Photo Of An Old Woman

Wisdom of the Elders

#. திருமறை பகுதிகள்

ஆதியாகமம் 24 :1 – 16
2 தீமோத்தேயு 1: 3 -16
லூக்கா 1 : 5 – 7

#. உட்புகும் முன்

. மூத்த குடிமக்கள் இறைவனுக்கு

  • அருகானவர்கள்
  • அருமையானவர்கள்
  • உரியவர்கள்
  • காத்திருப்பவர்கள்…

முதியவர்கள் தங்கள் வாழ்வினில்

வறுமையை சந்தித்தவர்கள்

சாதனைகள் புரிந்தவர்கள்

சோதனைகளை கடந்தவர்கள்

கடமைகளை நிறைவேற்றியவர்கள்

நேர்மையாய் வாழ்ந்தவர்கள்

நிதானமாய் இருப்பவர்கள்

இளம் தலைமுறைக்கு வழி அமைத்தவர்கள்…

. மூத்த குடிமக்கள் திருச்சபையில்

- பல ஆயர்களைக் கண்டவர்கள்
- பல பேராயர்களை சந்தித்தவர்கள்
 - பல கூட்டங்களில் பங்கு பெற்றவர்கள்
 - பல அருளுரைகளை கேட்டவர்கள்
- பல ஆலயங்களை கட்டினவர்கள்
- பல நிகழ்வுகளை நடத்தியவர்கள்.....

. மூத்த குடிமக்கள் தங்கள் வாழ்வின்

  - இறுதியில் நிற்கின்றவர்கள்        
  - இறுதிவரை போராடுகின்றவர்கள்
  - இறை சித்தத்திற்கு அர்ப்பணித்தவர்கள்
  - இறை வழிநடத்துதலால் வாழ்கின்றவர்கள்....

கீர்த்தனையில் ஒரு பாடல் “வானம் பூமியோ? பராபரன் மானிடன் ஆனாரோ? என்ன இது? என்ற பாடல்.. (கீர்த்தனை 26)

இந்தப் பாடலில் அணு பல்லவியில் இரண்டு வார்த்தைகள் போடப்

பட்டுள்ளது ஒன்று” ஞானவான்களே” மற்றொன்று “நிதானவான்களே”.. இந்த இரண்டும் பொருந்திப் போவது மூத்த குடிமக்களுக்கு தான். தங்கள் வாழ்க்கையில் ஞானத்தையும், நிதானத்தையும் ஒருங்கே பெற்றுள்ள, இந்த மூத்த குடிமக்களை நன்றியோடு நினைத்துப் பார்ப்போம்…

இன்றைய சிந்தனைக்காக கொடுக்கப்பட்டுள்ள திருமறை பகுதி வழியாக மூத்த குடிமக்களைப் பற்றி திருமறை கூறும் கருத்துக்களை சிந்திப்போம்…

1). முதியோரின் பக்தி – இணை ஏற்புக்கு வழிநடத்தியது. (ஆதியாகமம் 24 :1 – 16 )

ஆபிரகாம் தன் மகனுக்கு பெண் பார்க்கும் படலத்தை பற்றி இந்த திருமறை பகுதி மிகவும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது…

இந்த திருமுறை பகுதி, திருமண இணையர் உறுதி ஏற்பு நிகழ்வில் அதிகம் வாசிக்கப்பட்டு, தியானிக்கப்படுகின்ற ஒரு பகுதியாகும் ….

அகமனமுறையை பற்றி இந்தப் பகுதி அதிகம் வலியுறுத்துகிறது என்றும் புறமண முறைக்கு இது எதிராக இந்த பகுதி இருக்கிறது என்றும் பல சிந்தனையாளர்கள் இந்த பகுதியை குறித்து விவாதிக்கின்றனர்….

