(யோவான் 20:19-29; மத்தேயு 28:16-20; மாற்கு 16:14-18; லூக்கா 24:36-49)

ஆண்டவர் இயேசுவின் கல்லறை இராணுவத்தினரால் சீல்வைக்கப்பட்டு மிக அதிகமான பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. உரோம அரசுக்கு ஏன் இவ்வளவு இராணுவ பாதுகாப்பு நிறைந்த ஒரு கல்லறை தேவைப்பட்டது? இயேசுவைப் பற்றிய கலக்கமா, அல்லது அவர் மரணத்தால் சீடர்கள் செயல்படுவது பற்றிய கலக்கமா? சீடர்களைப்பற்றி அல்லது அவரை பின் தொடர்ந்தவர்களைப் பற்றிய கவலையா? இல்லையெனில் கல்லறையை ஏன் அவ்வளவு பாதுகாத்தனர்?


இயேசுவின் மரணம், அவர் செயல்பாடு, இறுதியானவை அல்ல என்பதை உரோம அரசாங்கமும், பிரதான ஆசாரியரும் நன்கு உணர்ந்திருந்தனர். இவைகளையும் தாண்டிதான் அவர் உயிர்ப்பு நடைபெற்றது. முடிவில் ‘திறந்த வெறுமையான கல்லறையைத் தவிர உரோம அரசால் எதையும் ஆதாரமாகக்கொள்ள முடியவில்லை. இச்சூழலில் மூன்று நிகழ்வுகள் ஒரே பகுதியில் நடந்தன.

1) சதிகாரர்களின் திகில் (மத்தேயு 27: 62-66)

இரு அரசுகளும், சமயவாதிகளும் இணைந்து நடத்திய நாடகத்தைத் தொடர அவர்கள் அடிக்கடி கூடினர். இயேசுவின் கொலையை தங்கள் வெற்றியாகவே பார்த்தனர். இருப்பினும், உயிர்பிரியும் வேளையில் ஏற்பட்ட நில நடுக்கம், பாறைகளின் பிளவு, திருக்கோவில் திரை கிழிதல் அனைத்தும் அவர்களிடம் ஒருவித பீதியை கிளப்பின. மேலும் இயேசு கூறிய ‘முன்றாம் நாள் உயிரோடெழும்புவேன்’ என்ற செய்தி அவர்களைக் குடைந்தது. ஒருவேளை அவர் உடலை சீடர்கள் திருடிச்செல்வார்களோ என்ற சந்தேகம் வேறு எழும்பியது. தங்கள் வெற்றி ஆர்ப்பரிப்பின் நடுவே பயம் தலைகாட்டியது. உண்மையை மறைக்க, நிலைமையை சமாளிக்க எவ்வளவு கோவில் காவலர் படையை அவர்களால் பயன்படுத்த முடியுமோ அவ்வளவு பயன்படுத்தவும் முடிவெடுத்தனர். கல்லறைக்கு முத்திரையிட்டு காவல்வீரரால் கருத்தாக காவல்செய்தனர். இவ்வளவு பாதுகாப்பு அடுக்கையும் தாண்டி, இயேசுவின் உயிர்ப்பு நடந்ததுதான் திகிலைத் தந்தது.

2) பயந்தோரின் ஆச்சரியம்: எதிர்பாராத சம்பவங்களால் நிலைகுலைந்திருந்த பின் அடியார்கள்

உரோம பேரரசும், யூத சமயவாதிகளும் தலைவனை ஒழித்துகட்டியபின் பிறரை மிக எளிதில் விசாரணை இன்றி கொல்ல வாய்ப்பு உண்டு. கதவுகளை தாழிட்டு கொண்டிருந்த சீடர்கள். இயேசுபிறந்த போதும் சிலர் பயந்தனர், கலங்கினர். அவரை சாகடித்த பிறரும் சீடர்கள் பயப்பட்டனர். ஆனால் இக்கூட்டத்திலிருந்த பெண்கள் மிக தைரியமானவர்கள். மாற்கு ஆசிரியர் பெண்கள் ஒரே ஒரு முறை மட்டுமே பயப்பட்டனர் என்கிறார் (16:18). ஒடுக்கம், திகைப்பு, பயம், ஓட்டம், அமைதி கலந்த நிலை. ஆனால் ஆண்கள் காற்றையும், கடலையும் அமர்த்தியபோதுகூட பயப்பட்டனர் (4:41, 6:50). மறுருபமலையில் பயந்து பேசினர் (9:6). இயேசு கொலை செய்யப்படுவார் என அறிந்தபோது பயந்தனர் (9:32). எருசலேமிற்கு போகும் பயணத்தில் பயந்தனர் (10:32). பயம், கலக்கம், சந்தேகம் அனைத்தும் அவர்களிடம் இணைந்திருந்தன (லூக்கா 24:37,38).
இப்படிப்பட்ட பய உணர்வுகளைப் போக்க, தான் ஆவிமட்டுமல்ல, உடலோடு கூடிய ஒரு நபர் எனக் கூறுகிறார் இயேசு. இதற்காகவே சாப்பிடக் கேட்கிறார், சாப்பிடுகிறார். பின்னரே மகிழ்கின்றனர். சிலுவை வழிக்கு நேரான ஒப்படைப்பை புதுப்பிக்கிறார். பயமே முடிவு அல்ல, தொடர்ந்து உங்கள் பணி தொடங்க வேண்டும் என அறிவுறுத்துகிறார். பயத்தைப் போக்கி தைரியமூட்டுகிறார். புத்தெழுச்சி பெற்றவர்களாக, புது மின்சார சக்தி பெற்றவர்களாக செயல்படுகின்றனர்.

