pexels-photo-1456613-1456613.jpg

திருமறைப் பகுதிகள்
மல்கியா 2: 13 – 16
1 கொரிந்தியர் 13: 1 – 14
மாற்கு10: 2 – 9

முகவுரை

பள்ளிகளில், கல்லூரிகளில் படித்து முடித்த பின்பு தான் சான்றிதழ்கள் வழங்குவார்கள். அவர்களுடைய நன்னடத்தை, ஒழுக்கம், அறவாழ்வு … இவைகள் எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு அதன் பின்பதாகவே சான்றிதழ் வழங்கப்படும். ஆனால் திருமண வாழ்வில் கணவனுக்கும், மனைவிக்கும் தங்கள் வாழ்க்கையை துவங்கும் போதே ஆலயத்தில் சான்றிதழ் ( Marriage Certificate) தந்து அனுப்புகிறார்கள். அதற்கு ஒரே ஒரு காரணம் கடவுள் இணைத்து இருக்கிறார், இந்த காரியம் கர்த்தரால் வந்தது என்பதுதான்….

ஒவ்வொரு திருமண ஆராதனையின் போதும் மணப்பெண், ஆயர்களோடு அழைத்து வரப்படுவார்கள். ஆயர்களும், இறை மக்களும் அந்தப் பெண்ணின் வருகையின் போது எழுந்து நிற்பார்கள். அதற்கும் ஒரே ஒரு காரணம்தான், பெண்ணோடு கடவுள் உடன் வருகின்றார். பெண்மையை திருச்சபை போற்றுகிறது என்பதின் அடையாளம் தான்….

திருமணம் என்னவோ ஆயர்கள் முன்னிலையில் நடைபெறும் என்று அழைப்பதில் அச்சிடப்பட்டாலும், ஆண்டவர் முன்னிலையில் இது நடைபெறுகிறது என்ற உணர்வு மேலோங்கி நிற்கும் பொழுது திருமண வாழ்வு ஆசீர்வதிக்கப்பட்டதாக அமைகின்றது…..

அன்று ஏதேன் தோட்டத்தில் ஆதி மனங்களை இணைத்து வாழ வைத்த ஆண்டவர்..
இன்று திருச்சபை தோட்டத்தில் இரு மனங்களையும் இணைத்து ஆசி வழங்குகின்றார், பிறருக்கு ஆசியாய் வாழ….

திருமணத்தை கடவுளும் திருச்சபையும் மேன்மை உள்ளதாக கருதுவதால், மனுக் குடும்பம் உறுதியான நம்பிக்கையில் நிலைத்திருக்க திருமணம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பதே திருமண வழிபாட்டு ஆராதனையின் சாராம்சம்….

1. கரங்கள் இணைந்து இருப்பது முக்கியமல்ல கருத்தில் இணைந்து இருப்பதையே கடவுள விரும்புகின்றார் (மாற்கு10: 2 – 9)

ஒவ்வொரு திருமணத்தின் போதும் , திருமணம் முடிந்து மணமக்கள் புறப்பட்டு ஆலயத்தில் இருந்து செல்லும் பொழுது, தங்கள் கரங்களை இணைத்து செல்லுகின்ற காட்சி மிகவும் அழகான ஒரு காட்சி. ஆலயம் அவர்களை ஒன்றாக இணைத்தது.
அது ஒரு அடையாளம். கரங்களை இணைத்து இருப்பது, கருத்தில் ஒன்றாக இணைய வேண்டும் என்பதே அதன் நோக்கம் என்பதை ஒவ்வொரு இல்லத்தரசர்களும், இல்லத்தரசிகளும் உணர்ந்து கொள்ள வேண்டும்.


