அன்பான இறைமக்களே உங்கள் அனைவரையும் கிறித்து இயேசுவின் திருப்பெயரில் வாழ்த்தி வரவேற்கிறேன்.; ‘பற்றுறுதியும் எமது தாய்மொழியும்’ என்கின்ற தலைப்பில் சில விடயங்களை சிந்திக்க இருக்கிறோம். அதற்க்கு ஆதாரமாக முதல் உடன்படிக்கை நூலாகிய தொடக்க நூல் 11: 1- 9 வரை அடங்கியுள்ள திருமறை பகுதியை ஆதாரமாக எடுத்துக்கொள்வோம்.


நாம் வாழும் இன்றைய உலகில் ஒரு மொழி ஆதிக்கம், (பெரும்பாண்மையானவர்கள் பேசுகின்ற மொழியின் ஆதிக்கம); பிற மொழியின் மீதும், பிற மொழி பேசுகிறவர்கள் மீதும் திணிக்கப்படுவதை நாம் அவதானிக்கலாம். எடுத்துக்காட்டாக அமெரிக்கா வெள்ளை தேசியமும் (White Nationalism), இந்தியாவில் இந்தி திணிப்பை ஆதரிக்கும் இந்து தேசியமும் (Hindu Nationalism)இ பிற மொழி பேசப்படுகிறவர்களின் மீதும் சிறுபான்பை சமூகங்களின் மீதும் வன்முறைகளை கட்டவிழ்த்துவிகின்றன. மியான்மாரில் பௌத்தத்தை உயர்த்திப்பிடிக்கும் தேசியத்தினால் ரோஹிஞ்சியா இஸ்லாமியர்கள் நாடுகடத்தப்படுகிறார்கள், அதே போல எமது நாட்டிலும்; பிறகு தமிழ் மக்கள் அரசியல், கல்வி, பொருளாதார ரிதியாக தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகிறோம்.
இத்தகைய ஒரு மொழி திணிப்பிற்கு திருமறை என்ன பதிலுரை கூறுகிறது?


• கடவுள் ஒரு மொழி திணிப்பை. ஒரு கலாச்சார திணிப்பை ஏற்றுக்கொள்கிறாரே ? என்பதை இன்று சிந்திப்போம்.

பாபேல் கோபுரத்தின் சூழலும் பின்னணியமும்:
பிரமிடு வடிவில் படிகள் கொண்ட உயர்ந்த கோபுரங்கள் பாபிலோனுக்கு அடையாளமாக விளங்கின. நகரின் வளர்ச்சியையும் கலாச்சாரத்தையும் காட்டுபவையாக அவை இருந்தன. கடவுளின் மலையாக அக்கோபுரங்கள் கருதப்பட்டன.
இத்தகைய ஒரு கோபுரத்தினைப் பின்னனியாகக் கொண்ட இப்பகுதி உலகில் பல மொழிகள் எவ்வாறு தோன்றின, மக்கள் பல்வேறு நாடுகளில் ஏன் சிதறி வாழ்கிறார்கள், பாபேல் என்னும் சொல்லுக்கு குழப்பம் என்றும் பொருள் எவ்வாறு வந்தது போன்றவற்றிற்கான காரணங்கள் எவை என்பதனை எடுத்துக்காட்டுகிறது. பல மொழிகள், மக்கள் சிதறி வாழ்கின்ற நிலை, மக்களிடையே குழப்பம் போன்றவை பாவத்தின் தீய விளைவுகள் என ஆசிரியர் எடுத்துக்காட்டுகிறார்.

  • ஒரு மொழியாதிக்கத்தை எதிர்க்கும் கடவுள்

பிரபலமான சொல்லாடல் உண்டு ‘இராணுவமும் கடற்படையும் அலுவல் ரீதியான பேச்சுவழக்காக கொண்டுள்ளனரோ அதுவே அந்நாட்டின் மொழி. வணிக, இராணுவ, கலாச்சார ஆதிக்கத்தை முன்னெடுப்பதற்காக ஒரு மேலாதிக்க சக்தி தனது மொழியை மற்ற மக்கள் மீது திணிக்க முடியும். இத்தகைய திணிப்பின் விளைவாக, உள்ளூரில் வாழும் மக்களின் மொழி, பூர்வீக மொழிகளும், கலாச்சாரங்களும், அவர்களின் சமூக தொடர்புகளும் புறக்கணிக்கப்பட்டு, ஓரங்கட்டப்படுகின்றன. மேலாதிக்க சக்தியின் நன்மைக்காகவே இந்தத் திணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

