pexels-photo-8815222-8815222.jpg

திருமறை பகுதிகள்

1 இராஜாக்கள் 4: 42 – 44
யோவான் 6: 25 – 58
1 கொரிந்தியர் 11: 23 – 30

உட்புகும் முன்…

திருமுழுக்கும், திருவிருந்தும் திருச்சபையின் சாக்கிரமெந்துகள்…

ஒன்று அங்கத்தினராவதற்கும், மற்றொன்று அருள்பணி புரிவதற்கும் நம்மை வழிநடத்துகின்ற துவக்க புள்ளிகள்…

திருவிருந்தில் மட்டும் பங்கு பெறுவதல்ல திருபாடுகளிலும் பங்கு பெறுகிறோம் ….

நம் “கரங்களில் உள்ள அப்பமும், நம் நாக்கில் பட்ட திராட்சை ரசமும் சுவைப்பதற்கு அல்ல நம்மை இதுபோன்று பலியாக்குவதற்கு இறைவன் அருளும் விருந்து…

திருச்சிலுவை – இயேசுவின் அன்பை வெளிப்படுத்துகிறது …
திருப்பந்தி – இயேசுவின் பாடுகளை உணர்த்துகிறது…
திருப்பலி – இயேசுவின் வழிகளை காட்டுகிறது…

அன்று மேல் அறையில் சீடர்களோடு ஆண்டவர் பந்தி அமர்ந்தார் இன்று திருச்சபையில் நாம் ஆண்டவரோடு பந்தி அமர்ந்திருக்கிறோம்…
உணர்வில், உறவில், உருவில் மாற்றம் அடைந்து நம்மை திருப்பலி ஆக்குவோம் …

திருவிருந்தின்போது பாடப்படும் பாடல்களில் ஒன்றான “தாரகமே தாரகமே …”என்ற கீர்த்தனை பாடலில்
பசி தாகத்துடன் உம்மிடம் வேகத்துடனே வாரேன் தாரகமே ..என்று துவங்கும்…
எத்தனை வேகத்தோடு திருப்பந்திக்கு வருகிறோமோ, அதே வேகத்தோடு திருப்பலியாகவும், திருப்பணி புரியவும் நம்மை அனுப்புகிறது திருப்பந்தி….

இன்றைய திருமறை பகுதிகள் நம்மை புதிய பார்வையில் சிந்திக்கவும், புதிய பாதையில் பயணிக்கவும், திருச்சபையாக நம்மை அழைக்கின்றது…

1. ஒரு ஏழையின் உணவு திருவிருந்தானது – வறுமையை ஒழிப்பதற்கு….(2. இராஜாக்கள் 4: 42 – 44)

நாட்டிலே பஞ்சம் தலை விரித்து ஆடினது, வறுமையின் கோரமுகம் மக்களை பசியால் வாட்டியது, தீர்க்கதரிசிகளின் பிள்ளைகள் ஒட்டிய வயிற்றோடு உணவுக்காக ஏங்கிக் ஏங்கிக் கொண்டிருந்தனர்…

பஞ்சம், பசி, பட்டினி சூழலில் ஒரு மனிதன் எலிசா தீர்க்கனிடம் வருகின்றான்… அவன் எங்கிருந்து வருகிறான் என்றால் பாகால் சலிசா என்னும் ஊரில் இருந்து வருகிறார்…

அவர் கையில் வாற்கோதுமை அப்பங்களும் தாள் கதிர்களும் இருந்தது…

வாற்கோதுமை என்றதும் எலிசா தீர்க்கர் சொன்னது நாம் நினைவில் வரும். நாளை சமாரியா வாசலில் “ஒரு படி மரக்கால் கோதுமை ஒரு சேக்கலுக்கும் , இரண்டு படி வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் விற்கப்படும் என்று தீர்க்க உரைத்தார் ( 2.இராஜாக்கள் 7:1) அது நிறைவேறியது…..

ஒரு சேக்கலுக்கு ஒரு படி “கோதுமை மா” உயர்குடி மக்களின் அடையாளம், அதே ஒரு சேக்கலுக்கும் இரண்டு படி வாற்கோதுமை அது ஏழைகளின் அடையாளம்….

எலிசா தீர்க்கரிடம் வந்த அந்த மனிதன், ஒரு ஏழையானவன், அவர் கையில் கோதுமை மாவினால் செய்த அப்பங்கள் இல்லை மாறாக வாற்கோதுமை அப்பங்கள் மட்டுமே இருந்தது. அந்த ஏழை, பஞ்சத்தில் வாடிய தீர்க்கர்களின் பிள்ளைகளுக்கு , தன் உணவை பகிர்ந்து கொடுத்தார், பசியை போக்கினார்.

