இறை அரியணை முன்
நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக் கூடிய அருளைக் கண்டடையவும், அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக.
எபிரேயர் 4:16

இறை அரியணை என்பது அருள் அரியணையாக உள்ளது. அங்கே நாம் ஆண்டவருடைய நிறைவான அருளைப் பெற முடியும். அதற்கு முதலாவது நாம் செய்ய வேண்டியது இறை அரியணை முன் நம்மை நாம் ஒப்புக் கொடுக்க வேண்டும். அது ஆற்றல் நிறைந்த அரியணை ஆகும். அல்லாமலும் அளவற்ற அருளின் மூலாதாரமாய் உள்ளது. ஆகவே கடவுளின் ஆற்றலுக்கு முதலாவது நம்மை ஒப்புவிக்கின்ற போது தான் நாம் கடவுளின் அருளைப் பெற
முடியும். யாரெல்லாம் கடவுளின் அரியணைக்கு முன் வருகிறார்களோ அவர்கள்
அனைவருக்குமே தம் நற்கொடைகளையும் நல்ல ஈவுகளையும் ஆண்டவர் தருகிறார்.

சிறப்பாய் சரியான நேரத்தில் நமக்கு தேவைப்படும் நேரத்தில் ஆண்டவர் தம் நன்மைகளை அருள்கிறார். இவையெல்லாம் சிலுவையினால் சாத்தியமாகிறது. இறை அரியணை முன் துணிவோடு வருதல் என்பதை இத்திருமொழி அழுத்தமாய் சொல்கிறது. மனித அதிகாரங்கள் அச்சுறுத்துகின்றவைகளாய் கடின உள்ளம் கொண்டவைகளாய் இருக்கின்றன. ஆனால் ஆண்டவர் சொல்கிறார் இறை திருமுன் துணிவோடு வாருங்கள்
என்கிறார். ஆண்டவர் நம்மைக் கண்ணியத்தோடும் சுயமரியாதையோடும் தம் அருளால் நிறைக்கும் ஆண்டவராய் இருக்கிறார்.

கிறிஸ்துவுக்குள் எனக்கன்பானவர்களே!
நாம் பல நேரங்களில் நமக்கு நல்லது நடக்கவில்லையே என அங்கலாய்க்கிறோம். அதற்கு காரணம், நாம் சிலுவை எனும் கிறிஸ்துவின் அரியணையை நாடாமல் அலங்கார பதவிகளில் இருக்கும் மனிதர்கள் மீது நம்பிக்கை வைத்தவர்களாய் மனித அதிகாரங்களில் நாற்காலிகளின் அருகில் தவழ்ந்துகொண்டிருக்கிறோம்.

மனித அதிகாரங்கள் வஞ்சணை செய்வதற்கும் பழிவாங்குதலுக்கும் சுரண்டுதலுக்குமானதே அன்றி கடவுளின் அருளைப் பெறுவதற்கான
இடமல்ல என்பதை விசுவாசிகளான நாம் உணர்ந்திட வேண்டும். அதிகாரத்திலிருப்பவர்களின் காலடியில் தவழ்வதை நிறுத்தி சிலுவையின் நிழலில் முழுந்தாளிடுகின்ற போது நாம் நமக்கான சுயமரியாதையோடு ஆண்டவரின் நன்மைகளையும் அருட்கொடைகளையும் பெற்றுக் கொள்ள
முடியும் என்பதை உணர்ந்து இறை அரியணையை நாடுவோம்.

Revd Daulton Manasseh.

இறையருளையும் இறையாற்றலையும் இறையாசியையும் அருட்கொடையாய் பெற்றிடுவோம். கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே நம்மிலும் இருக்கக் கடவது. மூவொரு கடவுளின் ஆசி நிறைப்பதாக.

மறைத்திரு. டால்ட்டன் மனாசே
மறைத்திரு. டால்ட்டன் மனாசே

ஆற்காடு லுத்தரன் திருச்சபை


2 thought on “கடவுள் VS மனித அதிகாரங்கள்”
  1. அருமை மற்றும் உண்மை அண்ணா

Comments are closed.