அத்தகைய மேலாதிக்க மொழிக்கான குறிச்சொல்;

லிங்குவா ஃபிராங்கா’ ‘Lingua Franca ‘ ஆகும்,

A language that is adopted as a common language between speakers whose native languages are different.
எ. கா: அமெரிக்காவில் ஆங்கிலம், இந்தியாவில் ஹிந்தி, இலங்கையில் சிங்களம்,


பிரெஞ்சு அதிகாரத்தின் ஆதிக்கத்தின் போது வணிக, சர்வதேச நிர்வாக, வர்த்தகததிறக்காக பிரெஞ்சு மொழி அலுவல் மொழியாக மாறியது என்பதை இந்த சொற்றொடர் அங்கீகரிக்கிறது. ஆனால் பிரெஞ்சு ஆதிக்கத்தின் வீழ்ச்சியுடன் மேலாதிக்க மொழி பிரெஞ்சு மொழியாக இல்லாத போனது, ஆனாலும் இந்த சொற்றொடர் ஆதிக்க எண்ணத்துடன் திணிக்கப்பட்ட மொழிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
மிக சமீப காலத்தில், ‘லிங்குவா ஃபிராங்கா’ என ஆங்கிலத்தையும் அழைக்கலாம், ஆங்கிலம் முதலில் பிரித்தானிய பேரரசு ஆட்சியின் மொழியாகவும் பின்னர் அமெரிக்காவின் மேலாதிக்க சக்தியாகவும் இருந்தது. மொழித்திணிப்பு உள்ளுர் மொழி, கலாச்சாரம், பழக்கவழக்கத்தின் மீது பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்.


பாபேல் கோபுரத்தின் வழியாக எமக்கு

சொல்லப்படும் செய்தி என்ன?


படைப்பாளியான கடவுள் ஒற்றை மொழியைத்

திணிப்பதைக் கண்டு கலங்குகிறார்:
திருமொழி 6 இல் அப்பொழுது ஆண்டவர், ‘இதோ! மக்கள் ஒன்றாக இருக்கின்றனர். அவர்கள் எல்லோரும் ஒரே மொழி பேசுகின்றனர். அவர்கள் செய்யவிருப்பதன் தொடக்கமே இது! அவர்கள் திட்டமிட்டுச் செய்யவிருப்பது எதையும் இனித்தடுத்து நிறுத்த முடியாது என்று கூறி செயல்படுகிறார்.
மக்களனைவரும் ‘நமது பெயரை நிலை நாட்டுவோம்’ என்ற ஆதிக்க சிந்தனையுடையவரடகளாய் மாறிப்போனார்கள்.
திருமொழி 4 பின், அவர்கள் ‘வாருங்கள், உலகம் முழுவதும் நாம் சிதறுண்டு போகாதபடி வானளாவிய கோபுரம் கொண்ட நகர் ஒன்றை நமக்காகக் கட்டி எழுப்பி, நமது பெயரை நிலை நாட்டுவோம்’ என்றனர்.