இந்தத் திருமறை பகுதியை வாசிக்கும் பொழுது மனதில் எழுந்த ஒன்று ஆபிரகாம் அவரின் பணியாளர், முகம் தெரியாத அந்த நபர், பல நேரங்களில் அருள் அருளுரையாளர்களால் மறக்கடிக்கப்பட்டவர்……

அவர் வயதில் மூத்தவர். ஒரு மூத்த குடியானவர். ஆபிரகாமோடு பயணித்தவர், ஆபிரகாமின் நன்மதிப்பு பெற்றவர், ஆபிரகாமின் உடமைக்கு அதிகாரியாய் இருந்து கண்காணித்தவர்….

ஆபிரகாம் அவர்களின் கட்டளை ஏற்று தன் பயணத்தை துவக்குகின்றார். ஒரு முதியவரின் நீண்ட பயணம் நிறைவாக முடிவடைகிறது என்று திருமறை நமக்கு காட்டுகின்றது….

தன் அதிகாரியின் மகனுக்கு இணை ஏற்பு தேடி அவர் செல்கின்றார். நாகோர் என்னும் ஊருக்கு புறம்பே, ஒரு தண்ணீர் துரவண்டையில் நடக்கும் செயல்கள், அந்த முதியவரின் பண்பட்ட வாழ்வை நமக்கு காட்டுகின்றது….

தன் அதிகாரி ஆபிரகாமின் மகனுக்கு இணை தேடும்போது அவர் கருத்தில் கொண்டது இன்றைய தலைமுறைக்கு பெரும் அறைகூவலை விடுகின்றது…

  • அவர் பெண்ணின் நிறத்தை கருத்தில் கொள்ளவில்லை
  • ⁠ அவர் பெண்ணின் புறத்தோற்றத்தை பற்றிய எண்ணம் அவருக்கு தோன்றவில்லை
  • ⁠ அவர் பெண்ணின் குடும்ப வருமானத்தை பற்றி நினைவில் கொள்ளவில்லை
  • ⁠ அவர் பெண்ணின் உடைமைகளைப் பற்றி நினைக்கவே இல்லை
  • ⁠ அவர் பெண்ணின் பாரம்பரியம் எப்படி இருக்கிறது என்பதை குறித்தும் கவலை கொள்ளவில்லை
  • ⁠ அந்தப் பெண்ணின் நடத்தை எப்படி இருக்குமோ பற்றிய எண்ணம் அவருக்கு எழவே இல்லை
  • ⁠ அவருக்கு தோன்றியது ஒன்றே ஒன்றுதான் அந்தப் பெண்ணுக்கு மனித நேயம் இருக்கிறதா.. என்பதுதான்…

அந்த முகம் தெரியாத அந்த முதியவர் துரவண்டையில் தனக்குள்ளே பேசிக்கொண்ட அந்த வார்த்தைகள் ஒரு “இறை வேண்டுதலின் வெளிப்பாடாக வெளிப்படுகிறது”. …

முதியவரின் ஆழமான இறை பக்திக்கும்,,இறை வேண்டலுக்கும், இறைவன் பதில் தருகின்றார்.

நீர் யார் என்று அந்த ரெபேக்காளிடம் முதியவர் கேட்ட பொழுது, தன் தாய் பெயரையும் தகப்பன் பெயரையும் இணைத்து சொல்வதை நாம் அங்கே பார்க்கலாம்…

அந்த முகம் தெரியாத முதியோர், ஆபிரகாமின் பணியாளர் இறுதியில் பெண்ணின் முடிவு தான் முக்கியம், இணை ஏற்புக்கு அது அவசியம் என்ற கருத்தியலில் நிலைத்து நின்று, அந்த பெண்ணின் சம்மதத்தோடு ஈசாக்கு இணை ஏற்பு செய்வதற்கு வழிவகை செய்தார்….

அந்த முதியவரின் “பக்தியும், இறை வேண்டலும்” ஈசாக்கு மற்றும் ரெபேக்காள் இருவரும் “இணை ஏற்பு” செய்வதற்கு வழிவகை செய்தது….

ஆபிரகாம் என்ற முதியவரும் ஆபிரகாமின் பணியாளரும் ஆகிய அந்த முதியவர் இருவரும் இணை ஏற்பு என்னும் திருமண வாழ்விற்கு அடித்தளம் அமைத்தார்கள்….