பதுக்கி வைக்கும் மக்களிடையே இந்த ஒரு ஏழை வித்தியாசமானவர். தன் உணவை மட்டுமல்ல தன் உறவையும் ஏழைகளோடு பகிர்ந்து கொண்டவர். இயேசு கிறிஸ்துவிடம் ஒரு சிறுவன் கொண்டு வந்த ஐந்து வாற்கோதுமை அப்பங்கள் அவன் ஒரு ஏழை சிறுவன் என்பதை காண்பிக்கின்றது.

பஞ்ச காலங்களில் பசியோடும் வறுமையோடும் இருந்த மக்களோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர். தம் உணவினால் இறைவனையே வெளிப்படுத்தியவர். வாழும் இறைவனாகவே தன்னை காண்பித்தவர்.

ஒரு ஏழையின் வாற்கோதுமை உணவு வறுமையில் வாடிய தீர்க்கர் பிள்ளைகளுக்கு “விருந்தும் ஆனது திருவிருந்துமானது….”

ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணலாம் ஏழைகளின் உபசரிப்பில் இறை அன்பை உணரலாம்…

2. ⁠ ஒரு தச்சனின் உணவு திருவிருந்தானது – வாழ்வினை வழங்குவதற்கு…. (யோவான் 6: 25 – 58)

இயேசு தன் ஊருக்கு போகிறார் (மாற்கு 2:1). மக்கள் அவரைத் தேடி அவர் ஊருக்கு வருகிறார்கள். ஒரு நீண்ட உரையாடல் நடைபெறுகிறது.

அந்த உரையாடலில் இயேசு வந்திருந்த அனைவரையும் நோக்கி நீங்கள் அப்பங்களை உண்டதால், வந்திருக்கிறீர்கள் என்று தன் கோபத்தை வெளிப்படுத்துகிறார்…

அதை வெறும் உணவாக மட்டுமே பார்த்த, தம் மக்களை அன்போடு கடிந்து கொண்டு, அது ஒரு “அடையாள செயல்” என்று விளங்கிக் கொள்ளவில்லையா ?என்று வியப்போடு அவர்களிடம் வினா எழுப்புகின்றார்…

வனாந்தர பயணத்தில் “மண்ணா” ஆண்டவரின் அடையாளச் செயல்களில் ஒன்று என்று மக்களுக்கு சுட்டிக்காட்டுகின்றார். இறைவன் உடன் இருப்பதையும், ஒடுக்கப்பட்ட மக்களோடு இறைவனும் ஒன்றித்து பயணிப்பதையும், பாடுபடும் தாசனாக இறைவனே முன் நின்று அவர்களை வழிநடத்துவதையும், தேவைகளை சந்திப்பதையும் மன்னா விருந்து எடுத்துக்காட்டுகின்றது என்பதை தெளிவுபடுத்துகின்றார்…..

இறைவன் அருளும் விடுதலையின் “முன் சுவையாக” இருந்தது அந்த “மண்ணா விருந்து”என்பதையும் இயேசு கிறிஸ்து சுட்டிக்காட்டுகிறார்…

அவர் உரையாடலை கவனித்த யூதர்கள், அவரை இவன் “யோசேப்பின் ” மகன் அல்லவா, வேறு வகையில் சொன்னால் இவன் ஒரு “தச்சனின்” மகனல்லவா ..? என்று இகழ்ந்தனர்..

இந்த சூழ்நிலையில் இயேசு அவர்களைப் பார்த்து “நானே ஜீவ அப்பம்”என்றார். இந்த ஜீவ அப்பம் அவரின் வார்த்தைகளை நமக்கு தருகிறது. அந்த வார்த்தை எல்லா மனிதர்களையும் வாழவைக்கின்றது, வாழ்வளிக்கின்றது.

நானே நல்ல மெய்ப்பன் ஆடுகளுக்காக தன் ஜீவனையே தருகின்றேன் என்றார். ஜீவ அப்பம் நானே என்றவர் நானே வாழ்வு தரும் “உணவு” என்று வாழ்வு தரும் இறைவனை, தன் செயல்களில் வெளிப்படுத்துகின்றார்….

யோசேப்பு எனும் தச்சனின் மகன் இயேசு, தன்னையே “ஜீவ அப்பமாக” தம் மக்களுக்கு தம்மையே உணவாக, பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டிருப்பதை அழுத்தம், திருத்தமாக ஆண்டவர் வெளிப்படுத்துகின்றார….

வாழ்வு உரிமை மறுக்கப்பட்ட கலிலேய சுற்றுப்புற பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இருளில் வசித்த மக்களுக்கு ஆண்டவர் இயேசு “உணவாக, வாழ்வளிக்கின்ற மன்னாவாக, விடுதலை தரும் மன்னவாக”நான் உங்களோடு இருக்கிறேன் என்பதை எடுத்துக்காட்டுகின்றார்…

இந்த ஜீவ அப்பத்தை உண்பவர்கள் “அழியா வாழ்வு பெறுவார்கள், நிலை வாழ்வு அடைவார்கள்” என்பதை இயேசு தம் மக்களுக்கு வலியுறுத்துகின்றார் வாழ்வளிக்கும்

இந்த ஜீவ அப்பத்தில், இந்த தச்சன் மகனின் திருவிருந்தில் பங்கு பெறுவோம் அதன் மூலம் நிலை வாழ்வை பெறுவோம்…..