வெளிப்படையாக, ஒரு மொழியின் ஆதிக்கம் (ஒரு கலாச்சாரம்) ஒரு சிலருக்குப் பொருளாதார மேம்பாட்டை, அரசியல் ஆதிக்கத்திற்கான வரம்பற்ற சக்தியை உருவாக்குகிறது.
அந்த மேலாதிக்க லட்சியத்திற்கு கடவுளின் பதில் ‘சிதறல்’
கடவுள் அங்கு தீமைக்காக திணிக்கப்பட்ட ஒற்றுமையை கடவுள் உடைக்கிறார்: பாபேலைக் கட்டியவர்கள், பொருளுக்கும், செல்வத்திற்கும் மகிமையை கொடுத்தார்கள், அவற்றையே மகிமை என்று எண்ணினார்கள், புகழைத் தேடுவதற்காக ஆசைப்பட்டார்கள், அதிகாரமற்றவர்களாக ஆக்கப்படுவோமா என்ற எண்ணம் இவற்றால் ஆட்கொள்ளப்பட்டு இருந்தார்கள். ஆதிப்பெற்றோரும் அதே பாவத்தைச் செய்தார்கள்
தொடக்க நூல் 3: 5 ஏனெனில் நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் கடவுளைப் போல் நன்மை தீமையை அறிவீர்கள் என்பது கடவுளுக்குத் தெரியும்;’ என்றது கடவுளைப் போல் ஆகவேண்டுமென நினைத்தார்கள். படைக்கப்பட்டதின் நோக்கத்தை மறந்தார்கள். எனவே கடவுள் வாருங்கள், நாம் கீழே போய் அங்கே ஒருவர் மற்றவரின் பேச்சைப் புரிந்து கொள்ள முடியாதபடி, அவர்கள் மொழியில் குழப்பத்தை உண்டாக்குவோம்’ என்றார். மானிடர் கட்டிக்கொண்டிருந்த நகரையும் கோபுரத்தையும் காண்பதற்கு ஆண்டவர் கீழே இறங்கி வந்தார். அப்பொழுது ஆண்டவர், ‘இதோ! மக்கள் ஒன்றாக இருக்கின்றனர். அவர்கள் எல்லோரும் ஒரே மொழி பேசுகின்றனர். அவர்கள் செய்யவிருப்பதன் தொடக்கமே இது! அவர்கள் திட்டமிட்டுச் செய்யவிருப்பது எதையும் இனித்தடுத்து நிறுத்த முடியாது. வாருங்கள், நாம் கீழே போய் அங்கே ஒருவர் மற்றவரின் பேச்சைப் புரிந்து கொள்ள முடியாதபடி, அவர்கள் மொழியில் குழப்பத்தை உண்டாக்குவோம்’ என்றார்.
ஆண்டவர் அவர்களை அங்கிருந்து உலகம் முழுவதிலும் சிதறுண்டுபோகச் செய்ததால் அவர்கள் நகரைத் தொடர்ந்து கட்டுவதைக் கைவிட்டனர்.

  • பன்முகத்தன்மையை அங்கீகரிக்கும் கடவுள் (திருத்தூதர் பணிகள் 2: 1-11)

