யோவான் 15 : 12 – 13

நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை. தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை.

இயேசுவின் வாழ்நாளை பார்க்கும் பொழுது, அவர் ஓரு மக்கள் மனிதன் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம், ஏனெனில், எப்போதும் அவரை சுற்றி மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருந்தது. மற்ற நபர்களை விட இயேசுவின் வாழ்வில் மக்கள் ஒரு புத்தெழுச்சியையும், வித்தியாசத்தையும் கண்டனர். அவரது பேச்சையும், போதனையை கேட்க மக்கள் திரள் திரளாய் அவரை நோக்கி வந்தனர்.

  • (யோவான் 6 : 6 – உடல்நலம் அற்றோருக்கு அவர் செய்துவந்த அரும் அடையாளங்களைக் கண்டு மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின் தொடர்ந்தனர்.)
  • (மத்தேயு 5 : 1 – இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர்.)

எப்போதும் மக்கள் அவரை தேடி வந்து கொண்டே இருந்தார்கள். அப்போது இயேசுவின் நண்பர்களான சீடர்கள் அவருக்கு உறுதுணையாக இருந்தார்கள்.

நண்பர்கள் / Friends

இயேசுவின் வாழ்வு மற்றும் பணியின் போது அவரது நண்பர்கள் யார் ? இக்கேள்வி, எமக்கு பல உண்மைகளை வெளிப்படுத்துகிறது. இயேசுவின் நண்பர்கள் சமுதாயத்தால் காயப்படுத்தப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட, வெறுக்கப்பட்ட மக்களாய் காணப்பட்டனர். ஞானிகளோடும், மறை நூல் அறிஞ்ர்களோடும், தலைமைசங்க அதிகாரிகளோடும் அவர் எப்போதும் நேசமாக உறவாடவில்லை. மாறாக

இயேசு, அதிக நேரம் பாட்டாளி வர்க்கத்தோடேயே தனது நேரத்தை செலவழித்தார்.

பணி. ரூபன் பிரதீப், இயேசு இயக்கம்

இயேசு, அதிக நேரம் பாட்டாளி வர்க்கத்தோடேயே தனது நேரத்தை செலவழித்தார். விளிம்பு நிலை மக்களோடேயே இயேசு அதிகமாக பழகினார், ஜெருசலேமை பார்க்கிலும் கலிலேயாவிலேயே அவர் அதிகமாக பணி செய்தார். பணம் கொழிக்கும் மைய நகரான ஜெருசலேமை விட பாமர தொழிலாளர் வர்க்கம் வாழும் கலிலேயாவையே அவரது பணித்தளமாக தெரிவு செய்து, அவர்களிடையே சேவை செய்தார். அவரை பின்பற்றிய நண்பர்கள் “அரசியல், பொருளாதார, சமய,சமூக,கலாச்சார” காரணிகளினால் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருந்தார்கள், அதில் சிலர் சமூக மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.


பல்வேறு சிந்தனைகளை கொண்ட, வித விதமான வாழ்க்கை பின்னணிகளை உடைய, பல்வேறுபட்ட அறிவு மட்டங்களை உடையவர்களே இயேசுவின் நண்பர்கள்.

இயேசுவுக்கு பல நண்பர்கள் இருந்தாலும் திருமறையில் குறிப்பிடப்பட்டிருக்கின்ற நண்பர்களில் புறக்கணிக்கப்பட்ட நண்பர்களை குறித்தும், அவர்கள் செய்த தொழிலையும் இங்கு பார்ப்போம்.