கருத்து வேறுபாடுகள் எழுவது தவிர்க்க இயலாதது ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு ,கருத்து சுதந்திரம் உண்டு. விவாதங்கள் உருவாகலாம் ஆனால் அந்த விவாதங்கள் சண்டையாக உருவெடுக்கும் பொழுது, விரிசல்கள் இல்லறத்தில் உருவாகிறது, அந்த விரிசல்கள் பகையாக உருவெடுக்கின்றது. அந்தப் பகை இல்லற வாழ்வையே சிதைத்து விடுகின்றது. வெளி உலகிற்கு கரங்களை இணைத்து இணைபிரியாத தம்பதிகளாக உலகிற்கு காட்டிக் கொள்ளலாம் ஆனால் கரங்களை இணைத்த ஆண்டவர், நம்மை காண்கிறார் என்ற உணர்வு இல்லற தம்பதிகளுக்கு மேலோங்கி நிற்கும் பொழுது, இறைவன் இல்லத்தின் தலைவராக இருந்து, இல்லறத்தை நல்லறமாக மாற்றுகின்றார்.
திருமறையில் இரண்டு படைப்புகள் நமக்கு காண்பிக்கப்பட்டுள்ளன. ஒன்று ஆதியாகமம் முதல் அதிகாரம், மற்றொன்று ஆதியாகமம் இரண்டாம் அதிகாரம். இதில் ஏவாள் படைக்கப்பட்ட இரண்டாம் வரலாற்றையே பெரும்பாலும் திருச்சபைகள் ஆயர்கள் திருமண வழிபாட்டின்போது பயன்படுத்துகின்றார்கள். இங்கு பெண் என்பவள் ஆணுக்கு துணையாக படைக்கப்பட்டவள் என்பதையே பெரும்பாலான அருள் உறைகளும், அருள் உரையாளர்களும் முன் வைக்கின்றார்கள். பெண் சார்ந்து வாழ வேண்டியவள் என்பதை அது வலியுறுத்துகின்றது.


நற்செய்தி பகுதியில் இயேசு கிறிஸ்து ஒரு நிலைப்பாட்டை முன்வைக்கின்றார். அது என்னவென்றால் படைப்பின் வரலாறு இரண்டு இருக்கலாம், ஆனால் முதலாம் அதிகாரத்தில் படைக்கப்பட்ட, படைப்பின் வரலாற்றை, மனுகுல வரலாற்றை ஆண்டவர் தன் சமூகத்திற்கு முன்மாதிரியாக எடுத்து வைக்கின்றார்.
ஆதியிலே அவர்கள் ஆணும் பெண்ணும் ஆக படைக்கப்பட்டார்கள் என்ற முதல் படைப்பை இயேசு கிறிஸ்து தன் சமூகத்திற்கு எடுத்துக்காட்டுகின்றார். காரணம் அந்த ஆதி சமூகம் கடவுளால் இணைக்கப்பட்ட சமூகம், கடவுளால் கரங்கள் பிடித்து வைக்கப்பட்ட சமூகம். அங்கு சமத்துவம் உண்டு, மனிதநேயம் உண்டு, ஒருவரை ஒருவர் மதிப்பது உண்டு, ஒருவரை ஒருவர் தாங்குவது உண்டு, ஏற்றத்தாழ்வு அற்ற ஆதி தம்பதிகள என்பதை உணர்ந்து அதன் இறையியல் அழுத்தத்தையும், ஆழத்தையும், கருத்தியலையும் உணர்ந்து, இயேசு அந்த படைப்பின் வரலாற்றை எடுத்து சமூகத்திற்கு முன்மாதிரியாக விளக்கி கூறுகின்றார்.


திருச்சபை, ஆயர்கள், அருட்ப பணியாளர்கள் தம்பதியர்களின் கரங்களை இணைத்து வைப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவர் தம் வாழ்வில் சிக்கல்கள் வரும் பொழுது அதை சீர்படுத்தி, செம்மைப்படுத்தி கருத்தில் இணைந்து வாழ்வது இறைவனுக்கு கொடுக்கின்ற காணிக்கை என்பதை உணர வைப்பதே திருச்சபையின் தலையாய கடமை என்பதை ஒவ்வொரு ஊழியரும், உணர்ந்து பணியாற்ற கடவுள் ஆற்றலை தந்து கொண்டே இருக்கின்றார். ஆலோசனை தந்து கொண்டே இருக்கின்றார்.
ஒவ்வொரு தம்பதியர்களும் கரங்களை மாத்திரம் இணைத்துக் கொள்வதில் அல்ல கருத்தில் ஒருவருக்கொருவர் இணைந்து கடவுளை பிரியப்படுத்த வாழ்வதே இல்லற வாழ்வில் மேன்மை மகத்துவம் என்பதை உணர்ந்து வாழ துவங்குவோம்.