3. ⁠ ஒரு திருச்சபையின் உணவு திருவிருந்தானது – சமத்துவத்தை வளர்ப்பதற்கு….(1. கொரிந்தியர் 11: 23 – 30)

அப்போஸ்தலராகிய பவுல் தன் மக்களுக்கு எழுதுகின்ற கடிதத்தில் உணவைப் பற்றி வலியுறுத்துகின்றார்….

இவர் கொழுத்த உணவை உண்கின்றார், ஒருவர் உணவுக்காக ஏங்குகின்றார். ஒருவர் முந்தி உணவருந்துகின்றார்,ஒருவர் பிந்தி உண்ணுகின்றார். எல்லாரும் காத்திருந்து ஒன்றாக உணவு உண்ணும் வழக்கத்தை விட்டு விட்டதை அவள் வலியுறுத்தி கூறுகின்றார்….

திருச்சபையின் விருந்தில் கூட ஏழை – பணக்காரன், உயர்ந்தவன் – தாழ்ந்தவன். ஆண் – பெண் என்ற வேறுபாடு நான் உண்டாக்கிய திருச்சபையில் இருக்கிறதே என்று மனம் வருந்தி குறிப்பிடுகின்றார்….

இயேசுவின் மேலரை விருந்து அனைவரையும் ஒன்றாக்கியது. காட்டிக் கொடுப்பவர், மறுதலித்த போவோரோடும்,விட்டு விட்டு சிதறிப் போகின்ற அனைவரோடும் ஆண்டவர் தன்னை இணைத்துக் கொண்டார்….

தம்மையே தியாகபலியாக சிலுவையில் விருந்தாக்கினார். அந்த விருந்தில் தான் நாமும் பங்கு பெறுகிறோம். இயேசுவின் திருவிருந்து சமத்துவ உலகை உண்டாக்கியது. …

திருச்சபையின் திருவிருந்து நிச்சயம் வேறுபாடுகளை களைந்து, ஏற்றத்தாழ்வுகளை வேரறுத்து, ஓர் உலை விருந்தாக அமைந்திடல் வேண்டும்…

திருச்சபையின் திருவிருந்து இறையரசின் முன் சுவையாக சமத்துவ உலகின் அடையாளமாக அமையும் பொழுது திருச்சபை மாண்பு பெறுகிறது திருச்சபை மக்கள் இறை மக்கள் என்னும் உயர்வை அடைகின்றார்கள்….

கர்த்தரின் பந்தில் வா என்ற பாடலில் வருகின்றதைப் போல “காரணத்தை மனப்பூர்ணமாய் எண்ணி …. பந்தியில் வா என்ற பாடலை உணர்ந்து திருவிருந்தில், பங்குபெறும் பொழுது ஆண்டவர் இயேசுவின் திருப்பலி உயர்வை பெறுகிறது….

திருச்சபையின் திருவிருந்து என்னும் சாக்கிரமெந்து சமத்துவத்தை, சமத்துவ உலகை உருவாக்கும் ஒன்றாக அமைந்திட வேண்டும்…

நிறைவாக …

வனாந்தரத்தில் “மன்னா விருந்து” ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் இறைவன் உடன் இருப்பதை உறுதி செய்யும் திருவிருந்தாக அமைந்திருந்தது…

பஞ்சத்தில் ஒரு ஏழையின் வாற்கோதுமை அப்ப”விருந்து”, வறுமை, பசி, பட்டினி போக்குகின்ற திருவிருந்தாக அமைந்திருந்தது….

. தச்சன் மகன் இயேசுவின் ஜீவ அப்ப விருந்து வாழ்வை இழந்த மக்களுக்கு வாழ்வு தரும் திருவிருந்தாக அமைந்திருந்தது…

திருச்சபையின் திருவிருந்து உலகில் சமத்துவ உலகை உண்டாக்கும் சமத்துவ திருவிருந்தாக அமைந்திட வேண்டும்…

திருவிருந்தில் ஒன்றிணைவோம் ….
திருப்பலியில்
மறு உரு அடைவோம்…
திருச்சபையில்
திரு அவயவங்களாகுவோம் …

இறை ஆசி என்றும் நம்மோடு இருப்பதாக …
இறை ஆசியாய் என்றும் வாழ்வோமாக …

அருள்பணியில்
உங்களோடு

இறைப்பணியில் உங்களோடு

Rev. Augusty Gnana Gandhi,

CSI Trichy Tanjore Diocese.

2 thought on “தூய பலி எனும் சாக்கிரமெந்து”

Comments are closed.