  • பேதுரு என்னும் சீமோன் – மீனவர்
  • அந்திரேயா – மீனவர்
  • யாக்கோபு – மீனவர்
  • யோவான் -மீனவர்
  • பிலிப்பு – மீனவர்
  • பர்த்தலமேயு – மீனவர்
  • மத்தேயு – வரி தண்டுபவர்
  • சீமோன்- செலோதியர்/ விடுதலை குழுவை சேர்த்தவன்

இயேசு தம் சீடர்களை / நண்பர்களை முழு உள்ளதோடு நேசித்தார், இயேசு தனது அறிவையும்,அனுபவங்களையும், தந்தையிடமிருந்து பெற்ற அனைத்தையும் தமது நண்பர்களோடு முழுவதுமாக பகிர்ந்து கொண்டார். நட்பின் உச்ச அன்பை அவரின் வாழ்வினுடாக வெளிக்காட்டினார், ஒரு புதிய நட்பு வட்டாரத்தை இயேசு உருவாக்கினார். அவர்களுக்கு சரியான பாதையை காட்டினார், அவர் வாழ்வினூடாக பல நல்ல குணாதிசியங்களை அவர்களுக்கு கற்று கொடுத்தார். யோவான் 15 : 9 என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள் மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள். 15 ; 15 ,இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். ஏனெனில், தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில், என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன்.

சமூகத்தால் புறந்தள்ளப்பட்ட இயேசுவின் நண்பர்களே, இவ்வுலகை மாற்றியவர்கள். அவர்கள் மாற்று கலாச்சாரத்திற்கு சொந்தக்காரர்கள் . இதனாலே இவர்களை ”புதிய நெறியை சார்ந்த ஆண், பெண்” என்று திருத்தூதர் ஆசிரியர் குறிப்பிடுகிறார். உன் நண்பன் யார் என்று சொல், நீ யாரென்று சொல்கிறேன் என்ற கூற்றை, இயேசு கேள்விக்குறியாக்குகிறார்.

உணவும் ஐக்கியமும் / Food & Fellowship

நற்செய்திகளில் இயேசுவையும் உணவு மேசைகளையும் பிரிக்க முடியாத ஒன்றாகவே நற்செய்தி ஆசிரியர்கள் விவரிக்கின்றனர். இயேசு அநேக வீடுகளுக்கு சென்று, அவர்களோடு பாகுபாடின்றி உணவருந்தினார். உணவருந்தும் சந்தர்ப்பங்களில் இயேசு அனைவரோடும் உரையாடினார், அத்தோடு இச்சந்தர்ப்பத்தை ஒரு கற்பிக்கும் களமாகவும் அவர் மாற்றினார்.

யூத கலாச்சாரத்திற்கு அமைவாக, யூத உணவு பழக்கவழக்கங்கள் சமூக அந்தஸ்தை அடிப்படையாக கொண்டு நடைபெற்றன. யூதர்களின் உணவு மேசைக்கு வருகின்ற நபர்கள் உயந்தவர்களாகவும், பணம் படைத்தவர்களும் சமூகத்தில் மதிக்கப்படுகின்றவர்களாகவும் இருக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்ப்பார்கள். சாதாரணமானவர்களை அவர்கள் வரவேற்று உபசரிப்பதில்லை. இவ்வாறான பின்னணியில் இயேசுவின் வாழ்வு முறை அனைத்தையும் தலைகீழாக திருப்புவதாக அமைத்திருந்தது. அவர் அழைப்பு பெற்ற அனைவர் வீட்டிற்கும் சென்றார், அவர்களோடு உணவருந்தினார் அவர்களோடு தம் காலத்தை செலவிட்டார்.

ஒரு நாள் இயேசு லேவியின் வீட்டிற்கு விருந்திற்கு அழைக்கப்பட்டார், இயேசுவும் முழுமனதாக அவ்விருந்திட்க்கு கொடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுக்கொண்டார். லேவி, தனது நண்பர்களையும்,தன்னோடு பணிபுரிந்த வரிதண்டுபவர்களையும் அவ்விருந்திட்க்கு அழைத்திருந்தார். இயேசு எந்த பாகுபாடும் இல்லாமல் அவர்களுடன் உரையாடி ஒன்றாக உணவுண்டார். இதை அவதானித்த மறைநூல் அறிஞர்கள், பரிசேயர்கள் நாம் எதிரிகளாகவும், துரோகிகளாகவும் கருதும் வரிதண்டுவோர் வீட்டில் இயேசு எந்த தயக்கமும்,முறுமுறுப்பும் இல்லாமல் உணவு உண்கிறாரே? என்று கோபப்பட்டனர்.