2. ⁠ ஆலயம் வந்து செல்வது சிறப்பல்ல ஆலயமாக வாழ்வதையே கடவுள் எதிர்பார்க்கின்றார். (1 கொரிந்தியர் 13: 1 – 14)

திருமணம் முடிந்த ஒவ்வொரு தம்பதிகளும் ஆலயத்திற்கு இணைந்து வரும் பொழுது, சமூகம் அவர்களை பார்த்து மகிழ்கின்றது. திருச்சபை அவர்கள் உறவுகளை பார்த்து பெருமிதம் கொள்கிறது. ஏனென்றால் இந்த ஆலயம் அவர்களை ஒன்றாக இணைத்தது. ஆண்டவர் அவர்களை ஒன்றாக இணைத்திருக்கின்றார். திருச்சபை அதற்கு சான்றாக இருக்கின்றது.


ஒவ்வொரு திருமண ஆராதனையின் போதும் வாசிக்கின்ற திருமறைப்பகுதி பெரும்பாலும் அது 1 கொரிந்தியர் 13: அதிகாரம் தான். கேட்டு கேட்டு பழகின ஒரு திருமறை பகுதி. இந்தத் திருமுறை பகுதியை தேர்ந்தெடுப்பதின் நோக்கம் இல்லற வாழ்வின் அடிப்படை அன்பு ஒன்றே. அன்பு சகலத்தையும் தாங்கும் என்று ஆரம்பிக்கின்ற அந்த திருமறை பகுதி முடியும் பொழுது, இறுதியில் அன்பே பெரியது என்று முடியும். வெறுப்பதற்கு ஓர் ஆயிரம் காரணங்களை சுட்டிக் காட்டலாம். அன்பு செய்வதற்கு ஒரு காரியம் இருந்தால் அது போதும்.


இயேசு கிறிஸ்து வாழ்ந்த சமயத்தில், அனேக மக்கள் தங்கள் தவறுகளினால், மீறுதல்களினால் பாவம் செய்து சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு, குடும்பத்தால் வெறுக்கப்பட்டு, சமயத்தால் தள்ளி வைக்கப்பட்டு , வாழ்க்கையில் விளிம்பு நிலை தள்ளப்பட்டார்கள். அன்றைய சமூகம் அவர்களின் குறைகளை மட்டும் கருத்தில் கொண்டு அவர்களை விலக்கி வைத்தார்கள், தண்டித்தார்கள், ஆனால் இயேசு கிறிஸ்து முற்றிலும் மாறுபட்டவராக, ஒரு மாற்று சிந்தனையை, செயல்பாடுகளை சமூகத்தில் எடுத்து வைத்தார். அது என்னவென்றால் அப்படிப்பட்டவர்களை வெறுப்பதற்கு பல காரணம் இருக்கலாம் ஆனால் இயேசு கிறிஸ்து அவர்களை நேசித்தார், அரவணைத்தார், மறுவாழ்வழித்தார் இதற்கு ஒரே ஒரு காரணம் அன்பு ஒன்றே. இந்த அன்பு தான் இல்லற வாழ்விற்கு அடித்தளம், நங்கூரம், அச்சாணி என்பதை பவுல் தன் திருச்சபைக்கு, தம்பதியருக்கு வலியுறுத்துகின்றார்.


திருமணம் முடிந்த பின்பதாக அவர்கள் பல நேரங்களில் ஆலயம் வந்து செல்வார்கள். ஒவ்வொரு முறையும் ஆலயம் வரும் பொழுது மனதில் கொள்ள வேண்டிய காரியம், இறை அன்பு நம்மை இணைத்தது, இறை அன்பு நம்மை வாழ செய்கிறது, இறை அன்பு நம்மை நித்தம் நடத்துகிறது, இந்த இறையன்பு நம்மை விட்டு விலகாது, ஒருபோதும் நம்மை தண்டிக்காதது, இந்த இறை அன்பு எப்போதும் நம்மோடு இருக்கிறது என்பதை உணர்ந்து ஆலயமாகவே வாழ அர்ப்பணிப்பது தான் இல்லற வாழ்க்கையின் மேன்மையானது என்பதை தம்பதியர்கள் தங்கள் மனதில் கொள்ள வேண்டும்.
அப்போஸ்தலராகிய பவுலும் தன் திருச்சபைக்கு இதையே வலியுறுத்துகின்றார். இல்லம் அன்பினால் கட்டப்படும் பொழுது அந்த இல்லத்தில் இறைவன் வாழுகின்றார்.
தனது முதல் அற்புதத்தை இயேசு கானாவூர் திருமணத்தில் நிகழ்த்தினார். அதற்கு காரணம் இந்த உலகை கட்டி அமைப்பதில் இல்லற வாழ்வு முதன்மையானது என்பதை உணர்ந்தே தனது திருப்பணியை கானாவூர் திருமணத்தில் துவக்குகிறார் என்று யோவான் எடுத்துரைக்கின்றார்.