2). முதியோரின் வாழ்வு – இறை பற்றிக்கு துணை நின்றது. (2 தீமோத்தேயு 1: 3 -16 )

பவுல் தீமோத்தேயு அவர்களுக்கு எழுதுகின்ற இரண்டாம் கடிதம் மிக முக்கியமான கடிதம். அது இளம் தலைமுறைக்கு ஆலோசனையாகவும், திருப்பணியாளர்களுக்கு அவசியமான ஒன்றாகவும் அமைந்திருக்கிறது….

பவுலடியார் தீமோத்தேயு அவர்களின் வாழ்வையும், பற்றுறுதியையும், பக்தி வாழ்வையும் குறித்து மகிழ்ச்சியோடு கடவுளுக்கு நன்றி கூறி இந்த கடிதத்தை எழுதுகின்றார்….

திருப்பணியாளராகிய தீமோத்தேயு கடவுள் மீது கொண்டிருந்த ஆழமான பற்று உறுதி, பக்தி, வாழ்வு மூன்றிற்கும் அடித்தளமாக அமைந்திருந்தது தீமோத்தேயு அவர்களின் தாய் மற்றும் பாட்டி ஆகியோரின் வளர்ப்பு முறையே என்று பவுலடியார் ஆணித்தரமாக கூறுகின்றார்…

பவுலடியார் தீமோத்தேயு அவர்களின் பாட்டியாகிய
லோவிசாளுக்குள்ளும், தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்த பக்தியும், பற்றுறுதியும் உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன்(1 : 5) என்று கூறுகிறார்….

தீமோத்தேயு திருப்பணியில் வருவதற்கும், பவுல் அடியாரோடு இணைந்து நிற்பதற்கும், திருப்பணிப்பாடுகளில் பங்கு பெறுவதற்கு ஆழமான ஒப்படைப்பும், அர்ப்பணிப்பும் மிக அவசியம்….

திருப்பணிக்கான இந்த ஒப்படைப்பும், அர்ப்பணிப்பும், அழைப்பும் கடவுள் மூலமாக வரும் அல்லது நிகழ்வுகளினாலும் வரும் அல்லது முன்னோர்களின் வழியாகவும் வரும்….

தீமோத்தேயு அவர்களின் தாய் மற்றும் பாட்டி அவர்களின் வாழ்வு தீமோத்தேயு அவர்களை அர்ப்பணிப்புக்கு நேராக வழி நடத்தி இருக்கிறது என்று பவுலடியார் உறுதிப்பட கூறுகின்றார்….

தீமோத்தேயு அவர்களின் திருப்பணியில் அவரின் தாய் மற்றும் பாட்டி ஆகிய மூத்தோரின் வழிகாட்டுதலும், முன்மாதிரியும், பற்றுறுதியும் வெளிப்பட்டது வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை பவுலடியார் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றார்….

ஆதித்திருச்சபை வளர்வதற்கு, பற்றுறுதியில் நிலைத்து நிற்பதற்கு மூத்தவர்களின் பங்கு எவ்வாறு இருந்திருக்கிறது என்பதை தீமோத்தேயு அவர்களின் முன்னோர்கள் வாழ்வின் வழியாக திருத்தூதராகிய பவுல் திருச்சபைக்கு எடுத்துக்காட்டுகின்றார்…

அன்றைய திருச்சபை, வளர்வதற்கும், திருப்பணியாளர்கள் பற்றுறுதியில் நிலைத்து நிற்பதற்கும், பாடுகளில் பங்கு பெறுவதற்கும், அன்றைய மூத்த குடிமக்களின் ஆழமான பற்றுறுதி வழிநடத்தியது….

3). முதியோரின் ஞானம் – இறை வருகைக்கு ஆயத்தம் செய்தது.(லூக்கா 1 : 5 – 7)

லூக்கா நற்செய்தியாளர் இயேசுவின் பிறப்பு துவங்கி, அவர் வாழ்ந்த விதம், பாடுகள், மரணம், உயிர்ப்பு, உயிர்பிக்குப் பின் என்று மிகவும் விளக்கமாக எழுதியிருக்கின்றார்…

இயேசு கிறிஸ்து எவ்வாறு பிறந்தார், அவர் பிறந்த போது நடந்த நிகழ்வுகளை லூக்கா ஆசிரியர் மட்டுமே மிகவும் விரிவாக எழுதியிருக்கின்றார்….

