கிறிஸ்து தன்னை வெளிப்படுத்தல்

தை 6 2022

மத்தேயு 3:13-17

•             தை மாதம் 6ம் திகதி கிறிஸ்து தன்னை யூதர் அல்லாத எல்லோருக்கும் வெளிப்படுத்தும் திருநாளை நாம் நினைந்து கொள்ளுகின்றோம். இந்நாளையே கீழைத்தேய வைதீக திருச்சபைகள் கிறிஸ்து பிறப்பு தினமாக நினைத்து கொள்ளுகின்றனர். மத்தேயு 2:1-12ல் இயேசுவின் பிறப்பை காண்பதற்காக சாஸ்திரிகள் அல்லது ஞானிகள் வருகைத் தந்து அரசனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பொன்னையும் மரணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வெள்ளைப்போளத்தையும் அவரது தியாகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தூபவர்க்கத்தையும் பரிசாக அளித்தனர்.

•             கடவுளின் வெளிப்பாட்டை நாம் இரண்டாக வகுக்கலாம். முதலாவதாக பொது வெளிப்பாடு என்பது கடவுள் தன்னை தனது விருப்பப்படி தனது இருப்புநிலையை வெளிப்படுத்துவதாகும். சிறப்பு வெளிப்பாடு என்பது கடவுள் கிறிஸ்து மூலம் தன்னை வெளிப்படுத்தியது ஆகும். பாவமுள்ள ஒரு மனிதன் தனது வீழந்துபோன நிலையில் இறைவனை புரிந்துக் கொள்ள முடியாது. இதனை புரிந்து கொள்ள வேண்டுமெனில் இறையருள் அவசியமாகும்.

•             தொடக்கநூல் 16:1-16ல் கடவுள் தன்னை அடிமைப் பெண்ணாகிய ஆகாருக்கு வெளிப்படுத்துவதைப் பார்க்கின்றோம். ஆரம்பத்தில் கடவுளின் வெளிப்பாடு ஆபிரகாமுக்கு இருந்தது (தொடக்கநூல் / ஆதியாகமம் 12:1-3). இவ்வெளிப்பாட்டை தற்போது இறைவன் தனது எல்லைகளுக்கு அப்பாற்சென்று ஆணாதிக்கம் மிகுந்த சமூகத்தில் ஒரு பெண்ணுக்கும் அதுவும் அடிமைப் பெண்ணுக்கு அத்துடன் கணவனால் துரத்தப்பட்ட பெண்ணுக்கும் குழந்தைக்கும் கடவுள் தன்னை ஓர் விடுதலையின் கடவுளாக தன்னை வெளிப்படுத்துகின்றார். இவ்வெளிப்பாடு இனம், மொழி, சமயம், பால் அனைத்தும் கடந்ததாகும்.

•             இயேசுவின் பிறப்பில் அவரின் வெளிப்பாட்டை கண்டுகொள்ள நீதிச்சட்டத்தினை கடைப்பிடிக்க மக்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை (ரோமர் 9:1-15). ஆனால், தூர தேசத்தில் இருந்து வந்த நீதிச்சட்டத்தை அறியாத ஞானிகள் இவ்வெளிப்பாட்டிற்கு சுதந்திரவாளி ஆயினர். அத்துடன் தந்தையுடன் வாழ்ந்த மகன் தந்தையின் மன்னிக்கும் இதயத்தை சரிவர புரிந்துக் கொள்ளவில்லை. மாறாக, தந்தையை விட்டு தூரம் வாழ்ந்த இளைய மகன் தந்தையின் மன்னிக்கும் மனதை புரிந்துக் கொண்டு சுதந்திரவாளி ஆகினான் (லூக்கா 15:11-32)

•             யூதர்கள் மத்தியில் பாவமன்னிப்புக்காக இரண்டு முறைமைகளை பின்பற்றினர். முதலாவதாக, ஒரு ஆட்டை எடுத்து அதனை வெட்டி, அதன் இரத்தத்தை பாவம் செய்த மனிதன் மீதும் பலிபீடத்தின்மீதும் தெளித்தனர். மேலும், இன்னுமொரு ஆட்டை தெரிந்தெடுத்து பாவம் செய்த நபருடைய பாவங்கள் அனைத்தையும் அதன் ஆட்டின் தலைமீது சுமத்தி ஆட்டை வனாந்திரத்திற்கு துரத்திவிடுவர். வனாந்திரத்திலே அவ்வாடு மரிக்கும்போது, பாவம் செய்த மனிதனது பாவங்களும் மரித்துப்போகும். இதன்படி, இச்சடங்குக்கான பணம் அவசியமாகின்றது. அத்துடன், பிரதான ஆசாரியன் இச்சடங்கினை நிறைவேற்றுவதினால் அவனின் அதிகாரமும் இங்கு காணப்படுகின்றது.

•             ஆண்டவர் இயேசு யோவான்ஸ்நானகனிடம் திருமுழுக்கு பெற சென்றிருந்தார். யோவான்ஸ்நானகன் பாவமன்னிப்புக்கான திருமுழுக்கைப் பெறுமாறு மக்களுக்கு பகிரங்க அழைப்பு விடுத்திருந்தார். மக்கள் இங்கு அதிகமாக சென்றனர். ஏனெனில், இங்கு பணமோ அதிகாரமோ தேவைப்படவில்லை. இப்படிப்பட்ட இடத்திலேயே ஆண்டவர் இயேசு தன்னை வெளிப்படுத்தினார். அதாவது, அதிகாரத்திற்கும் பணத்திற்கும் தன்னை கட்டுப்படுத்தியவராக அல்ல அதற்கு அப்பால் தன்னுடைய செயற்பாடு அமையப்போகின்றது என்றும் தனது பணி அதிகார வர்க்கத்திற்குள்ளே கட்டுப்படுத்தப்படாமல் மாறாக, சமுதாயத்தில் வலுவிழந்த அடையாளமிழந்த பாவிகளுடனேயே காணப்படப்போகின்றது என்பதையும் வெளிப்படுத்தினார். மேலும், தன்னுடைய பணி துன்பத்தினுடாக தன்னை மரணத்திற்கு உட்படுத்தி மக்களை மீட்கும் பணியாக காணப்படும் என்பதையும் வெளிப்படுத்தினார்.

•             கடவுளின் வெளிப்பாட்டை நாம் திருச்சபைக்குள் மாத்திரம் அல்லது கிறிஸ்தவர்களுக்குள் மாத்திரம் அல்லது திருமறைக்குள் மாத்திரம் கட்டுப்படுத்தாமல் அவரது வெளிப்பாட்டை இவைகளுக்கு அப்பாலே சென்று பார்க்க அழைக்கப்படுகின்றோம். மார்டின் லூதர் போன்றோர் திருச்சபைக்குள் கடவுளின் அழைப்பை கட்டுப்படுத்திக்கொள்ள முற்படுத்தினார். ஆனால், சீர்த்திருத்தவாதியாகிய சுவங்கிலி போன்றோர் திருச்சபைக்கும் திருமறைக்கும் வெளியே தத்துவ அறிஞர்களாகிய பிளேட்டோ, அரிஸ்டோட்டில் போன்றவர்களிலும் கடவுளின் வெளிப்பாடு உண்டென காட்டி நின்றனர்.

அருளம்பலம் ஸ்டீபன்
அருளம்பலம் ஸ்டீபன்

இலங்கை.

4 thought on “பிரசன்னத் திருநாள்”
  1. Wonderful and meaningful message. Very much blessed. I want to such publication to receive. If possible send. Or send me the details to follow. Thank you.

Comments are closed.