மாற்கு 2 ; 15 பின்பு, அவருடைய வீட்டில் பந்தி அமர்ந்திருந்தபோது வரிதண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர். ஏனெனில், இவர்களில் பலர் இயேசுவைப் பின்பற்றியவர்கள். 16: அவர் பாவிகளோடும் வரிதண்டுபவர்களோடும் உண்பதைப் பரிசேயரைச் சார்ந்த மறைநூல் அறிஞர் கண்டு, அவருடைய சீடரிடம், “இவர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பதேன்?” என்று கேட்டனர். . யூதர்கள் பாவிகள் என கருதிய மக்களோடு இயேசு உணவருந்தினர்,

யார் இந்த பாவிகள்? ;யூதர்களின் சட்டத்தை பின்பற்றாதவர்கள், ஆலயத்திற்கு தசமபாகம் கொடுக்காதவர்கள்,பலிகள் ஒப்புக் கொடுத்தவர்கள், தூய்மை சடங்குகளை தொடர்ந்து செய்யாதவர்கள் அத்தோடு விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்களும் இதில் அடங்குவர். அனைவரோடு சமமாக பேதங்கள் இன்றி ஒரே மேசையில் இயேசு சாப்பிட்டார் . இயேசுவின் காலத்தில் வாழ்ந்த ரபிமார்களும், பரிசேயர்களும் தாம் அனைவரையும் விட உயர்ந்தவர்கள், சிறந்தவர்கள் என்ற எண்ணத்திலேயே வாழ்ந்து வந்தனர். தமக்கு எங்கேயும் எப்போதும் சிறப்பான முதல் மரியாதை கிடைக்கவேண்டுமென அவர்கள் விரும்பினர், சட்டதிட்டங்களை ஆழமாக பின்பற்றிய இவர்கள், வேறு வகுப்பை சார்ந்திராத மக்களோடு உணவருந்துவதை பாவமாகவும் தீட்டாகவும் கருதினர். இவர்களோடு உணவருந்தினால் நாம் தூய்மையற்றவராகிவிடுவோம் என நம்பினர்.

ஆனால் இயேசு ஓர் மாற்று கலாச்சாரத்தை உருவாக்கினார், அவரின் பணிக்காலத்தில் இன்னும் அநேகர் வீட்டிற்கு இயேசு சென்று அவர்களோடு உணவருந்தினார்.

பரிசேயர் வீட்டில் உணவருந்தும் போது, பாவியான பெண்ணோடு இயேசு உரையாடுகிறார், அப்பெண்ணோடு ஓர் ஐக்கியத்தையும் புது உறவையும் ஏற்படுத்துகிறார். ( லூக்கா : 7:36)
ஐயாயிரம் பேருக்கு அதிகமானோரோடு இயேசுவும் ஒன்றாக உணவருந்துகிறார், உணவை பகிர்ந்து கொடுத்தார். இக் கூட்டத்தில் நோயாளிகள்,கூலி தொழிலாளிகள், ஏழைகள், பெண்கள் மற்றும் சிறு பிள்ளைகள் அடங்குவர். (லூக்கா: 9: 13-17)
பெண் ஒருவர் தலைமை தாங்கும் வீட்டிற்கு இயேசு சென்று அவர்களோடு உணவருந்துகிறார். அவர்களிடம் தன்னை அடையாளப்படுத்துகிறார், உணவின் மூலம் கற்பித்தலையும், அன்பான ஐக்கியத்தை ஏற்படுத்துகிறார்.( லூக்கா 10:38-42)
ஊர் மக்கள் அனைவரும் ஒதுக்கி வைத்திருந்த சகேயுவை இயேசு தேடி சென்று சந்திக்கிறார், அவரோடு தனது நேரத்தை செலவழித்து கலந்துரையாடி, ஒன்றாக உணவருந்தினார். இயேசுவின் அன்பான செயல்கள் மூலம் சக்கேயு மனமாற்றம் அடைகிறார். “சக்கேயு, விரைவாய் இறங்கி வாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்” என்றார்.அவர் விரைவாய் இறங்கி வந்து மகிழ்ச்சியோடு அவரை வரவேற்றார். இதைக் கண்ட யாவரும், “பாவியிடம் தங்கப்போயிருக்கிறாரே இவர்” என்று முணுமுணுத்தனர். ( லூக்கா 19:1-10) இறுதி இராப்போஜனத்தில், இயேசு தனது சீடர்களுடன் ஒரே மேசையில் உணவருந்துகிறார், தன்னை காட்டிக் கொடுக்கும் நபர் அந்த மேசையில் இருந்தாலும் சமமாக, வேறுபாடு இன்றி அவர்களோடு ஒன்றாக இருந்தார்.