இயேசு கிறிஸ்துவின் பிறப்பிற்கு முன்பதாக இரண்டு மூத்த குடிமக்களை இந்த திருமறை பகுதி நமக்கு காட்டுகிறது….

அவர்கள் சகரியா மற்றும் எலிசபெத் என்பதை நாம் நன்கு அறிவோம். அவர்களைப் பற்றி லூக்கா ஆசிரியர் மிகவும் அழகாக கூறுகின்றார்….

அவர்கள் இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக

நீதியுள்ளவர்களாயிருந்தார்கள்.(1 :6)….

இருவருக்கும் பிள்ளை இல்லாத இருந்த போதும் பக்தி வாழ்விலும் , பற்றுறுதியிலும், திருப்பணியிலும் குறைவில்லாமல் கர்த்தருக்கு பணியாளர்களாக பணி செய்து வந்தார்கள் என்றும் விவரித்து காட்டுகின்றார்…

இந்த மூத்த குடிமக்களின் ஞானமும், பக்தி வாழ்வும், குற்றமற்ற நடக்கையும் இறை மகன் இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாக்கும் திருப்பணியாளர்களாக கடவுள் அவர்களைத் தெரிந்து கொண்டார் என்பதையும் நமக்கு சுட்டிக் காட்டுகின்றது….

இவர்கள் வழியாக பிறக்கின்றவர்தான் யோவான். அவர்தான் இயேசுவுக்கு குருவாக இருந்தவர். இயேசுவுக்கு திருமுழுக்கு தந்தவர் அல்லது இயேசு அவரிடம் தான் திருமுழுக்கு பெற வேண்டும் என்று காத்திருந்து திருமுழுக்கு பெற்றார்…

அந்த மூத்த குடிமக்களின் மகன் யோவான் அவர்கள் தான் கர்த்தருக்காக வழியை ஆயத்த பண்ணினவர்…..

சகரியா மற்றும் எலிசபெத்து ஆகிய மூத்த தம்பதிகளின், முதியோரின் இல்லற வாழ்வு, அவர்களின் ஞானம், அவர்களின் பக்தி, அவர்களின் திருப்பணி இறை வருகைக்கு, ஆயத்த பணிகளாக, ஆயத்த பணியாளர்களாக அவர்களை உருவாக்கியது….

#. நிறைவாக

இன்றைய திருச்சபைகளில் பல பட்டிமன்றங்களின் தலைப்பு இவ்வாறாக இருக்கிறது திருச்சபை வளர்வதற்கு பெரிதும் துணை நிற்பது இளையோரே – முதியோரே…

இன்றைய முதியோர் என்று சொல்வதைக் காட்டிலும் அன்றைய இளையோர் காட்டுகின்ற நல்வழியில் இன்றைய இளையோர் இணைந்து பயணிப்பது அவசியமான ஒன்று…

முதியோரின் ஆலோசனையும் இளையோரின் செயல்பாடும் இணைந்து பயணிக்கும் பொழுது உயிரோட்டம் உள்ள திருச்சபை உருவாகும்….

இன்றைய தலைமுறைகளுக்கு, திருச்சபைகளுக்கு, சமூகத்திற்கு முதியோரின் பக்தியும், வாழ்வும், ஞானமும் அடித்தளமாக, ஏணிப்படிகளாக இருந்து வருகிறது…

முதியோருக்கும் இளையோருக்கும் உள்ள இடைவெளியை அகற்றிடுவோம், நானிலம் தழைக்க முதியோரை போற்றிடுவோம்….

இறைபணியில்
உங்களோடு …

Rev. Augusty Gnana Gandhi
Trichy – Tanjore Diocese
Ariyalur Pastorate

One thought on “மூத்த குடிமக்களின் ஞானம்”
  1. Excellent message dear Augusty. God bless you. Thank you for this wonderful thoughts.

Comments are closed.