்லது திருத்தூதர்பணிகள் 18:24-28 பகுதியில் மக்களுக்கு போதிக்கும் பணியில் அப்பல்லோ ஈடுபட்டிருந்தார். இவர் கிரேக்க அறிஞராகவும் ஓர் தத்துவ சிந்தனையாளராகவும் காணப்பட்டார். திருச்சபை இவருடைய அறிவாற்றலை தமது திருப்பணியில் பயன்படுத்தியது. சிறப்பாக, பவுல் இவரை தமது பணியில் பயன்படுத்தினார். இதனூடாக, நாமும் திருச்சபைக்கு வெளியே இருக்கும் அறிவாற்றல் உள்ளவர்கள், தத்துவ அறிஞர்கள், சிறப்பு தேர்ச்சி பெற்றவர்கள் போன்றவர்களை கல்வித்துறையில் பயன்படுத்தி அவர்கள் மூலம் அறிவைப் பெற்றுக் கொள்ள வேண்டும். எனவேதான், ‘எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு’ இவ்வார்த்தையும் அதன் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றது.

• மத்தேயு 5:1-12 இயேசுவின் மலைப்பொழிவு பிரசங்கத்தைப் பற்றி கூறுகின்றது. மோசே மலையிலிருந்து மக்களுக்கு கட்டளைகளைக் கொடுத்தது போல புதிய மோசேயாகிய இயேசு மலையிலிருந்து மக்களுக்கு புதிய கட்டளைகளை வழங்குகின்றார். இவைகள் அனைத்தும் ஓர் நாளில் ஆற்றப்பட்ட அருளுரைகள் அல்ல. மாறாக, பல நாட்களில் ஆற்றப்பட்ட அருளுரைகளின் தொகுப்பாகும். இங்கு ஆண்டவர் இயேசு புதிய கல்வி முறையை மக்களுக்கு போதிக்கின்றார். பேறு பெற்றவர்களாக நாங்கள் வாழ வேண்டுமெனில் இவைகளைக் கடைப்பிடிக்குமாறு கூறுகின்றார். இக்கல்வி வாழ்க்கைக்கு மிக அவசியமாகின்றது. எனவேதான், இதனை பாக்கிய வசனங்கள் எனவும் கூறுவர்.