இல்லற வாழ்வை அமைத்து துவக்கின ஆலயத்திற்கு இணைந்து வரும் பொழுது ஆண்டவர் எப்படி பிரியப்படுவாரோ, அந்த ஆலயமாகவே வாழும் பொழுது ஆண்டவர் மேன்மை அடைகின்றார், மகிமை அடைகின்றார், திருமணமும் மேன்மை அடைகிறது.
சமூகத்தில் இல்லறம் நல்லறமாக வாழும் பொழுது புது உலகம், புது சமூகம் கட்டமைக்கப்படுகிறது என்பதை உணர்ந்து உயிருள்ள ஆலயமாக தம்பதிகள் இணைந்து வாழும் பொழுது திருமணம், திருமண வாழ்வு மகத்துவம் பெறுகின்றது.

3. மனசாட்சியின் படி வாழ்வது முக்கியமல்ல இறை சாட்சியாக வாழ்வதையே கடவுள் வலியுறுத்துகின்றார். ( மல்கியா2; 13 – 16)

இஸ்ரவேல் சமூகம் சட்டங்களாலும், நியமங்களாலும், கட்டளைகளாலும் வடிவமைக்கப்பட்டது. தண்டனை மிகவும் கடுமையாக இருக்கும் (….உதாரணமாக கல்லெறிந்து கொள்ளப்படுதல் அதிலும் ஒன்று..)
மோசேய்க்கு கடவுள் வகுத்து தந்த கட்டளைகளில் ஒன்று விபச்சாரம் செய்யாது இருப்பாயாக, பிறர் பொருளை இச்சியாது இருப்பாயாக. இந்த சட்டத்தை எவராவது மீறுவார் எனில் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். தண்டிக்கப்படுவதற்கு குறைந்தபட்சம் இரண்டு சாட்சிகள் தேவை. எனவே மோசேயினால் நமக்கு வழங்கப்பட்ட சட்டம் யாருக்கானது என்ற புரிதல் நமக்கு அவசியமானது.
ஆண்களை மையமாகக் கொண்ட, அன்றைய யூத சமூகத்தில் பெண்களுக்கு உரிமை இல்லை. சார்ந்து வாழ வேண்டிய நிர்பந்தம். இந்த சூழ்நிலையில் ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் வாழலாம், அவர்களுக்கு தண்டனை அரிது, ஆனால் பெண்களுக்கு கடுமையான தண்டனை கிடைத்திருந்திருக்கிறது.


மல்கியா தீர்க்கதரிசி யூத சமூகத்து மக்களுக்கு இந்த சட்டத்தை வலியுறுத்துகின்றார். எப்படி என்றால் கணவன் மனைவிமாக இணைந்து வாழும்போது, மனசாட்சியின் படி வாழ்வது சிறப்பல்ல இறைவனுக்கு சாட்சியாக வாழ வேண்டும். இதை கடவுள் விரும்புகிறார் என்பதை அழகாக எடுத்துக்காட்டுகின்றார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு செயலுக்கும் காரணம் கற்பிப்பது மனசாட்சியின் அளவீடு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனவே ஒவ்வொன்றிற்கும் நியாயம் கற்பிப்பது காட்டிலும் இல்லற வாழ்வில் இறைவன் சாட்சியாக இருக்கிறார் எனவே மனசாட்சியின் படி வாழ்வதைக் காட்டிலும் இறைவனுக்கு சாட்சியாக வாழ்வது இல்லறத்தின் சிறப்பு என்பதை இஸ்ரவேல் சமூகம் உணர வேண்டும் என்பதை சுட்டிக்காட்டி எடுத்துரைக்கின்றார்.

