வசந்தகாலப் பூக்கள் 15

பதினைந்தாம் தியானம்

எமது சரீரத்தில் பிரதானமாக வாய் காணப்படுகின்றது. இது பல பயன்பாடுகளை உடைய ஓர் அங்கமாகும். ஓர் மனிதருடனோ அல்லது சமூகத்தினுடனோ நல்லுறவைப் பேணுவதற்கு வாயின் வார்த்தைகள் அவசியமாகின்றன. வார்த்தைகள் நன்றாக அமையும்போது நல்லுறவு பேணப்படுகின்றது. வார்த்தைகள் தவறாகக் காணப்படும்போது உறவுகள் உடைந்து போகின்றன. சிறப்பாக இந்நாட்களில் நாங்கள் வயிற்றுக்குக் கட்டுப்பாடு விதிக்கின்றோம். அது உணவுக் கட்டுப்பாடாகவோ நீர்க்கட்டுப்பாடாகவோ மற்றும் வேறு கட்டுப்பாடுகளாகவோ அமையலாம். ஆனால் வயிற்றுக்கு அல்ல மாறாக வாய்க்கும் கட்டுப்பாடு அவசியமாகின்றது.

மாற்கு 7:20 இல் ஆண்டவர் இயேசு மனிதனுடைய வயிற்றுக்குள் செல்பவைகள் அவனைத் தீட்டுப்படுத்துவதில்லை. மாறாக வாயிலிருந்து வெளிவருபவைகளே அவனைத் தீட்டுப்படுத்துகின்றன என்கிறார். இதனையே வள்ளுவப் பெருந்தகை “தீயினால் சுட்டவடு ஆறும் ஆறாது நாவினால் சுட்ட வடு” என்கிறார். இதன் மூலம் எமது வார்த்தைப் பயன்பாட்டின் நோக்கத்தைப் பரிசீலித்துப்பார்க்குமாறு வள்ளுவர் அழைக்கின்றார்.

நாம் பேசுவதற்கு முன்னர் இரண்டு முறை எண்ணிப் பார்ப்போம். அதாவது நான் பேச வேண்டிய இவ்வார்த்தைகள் அவசியமாக சொல்லப்பட வேண்டியவைகளா? என எண்ணுதல் அவசியமாகும். இல்லையேல் நாம் பேசும் வார்த்தைகள் யாராவது ரகசியமாக என்னிடம் கூறிய தகவல்களை நான் சொல்லுகின்றேனா என சோதித்துப் பார்த்தல் அவசியம் மேலும் நான் சொல்லப்போகும் சம்பவங்கள் உண்மையானவைகளா? இல்லையேல் அரை உண்மையானவைகளா? எனவும் ஆராய்தல் வேண்டும். அத்துடன் நான் சொல்லப்போகும் சம்பவங்கள் எத்தகைய உணர்வுகளுடன் வெளிவருகின்றன என்பதைப் பார்த்தல் அவசியமாகின்றது. அதாவது அன்பு உணர்வா? சந்தோசத்தின் உணர்வா? வெறுப்பின் உணர்வா? பழிவாங்குதலின் உணர்வா? எனக்குள் உருவாகின்றது என எண்ணிப்பார்த்தல் அவசியம்.

செபம் – இறைவா என் வாய்க்குக் கட்டுப்போடும். அப்பொழுது நான் மற்றவர்களுடன் நல்லுறவை ஏற்படுத்த அது எனக்கு உதவும். ஆமென்.