இறையியலாளர்கள் இவ் செயட்பாட்டை, Round table Conversation, Round table Leadership என்கின்றனர். யாரும் தலைவர் இல்லை, யாரும் தொண்டர் இல்லை, அனைவரும் பந்தியில் சமம் என்பதை இயேசு தனது செயலின் மூலம் சுட்டிக்காட்டுகிறார். இவ் இறுதி உணவின்போது இயேசு சமத்துவத்தையும், தாழ்மையையும், மெய்யான அன்பயும் ஒரு நாடக வடிவில் சீடர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். (யோவான் 13 :1 -19 )

இயேசு உணவின் மூலம், ”ஓரு புதிய விடுதலை சமூகத்தை கட்டியெழுப்பினர்.” யூதர்கள் மனதில் இருந்த இறுமாப்பு, இனவெறி, ஏழை பணக்காரன் பாகுபாடு,உயர்ந்தவன் தாழ்ந்தவன் பேதம், சாதி வெறி போன்ற பல வேறுபாடுகளை ஒன்றாக உணவு உண்பதன் மூலம் இயேசு உடைத்தெறிகிறார்.

பணி. ரூபன் பிரதீப், இயேசு இயக்கம்

யூதர்களால் வெறுக்கப்பட்டு, ஒதுக்கப்பட்ட பல குழுக்களுடன் இயேசு தன்னை ஒரே மேசையில் அடையாளப்படுத்துகிறார். இயேசுவின் வாழ்விலும் பணியிலும் அவர் தன்னை பல்வேறு குழுக்களோடு அடையாளப்படுத்துகிறார். அவர்களின் சமூக மாற்றத்திற்கு காரணமாக இருக்கிறார்.

“மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார்; குடிக்கிறார்.‘இம் மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரி தண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என தன்னை இகழ்ந்து பேசும் மனிதர்களை கண்டு இயேசு பயப்படவில்லை. மாறாக விடுதலையாளரான இயேசு சமூக விடுதலைக்காக அனைவரோடு இணைத்து பயணித்தார்.இயேசுவின் நண்பர்களான நாமும், இயேசு எமக்கு காட்டிய சமத்துவ பாதையில் பயணிக்கவும், சமூக விடுதலைக்காக உழைக்க ஒன்றுபட வேண்டும்.


அருட்பணி. ரூபன் பிரதீப் ராஜேந்திரன்
அருட்பணி. ரூபன் பிரதீப் ராஜேந்திரன்

புனித மகதலேனாமரியாள் தேவாலயம்,
அம்பாறை .
இரக்கமுள்ள கிறிஸ்து, நுகேலந்தா.

3 thought on “Friends, Food and Fellowship”
  1. This is the real Jesus, Jesus of Galilee who walked the length of Galilee and lived among the poor, rejected and marginalized. As disciples we are called to follow him and walk with him.
    Jesus was for the strangers and even ‘enemies’ that he accepted the hospitality of the Samaritan woman and spent time with the Samaritan village.

Comments are closed.