25 டிசம்பர் 2023

சமாதானத்தின் அரசருக்காக ஓர் இடத்தை தேடுதல்
Christmas – Finding Space for the Prince of Peace
லூக்கா 2:1-14

• நாம் வாழும் உலகில் ஒவ்வொரு தனிமனிதனும், குடும்பங்களும், சமூகங்களும், தேசங்களும் சமாதானத்தை நாடித் தேடுகின்றன. அதன்மூலம் சமாதானத்தின் முக்கியத்துவத்தை எம்மால் உணர்ந்துக் கொள்ள முடியும். சமாதானம் என்பது ஓர் யுத்தமற்ற சூழல் அல்ல. மாறாக, பிரச்சினைகளின் மத்தியில் அகஅமைதியை தேடுவதாகும். யூதர்கள் ஒருவரையொருவர் காணும்போது ‘ஷலோம்’ என வாழ்த்துவர்.

• இஸ்ராயேல் மக்கள் பாபிலோனிய அடிமைத்தனத்திற்கு செல்வதற்கு முன்னர் மெசியா பற்றிய வாக்குறுதியில் அவர் ஒரு சமாதானப்பிரபு என அழைக்கப்படுவார் என்ற செய்தி கூறப்படுகின்றது. ஏனென்றால், அக்காலத்தில் இஸ்ராயேலர்கள் சீரியர், அசீரியர்கள், பாபிலோனியர் போன்ற இன மக்களோடு போராட வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தது.

• சங்கீதம் – திருப்பாடல் 85:10ல், நீதியும் அமைதியும் ஒன்றையொன்று முத்தமிடும் எனக் கூறப்படுகின்றது. எனவே, நீதியுள்ள அமைதி வேண்டப்படுகின்றது. அமைதி நீதியில்லாமல் உருவாக்கப்படுமேயானால் அது நிரந்தரமற்றதாகும்.

• எபேசியர் 1:1-10ல், சிறப்பாக கிறிஸ்துவுக்குள் அனைத்தும் கூட்டிணைக்கப்படும் என்ற வாக்குறுதி 10ம் வாக்கியத்தில் கூறப்படுகிறது. அதாவது, கிறிஸ்து அனைவரையும் உள்வாங்கும் தன்மையுள்ளவர் என்பது கூறப்படுகிறது. அதாவது, 2 கொரிந்தியர் 5:16-20ல், அவரின் ஒப்புரவாக்குதல் பணி இங்கு ஞாபகப்படுத்தப்பட வேண்டும். ஒப்புரவாகுதல், உள்வாங்குதல் ஆகியவற்றினூடாக அமைதியை நாம் பேண முடியும்.

• லூக்கா 2:1-10ல், ஆண்டவர் இயேசுவை பெற்றெடுப்பதற்காக மரியாள் ஒரு இடத்தை தேடுகின்றார். நிறைவில், சத்திரத்தில் இடம் அற்றபோது மாட்டுத் தொழுவத்தில் அவரைப் பெற்றெடுகின்றார். எனவே, சிறப்பாக சமாதானப் பிரபு மாட்டுத்தொழுவத்தில் பிறக்கின்றார். சமாதானத்திற்கு இடமற்ற சூழலை நாங்கள் பார்க்கிறோம். இயேசு என்பதற்கு ‘சமாதானம்’ என்றும் அர்த்தமாகும். எனவே, இங்கு நாம் வாழும் சூழலிலும் சமாதானம் ஒதுக்கப்பட்டு மாட்டுத்தொட்டிலில் பிறக்கும் அளவிற்கு காணப்படுவதை நாம் பார்க்கிறோம்.

• நாம் வாழும் உலகில் இயேசு எவ்வாறு மாட்டுக்கொட்டிலில் பிறந்தாரோ அதுபோல எங்கள் அக உள்ளங்களில் சமாதானம் பிறப்பதில்லை. அது ஒரு பேசும் பொருளாகவும் மகா நாடுகளில் கதைக்கும் பொருளாகவும் மாறிவிட்டதே ஒழிய அது வாழ்வுக்குரியதாக மாறாதது கவலைக்குரிய விஷயமாகும். அதனால்தான் இன்று நாடுகள் இடையே பெரும் பதட்டம் நிலவுவதை நாம் பார்க்கின்றோம். எனவே, எமது சிந்தனைகள் வார்த்தைகள் செயல்கள் அனைத்தும் சமாதானத்தை மையப்படுத்தியதாக கிறிஸ்துவின் சிந்தனையில் நிலைத்திருத்தல் அவசியம் (பிலிப்பியர் 2:6). ஆமேன்.