உடன்படிக்கை ஞாயிறு

God’s Continuing Covenant with All

கடவுள் தொடர்ச்சியாக மக்களுடன் உடன்படிக்கை செய்கின்றார்

(விருத்தசேதன பண்டிகை)


லூக்கா 22:14-23

• உடன்படிக்கை என்னும் சொல் எபிரேய மொழியில் ‘பெரித்’ என்ற
சொல்லால் அடையாளப்படுத்தப்படுகின்றது. பொதுவாக,
இவ்வுடன்படிக்கையின் நிகழ்வை இஸ்ராயேல் மக்கள் ஏத்தியர் என்ற
பிரிவினரிடமிருந்து கற்றுக் கொண்டனர். இதில் உடன்படிக்கை
செய்வோர், உடன்படிக்கை பெறுவோர் உடன்படிக்கையின் நிபந்தனை
உடன்படிக்கையை மீறும்போது ஏற்படும் தாக்கம், உடன்படிக்கை உறவு
ஆகிய அம்சங்கள் இதில் உள்ளடக்கப்படுகின்றன.

• திருமறையில் பொதுவாக கடவுள் ஏவாளுடன் செய்யும் உடன்படிக்கை (தொடக்கநூல் – ஆதியாகமம் 3:15), நோவாவுடன் செய்துகொண்ட உடன்படிக்கை (தொடக்கநூல் – ஆதியாகமம் 9:8-17), ஆபிரகாமுடன் உடன்படிக்கை (தொடக்கநூல் – ஆதியாகமம் 17:1-10), இஸ்ராயேல் மக்களுடனான சீனாய் உடன்படிக்கை (விடுதலைபயணம் – யாத்திராகமம் 19:1-10), புதிய உடன்படிக்கை (எரேமியா 31:31-33), இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கை (லூக்கா 22:14-23) ஆகிய உடன்படிக்கைகள் காணப்படுகின்றன.

• பழைய உடன்படிக்கை பகுதியில் (ஆதியாகமம் – தொடக்கநூல் 9:8- 17) கடவுள் பூமியை தண்ணீரினால் இனிமேல் அழிக்கமாட்டேன் என நோவாவுடன் ஈடுபட்டு அடையாளச் சின்னமாக வானவில்லை வைக்கின்றார். இதன்மூலம், கடவுள் அழிவின் கடவுளன்று ஆக்கத்தின் கடவுளாக காணப்படுகின்றார். இப்புதிய வருடத்திலும் நாம் அழிவுக்கானவைகளை அகற்றி ஆக்கத்திற்கானவைகளைக் குறித்து சிந்திப்போமாக.

• திருப்பாடல் – சங்கீதம் 145ல் ஆசிரியர் கடவுளை புகழ்ந்து பாடி அவருக்குரிய மதிப்பை அல்லது மகிமையை செலுத்துமாறு அழைக்கிறார். எனவே, இப்புதிய வருடத்தில் இறைவனுக்குரிய மதிப்பையும் மரியாதையையும் நாம் செலுத்த முற்படுவோமாக.

• கலாத்தியர் 4:21-31 இப்பகுதியில் பழைய உடன்படிக்கையில் பிரதிநிதிகளாகிய ஆகார், இஸ்மவேல் போன்றவர்களும் புதிய உடன்படிக்கையின் பிரதிநிதிகளாகிய சாராள், ஈசாக்கு போன்றவர்களும் பிரதிநிதிகளாக காணப்படுகின்றனர். எனவே, புதிய உடன்படிக்கையின் மக்களாகிய நாங்கள் பழைய அடிமைத்தனத்தின் குணவியல்புகளை களைந்து சுதந்திரத்தின் பிள்ளைகளாக வாழ அழைக்கப்படுகின்றோம்.

• நற்செய்தி வாசகமாகிய லூக்கா 22:14-23 இப்பகுதியில் ஆண்டவர் இயேசு தமது இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாகிய திருவிருந்தை ஏற்படுத்துகின்றார். இங்கு, இவ்வுடன்படிக்கை அதிக பெறுமதி நிறைந்ததாக இயேசு தமது உடலையும் இரத்தத்தையும் பகிர்ந்துகொள்ளும் பகிர்வின் உடன்படிக்கையாகவும் காணப்படுகின்றது. இங்கு அப்பதை எடுத்தல், நன்றி கூறுதல், பிட்டல், பகிர்தல் போன்ற இலக்குகள் முக்கியத்துவப்படுத்தப்படுகின்றது. எனவே, இப்புதிய வருடத்தில் இறைவனுடன் பகிர்வின் உடன்படிக்கையில் நாம் ஈடுபடுவோமாக.

• தை 1ம் திகதி விருத்தசேதன திருநாளாக அனுஷ்டிக்கப்படுகின்றது. ஆண்டவர் இயேசுவும் மோசேயின் நியாயப்பிரமாணத்தில் கூறப்பட்டவைகளை நிறைவேற்றும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்
கொண்டார். இதற்கூடாக தாம் கடவுளுக்கு சொந்தமானவர் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார். இதேபோன்று, இந்நாளில் நாமும் எம்முடையவர்களும் கடவுளுக்கு சொந்தமானவைகள் என்பதை
உறுதிப்படுத்தி கொள்ளுவோமாக.

(தெ. இ. தி. யாழ் ஆதீன மரபின்படி புத்தாண்டின் பின்வரும் முதல் ஞாயிறு உடன்படிக்கை ஞாயிறு கொண்டாடப்படுகிறது.)

அருட்பணி. அருளம்பலம் ஸ்டீபன்
அருட்பணி. அருளம்பலம் ஸ்டீபன்

இலங்கை திருச்சபை