பாபேல் சம்பவம் ‘பன்முகத்தன்மை’ விவிலிய இறையியலுக்கு ஆழமான அடித்தளத்தைக் கொடுக்கிறது.
‘பன்முகத்தன்மையே படைப்பிற்கான கடவுளின் விருப்பமாக இருந்தது. இன, மொழி, பன்முகத்தன்மைகளை கடவுளின் ஆசீர்வாதமாக நாம் கருதி வரவேற்க வேண்டும். சிதறி போகவைத்தது சிறப்பான வாழ்விற்கு வழிவகுத்தது. அது தண்டனை அல்ல, அது கடவுள் அருளிய அருட்கொடை’.
மனிதர்களின் மேலாதிக்க சக்தியை கடவுள் மறுக்கிறார், ஒவ்வொரு மொழிகளையும், மொழிகளின் கலாச்சாரத்தையும் கடவுள் அங்கீகரிக்கிறார்;. இது நிச்சயமாக, மொழியியல் பன்மைத்துவத்தை கொண்டாடும் பெந்தெகொஸ்தே அனுபவத்தோடு இணைக்கப்படவேண்டியது.
பெந்தேகோஸ்தே என்றால் 50 ஆவது நாள் என்று பொருள், கோதுமை அறுவடைக்காக நன்றிசெலுத்தும் யூத திருவிழா, பாஸ்கா திருவிழாவுக்குப்பின் ஐம்பதாவது நாளில் கொண்டாடப்பட்டது. கி.மு. 2ஆம் நூற்றாண்டிலிருந்து சீனாய் மலை உடன்படிக்கையை நினைவு கூரும் நாளாகவும் இது கொண்டாடப்பட்டது. பன்னாடுகளில் பரவியிருந்த யூதர் அந்நாளில் எருசலேமில் கூடினர். இதன் மூலம் பேதுருவின் அருளுரை (2:14-36) பன்னாட்டுக் குடிமக்களுக்கு வழங்கப்பட்டு உலகளாவிய நம்பிக்கை அறுவடையைத் தந்தது.
திருத்தூதர் பணிகள் 2:3 நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள்.
தூய ஆவி எனும் நெருப்பில் இயேசு திருமுழுக்குக் கொடுப்பார் எனத் திருமுழுக்கு யோவான் உரைத்தது (லூக் 3:16) இங்கு நிறைவேறியது. இறைவாக்கினர் யோவேல் தூய ஆவி பொழிதல் குறித்துச் சொல்லியதும் (யோவே 2:28-19) நிறைவேறியது.
நெருப்பு போன்ற நாவுகளுக்கு என்ன பொருள்
நாவுகள் பேச்சு வரத்தைச் சுட்டுகின்றன. இங்கு அவை நற்செய்தி அறிவித்தலைச் சுட்டுகின்றன. நெருப்பு கடவுளின் தூய்மைப்படுத்தும் செயலைச் சுட்டுவது. சீனாய் மலை நிகழ்வில் பழைய ஏற்பாட்டின் சட்டத்தைக் கடவுள் வானத்திலிருந்து நெருப்பு வரச் செய்து உறுதிப்படுத்தினார் (விப 19:16-18). பெந்தக்கோஸ்து விழாவில் நெருப்பை வரவழைத்து தூய ஆவியின் பணியை அவர் உறுதிப்படுத்துகிறார். சீனாய் மலை நிகழ்வில் நெருப்பு ஒரே இடத்தில் வந்தது; இங்குப் பல்வேறு மக்கள் மீது இறங்கி நம்பிக்கை கொள்ளும் யாவரிடமும் கடவுளின் உடனிருப்பு உள்ளதைச் சுட்டிக்காட்டியது. பல மொழி வரம் திருச்சபையின் உலகளாவிய பணியைச் சுட்டிக்காட்டுகிறது
திருத்தூதர் பணிகள் 2: 4 அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வௌ;வேறான மொழிகளில் பேசத்தொடங்கினார்கள். இது ஓர் அடையாளம். இந்த அடையாளம் திருச்சபையின் உலகளாவிய பணியைச் சுட்டிக்காட்டுகிறது.