கடவுளுக்கு சாட்சியாக வாழாதவர்கள், தன் துணையை நியாயம் இன்றி நீதி இன்றி விலக்கி வைக்கப்படுகிறவர்கள் அவர்தான் காணிக்கைகளை ஆண்டவர் ஒருபோதும் ஏற்கமாட்டார். அவர்களின் பலிகளை ஒருபோதும் ஆண்டவர் ஏற்றுக் கொள்வதில்லை என்பதை யூத சமூகத்திற்கு சுட்டிக்காட்டுகிறார். தன் துணையை தள்ளிவிடுகிறதை ஆண்டவர் நான் வெறுக்கிறேன் என்று யூத சமூகத்திற்கு சுட்டிக்காட்டுகிறார். ஏன் வெறுக்கிறேன் என்றால் பாதிக்கப்பட்ட மக்கள் யூத சமூகத்தில் பெரும்பாலும் பெண்களே. திருமறையில் பல இடங்களில் இப்படி பாதிக்கப்பட்ட பெண்களை காணலாம். இயேசு கிறிஸ்துவும் விபச்சாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணுக்கு மறுவாழ்வு அளிப்பதையும் நாம் பார்க்கலாம். தள்ளி விடுதல் நியாயமல்ல என்று இறைவன் பெண்களின் பக்கம் இருந்து கட்டளைகளை, சட்டங்களை தந்துள்ளார்.


ஆண் – பெண் என்ற சமத்துவ சமூகத்தை கட்டி அமைப்பதில் கடவுள் முன் செயல்படுகின்றார். இஸ்ரவேல் சமூகம் அதற்கு சான்றாக இருக்க வேண்டும் என்பது இறைவனின் விருப்பம். கடவுள் விரும்பாத இல்லற வாழ்வை வாழ்ந்து கடவுளின் ஆலயத்தில் காணிக்கை படைப்பதில், பலி செலுத்துவதில் எந்தவித பயனும் இல்லை மாறாக கடவுளின் ஆலயத்தை அழுக்கு செய்கிறீர்கள் என்பதை தீர்க்கர் தன் சமூகத்திற்கு எடுத்துரைக்கின்றார்.


கடவுளால் உண்டாக்கப்பட்ட இல்லற வாழ்வு மனசாட்சியின் படி வாழ்வதை காட்டிலும் கடவுளுக்கு சாட்சியாக வாழ்வதை கடவுள் எப்போதுமே விரும்புகின்றார். இல்லத்தை அழகு படுத்துவதை காட்டிலும் இல்லறத்தை அழகு படுத்துவோம். தம் சொந்த விருப்பத்தை நிறைவேற்றுவதை காட்டிலும் கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றுவது இல்லறத்தில் அழகு என்பதை உணர்வில் நிறுத்துவோம். இல்லங்கள் எப்போதும் கடவுளின் இல்லங்களாக உருவாக்குவதில் ஒவ்வொரு நாளும் முனைப்போடு செயல்படுவோம். இணைந்து கடவுளுக்கு சாட்சியாக வாழும் பொழுது இல்லறம் கணம் பெறுகிறது இறைவன் மேன்மை அடைகின்றார்.

நிறைவாக

எங்கெல்லாம் நியாயமின்றி, சுய நலனுக்காக விவாகரத்து நடைபெறுகிறதோ அவர்களோடு ஆண்டவரும் அந்நியர் ஆகிறார்ஆகின்றார்…

நீதிமன்றங்களில் எவரின் வாதங்கள் திறமையாக இருக்கிறதோ அவர் வாதங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும், இதன் அடிப்படையில்தான் நீதி வழங்கப்படும்….

வரதட்சணை வாங்காதிருப்பாயாக , கொடுக்காத இருப்பாயாக என்பது கடவுள் சமூகத்திற்கு தந்த புதிய கட்டளை…..

திருமண வாழ்வு என்பது ஒரு பல்கலைக்கழகம் போன்றது அன்பு முதன்மையான பாடம். பிற பாடங்கள் ஒப்புரவு, மதிப்பளித்தல், விட்டுக்கொடுத்தல், பாதுகாத்தல், பராமரித்தல், கணப்படுத்துதல், உதவி செய்தல், ஊக்கமூட்டுதல்,….. மறந்துவிட வேண்டாம் முதல்வர் நமது இறைவனே…..

அருட்பணி. அகஸ்டி காந்தி,

தென்னிந்திய திருச்சபை.

One thought on “திருமணத்தை மதித்தல்”
  1. Great title automatically tells the Subject. Thank You Rev. Agusty Gandhi anna and Rev. Jebasing Samuel brother

Comments are closed.