3) சந்தேகித்தோர் சரணடைதல்

தோமாவும் வேறு சிலரும் இதில் அடங்குவர். தோமா அதிகமாக இயேசுவுன் போதனையால் கவரப்பட்ட ஒருவர். இயேசுவின்பால் அன்புள்ளம் கொண்டவர். இயேசுவின் மரணத்திற்குப்பின் தனியாகவே சிந்தித்துத்திரிந்தார். இயேசு சீடர்கள் மத்தியில் வந்து ‘சமாதானம்’ சொன்னார் என்பதை நம்பவில்லை. ஆகவே காணாமற்போன ஒரே ஆட்டுக்குட்டியை தேடும் ஆண்டவர் திரும்பவும் வந்தார்.
யோவானின் நூலின்படி தோமா இயற்கையாகவே செயல்பூர்வமாக சிந்திப்பவர். எருசலேம் சென்று இயேசுவோடு இருக்க சீடரைத் தூண்டினார் (யோவான் 11:16). நீவிர் போகிற இடம் தெரியாது, வழியை எப்படி தெரியும் என்கிறார் இவர் (14:5). தன்னால் உணரக் கூடியவற்றை மட்டும் நம்பும் தன்மை உடையவர். தோமா சங்கீதக்காரனைப் போன்ற நம்பிக்கை உடையவர். கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்து உணருங்கள் என்று சங்கீதக்காரன் கூறினார். இங்கு தோமா, தான் காயங்களை தொட்டு பார்க்காமல் நம்பமாட்டேன் என்றார்.


இம்மனநிலையை மாற்ற கிறிஸ்துவும் உடன்படுகிறார். ஆண்டவரும் தோமாவுற்காகவே இன்னொருநாள் வந்து தோமாவின் முன் காட்சியளிக்கிறார். தமது காயங்களைத் தொட்டுப்பார்க்க அழைக்கிறார். ஒரு கட்டத்தில் இயேசுவின் காயங்களைத் தொடாமலேயே, பார்த்து தோமா பரவசமடைகிறார். ‘ஆண்டவரே, என் ஆண்டவரே’ என பதறுகிறார். கிறிஸ்துவை ஆண்டவராக மட்டுமே கண்ட தோமா, இறைவராகவும் கண்டு பரவசத்தால், அதிர்ச்சியால் சரணடைகிறார். உணர்ச்சி பூர்வமான நம்பிக்கையைவிட அறிவுபூர்வமான நம்பிக்கைமேல் என்பதே விசுவாச அறிக்கையின் உச்சகட்டம். பற்றுறுதி என்பது பகுத்தறிவிற்கு எதிரானது அல்ல, மாறாக பகுத்தறிவையும் தாண்டியது. அன்பான திருச்சபையே, கூனி குறுகிய நிலை, பயம், சந்தேகம் இவற்றில் தவறு எதுவும் இல்லை. (அஞ்சுதல் அஞ்சாமை பேதமை -குறள்). ஆனால் தேவையற்ற ஆர்ப்பரிப்பும், பயமும், சந்தேகமுமே முழு வாழ்க்கையாக அமைந்துவிடக்கூடாது. இக்குழுவினர் அனைவரும் பயத்தையும், சந்தேகத்தையும் அகற்றிவிட்டு இறுதியில் நம்பிக்கை ஊட்டும் நற்செய்தியை பறைசாற்ற கிளம்பிவிடுகின்றனர்.

இன்று திருச்சபையில் உண்மையான நம்பிக்கை இல்லாமல், ஆண்டவரின் ஜெபத்தையும், விசுவாசப் பிரமாணத்தையும் மந்திரம்போன்று கடகடவென கூறுகிறோம். ஆனால் தோமாவைப் போன்று கேள்வி எழுப்பி, அனுபவித்து, ஆண்டவரை கடவுளை ஏற்றுக்கொள்கிற அனுபவம் நம் திருச்சபை மக்களிடம் உண்டா? இத்திருச்சபைப் பணியைச் செய்ய ஆவியை ஊதி அனுப்பப்பட்ட சீடர்களைப் போன்று இன்று நாம் செயல்படுகிறோமா? இன்றும் பய உணர்வுடன் வாழும் எண்ணற்ற மக்கள் உண்டு. அநியாயமாக குற்றவாளியாக்குகின்றனரே? தவறு இல்லாத என்னை எப்போது கைது செய்வார்களோ? எங்கள் வீடு எப்போது இடிக்கப்படுமோ? விலைவாசியை எப்படி சமாளிக்கப்போகிறோம்? நாளைக்கு கூலி வேலை கிடைக்குமா? தொழிற்சாலையில் உண்மையாக நடந்தால் என்ன நடக்குமோ? என பயப்படுகிறோம்.

பெரும்பாலான கிறித்தவ திருச்சபைகள் ஆறுதல் கொடுப்பதோடு நின்றுவிடுகின்றன. இதற்கென ஈடுபடுவது எப்போது? மனந்திரும்புதலும், பாவமன்னிப்பும் எருசலேம் துவங்கி உலகமெங்கும் செய்யப்பட வேண்டும் (லூக்கா24:47). அதனை துணிந்து செய்தவர்கள் அவர் சீடர்கள். குறிப்பாக தோமா இந்தியாவில் வந்து ஈட்டியால் குத்தப்பட்டு இறந்துள்ளார். பயப்படாமல், சந்தேகப்படாமல் நற்செய்திப்பணியை செய்வோம்.
அருட்பணி.முனைவர். சாலமன் விக்டஸ்,
அருட்பணி.முனைவர். சாலமன் விக்டஸ்,

இறையியலாளர், இந்தியா.