திருத்தூதர் பணிகள் 2: 9-11 இல் இடம் பெறும் செய்தி முக்கியமானது. இங்குப் பல நாடுகளின் பட்டியல் தரப்பட்டுள்ளது. இந்நாடுகளிலிருந்து வந்த யூதர் அடிமைத்தனத்தாலும் சமயத் துன்புறுத்தல்களாலும் சிதறுண்டவர்கள். பேதுருவின் அருளுரையைக் கேட்ட இவர்கள் பின்னர் தங்கள் நாடுகளுக்குச் செல்லத் துணிவுடன் திரும்பியிருக்க வேண்டும் ஆண்டவர் கைது செய்யப்பட்ட போது அச்சத்தோடு காணப்பட்டார் பேதுரு,
தூய மத்தேயு 26: 69 பேதுரு வெளியே முற்றத்தில் உட்கார்ந்திருந்தார். பணிப்பெண் ஒருவர் அவரிடம் வந்து, ‘நீயும் கலிலேயனாகிய இயேசுவோடு இருந்தவன் தானே’ என்றார். 70 அவரோ, ‘நீர் சொல்வது என்னவென்று எனக்குத் தெரியவில்லை’ என்று அவர்கள் அனைவர் முன்னிலையிலும் மறுதலித்தார். 71 அவர் வெளியே வாயிலருகே சென்றபோது வேறொரு பணிப்பெண்; அவரைக் கண்டு, ‘இவன் நாசரேத்து இயேசுவோடு இருந்தவன்’ என்று அங்கிருந்தோரிடம் சொன்னார். 72 ஆனால் பேதுரு, ‘இம்மனிதனை எனக்குத் தெரியாது’ என ஆணையிட்டு மீண்டும் மறுதலித்தார். 73 சற்று நேரத்திற்குப்பின் அங்கே நின்றவர்கள் பேதுருவிடம் வந்து, ‘உண்மையாகவே நீயும் அவர்களைச் சேர்ந்தவனே; ஏனெனில் உன் பேச்சே உன்னை யாரென்று காட்டிக்கொடுக்கிறது’ என்று கூறினார்கள்.
பேதுரு கலிலேயா பேச்சுவழக்கை உடையவர் ஆனால் எருசலேமில் வாழ்ந்த யூதர்கள் ரோம கட்டுப்பாட்டுக்குள் வாழ்ந்தனர் அங்கே ரோமர்களின் பேச்சுவழக்கு நடைமுறையில் இருந்தது, ராணுவமும் கடற்படையும் முகாமிட்ட இடம், கயபா விடும் எருசலேமில் இருந்தது, பேதுரு முற்றத்தில் அமர்ந்து இருக்கிறார், அங்கே ஆண்டவர் இயேசு காவலில் சித்தரவதை செய்யப்படுகிறார், கிண்டல் செய்யப்படுகிறார், துன்புறுத்தப்படுகிறார், அங்கே நடப்பவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த பேதுரு, உயிர்பயத்தில் மறுதலிக்கிறார். எங்கு மறுதலித்தரோ , அதே எருசலேமில் தனது கலிலேய பேச்சுவழக்குப் பிரசாங்கத்தால் 3000 பேரை திருச்சபையில் சேர்க்கிறார். அவரது இந்த மாற்றத்திற்குத் தூய ஆவியே காரணம். தூய ஆவி அவரை வல்லமையுள்ளதோர் அருளுரையாளராக மாற்றிவிட்டார்.
அதே தூய ஆவியரின் வல்லமையால், தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வௌ;வேறான மொழிகளில் பேசத்தொடங்கினார்கள். (திருத்தூதுவர் பணிகள் 2: 4) இன்றைக்கு பல்வேறு மொழி பேசும் நாடுகளில் கிறிஸ்துவை சொந்த மீட்பராக மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் காரணம் என்ன ? பல மொழிகளில் நற்செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது, ஆக பல மொழிவரம் பரிசுத்தாவியினால் திருச்சபைக்கு கொடுக்கப்பட்ட கொடை, அதை நாம் சிதைத்து விடக்கூடாது.
இச்சம்பவத்தால் கடவுள் சொல்ல விரும்பும் செய்தி என்ன ?

  1. ஒரு மொழியாதிக்கத்தை எதிர்க்கும் கடவுள்
  2. பன்முகத்தன்மையை அங்கீகரிக்கும் கடவுள்

மேலாதிக்கத்தை அமுல்படுத்த எத்தனை செயலணி வந்தாலும் கடவுள் அதைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்கமாட்டார். கண்டிப்பாக செயல்படுவார்,
ஒரு நாடு, ஒரு சட்டம், என்பதை நடைமுறைப்படுத்தலாம். அப்படி நடந்தாலும் கூட ஆதிதிருச்சபையின் மக்களை வழிநடத்தியது போல எம்மையும் கடவுள் தூயாவியானவரைக் கொண்டு எம்மை பாதுகாத்து ஆற்றல்படுத்துவார்.
பாபேல் கோபுரத்தை தகர்த்த கடவுள், தூயாவியாரை அனுப்பித் தொடக்கக்கால திருஅவையை அற்றல்படுத்திய கடவுள் நம்மையும் பாதுகாத்துப் பெலப்படுத்துவாராக ஆமென்.

ஜெபசிங் சாமுவேல்,
ஜெபசிங் சாமுவேல்,

அருட்பணியாளர்,இலங்கை

4 thought on “பற்றுறுதியும் தாய் மொழியும்”
  1. நல்ல ஆய்வுச் சிந்தனை
    ஆகச் சிறந்த கட்டுரை
    தற்காலச் சூழலுக்கு பொருத்தமான இறையியலாக்கம்
    மண்றாடியாரே வாழ்த்துக்கள்

  2. மிகச் சிறந்த கருத்துக்கள்! ஒற்றை மொழித் திணிப்பை எதிர்க்கும் நம் இறைவன் பன்மொழியை அங்கிகரித்ததோடு மௌன மொழியும் பேசினார்!

Comments are closed.