1 ஜனவரி 2024

கடவுளின் அருள் என்றுமுள்ளது
உடன்படிக்கை ஞாயிறு
God’s Continuing Act of Grace
லூக்கா 13:1-9

• உடன்படிக்கை என்னும் சொல் ‘பெரித்’ என்னும் எபிரேய சொல்லிலிருந்து உருவாகின்றது. சிறப்பாக, இரு நபர்களுக்கிடையே சமூகங்களுக்கிடையே நிலவ வேண்டிய உறவை அடிப்படையாகக் கொண்டு உடன்படிக்கைகள் உருவாக்கப்படுகின்றன. திருமறையில் தனிநபர் சார்ந்த உடன்படிக்கைகள், சமூகம் சார்ந்த உடன்படிக்கைகளை நாம் காணலாம். எல்லா உடன்படிக்கைகளிலும் சமூக பொறுப்பு காட்டப்படுகின்றது. அத்தோடு, உடன்படிக்கையின் அடையாளங்களும் பேணப்படுகின்றன.

• செப்பனியா 3:15-20ல், இறைவன் நம் மத்தியில் இருக்கிறார் என்ற அவரது இருப்பு நிலை எமக்கு உற்சாகத்தைத் தருகின்றது என ஆசிரியர் கூறுகின்றார். அதாவது, எமது கரங்களை நாம் சோரப்பண்ணாதப்படி அவரில் நாம் உற்சாகத்தன்மையுடன் இருத்தல் அவசியமாகின்றது.

• திருப்பாடல் – சங்கீதம் 136ல், கடவுளின் பேரன்பு என்றுமுள்ளது என ஆசிரியர் உரைக்கின்றார். அதாவது, கடவுள் எம்மீது கொண்ட அன்பின் அடித்தளத்திலேயே உடன்படிக்கை உறவில் அவர் இணைந்து கொள்கின்றார். இதனையே உரோமயர் 5:1-10 வரையுள்ள பகுதிகளும் பேசுகின்றன. எனவே, இறைவனின் உடன்படிக்கைக்கு நாம் பிரமாணிக்கமாய் இருப்பது அவசியமாகின்றது. நிறைவில், இந்த அன்பின் உச்சக்கட்டமாக இரத்தத்தினாலாகிய உடன்படிக்கையில் அவர் எம்முடன் இணைந்து கொள்கின்றார்.

• நற்செய்தி வாசகம் லூக்கா 13:1-9ல், உடன்படிக்கையின் அவசியமாயிருப்பது மனமாற்றம் இங்கே ஆண்டவர் இரண்டு வரலாற்று நிகழ்வுகளை முன்வைக்கின்றார். சீலோவாம் கோவில் இடிந்து விழுந்து அங்கு ஏற்பட்ட மரணத்தையும், பிலாத்து சில கலிலேயர்களுடைய இரத்தத்தை பலியுடன் சேர்த்த இரண்டு நிகழ்வுகளையும் காண்பித்து உடன்படிக்கை உறவு எப்பொழுதும் மனமாற்றத்தின் மையத்திலிருந்து எழுகின்றது எனக் கூறுகிறார். எனவே, இப்புது வருடத்தில் நாம் கடவுளின் அன்பில் நிலைத்திருந்து மனமாற்றமடைந்து உடன்படிக்கை உறவில் இறைவனுடன் இணைந்து அவருக்கு பிரமாணிக்கமாய் வாழ இறைவன் தமது அருளை நமக்குத் தருவாராக. ஆமேன்.

ஆக்கம்: அற்புதம்