மாற்கு 4:26-29

இறையரசைப் பற்றி குறிப்பிடப்படும் இன்னுமோர் பிரதான உவமையாக விதை உவமைக் காணப்படுகின்றது. அதாவது, ஒரு விவசாயி விதையை எடுத்து அதை விதைக்கின்றான். அவ்விதை முளைத்து அறுவடைக்கு தயாராகின்றது. இங்கு விதையின் வளர்ச்சி மனித ஆற்றலை அல்ல மாறாக, கடவுளின் ஆற்றலால் விதை முளைத்து பலனளிக்கின்றது. அதுபோல இறையரசு மனித ஆற்றலால் வளர்ச்சியடைவதல்ல. மாறாக, இது இறைவனின் முயற்சியால் அல்லது அவரது சக்தியால் நடைபெறுகின்றது. ஆதித்திருச்சபையில் பவுல் கொரிந்து திருச்சபைக்கு எழுதிய 1ம் கடிதத்தில் 3:6ம் வசனத்தில் நான் நட்டேன், அப்பல்லோ நீர்ப்பாய்ச்சினார், தேவனோ விளையச் செய்தார். எனவே, இறைவனுக்கே அனைத்து மகிமையும் செலுத்துகின்றார். மேலும், திருத்தூதர் பணிகள் அல்லது அப்போஸ்தலர் 2:47ல் ஆதித் திருச்சபை மக்களின் பகிர்வு, அப்பம் பிட்குதல், ஐக்கியம் போன்றவற்றைக் கண்டு மக்கள் திருச்சபைக்குள் சேர்க்கப்பட்டனர். எனினும், கடவுளே அறுவடைக்கு காரணர் என்பதை திருச்சபை மறுக்கவில்லை. மேலும், ஆண்டவர் இயேசு புதுமைகளை ஆற்றிய பின்னர் கடவுளே மக்கள் மீது இரக்கம் கொண்டு இப்புதுமைகளை ஆற்றுகின்றார் எனக் கூறுகின்றார் (மாற்கு 5:19).

நாம் வாழுகின்ற இவ்வுலகில் ஒவ்வொருவரும் கடவுளுடைய அரசு மனித ஆற்றலால் அல்ல மாறாக, இறைவனுடைய ஆற்றலால் வளர்கின்றது என்பதை உணர வேண்டும். ஆனால், திருச்சபை வரலாற்றில் இவ்வுண்மை மறக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு திருச்சபை பிரிவுகளும் தத்தமக்கு பெயருண்டாக அரசுகளை கட்டி வருகின்றனர். எனவே, இவ்வோட்டத்தில் இறைவனுக்குரிய பங்கு என்ன என்பதை நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகின்றோம். எனவே, பவுல் கூறுவதைப் போன்று, நானல்ல கிறிஸ்துவே எனக்குள் வாழுகின்றார் என்ற ஆன்மீகம் நமக்குள்ளே உருவாக வேண்டும் (கலாத்தியர் 2:20). 

இறையியலாளர் அற்புதம்