17 டிசம்பர் 2023

இரட்சிப்புக்கான நம்பிக்கை
Hope of Salvation
மத்தேயு 1:18-25

• இரட்சிப்பு, விடுதலை போன்ற சொற்கள் திருமறைக்குள்ளும் திருமறைக்கு வெளியேயும் பயன்படுத்தப்படுகின்ற சொற்களாகும். சிறப்பாக, திருவருகை நாட்களில் இந்த மீட்புக்காக நாம் காத்திருக்க அழைக்கப்படுகின்றோம். இம்மீட்பு பகிர்வின் ஊடாகவும் (லூக்கா 19:1-10), பற்றுறுதியின் ஊடாகவும் (உரோமயர் 1:17), நற்செயல்கள் வாயிலாகவும் (மத்தேயு 25:31-46) ஏற்படுகின்றதென்பது திருமறை உண்மை.

• இந்த மீட்புக்காக நாம் எம்மை தயார்படுத்துகின்ற வேளையில் பல வேளைகளில் சோர்ந்துப் போகின்றோம். ஆண்டவர் எம் நடுவில் இருப்பதால் அவரின் இருப்பு நிலையைக் கொண்டு எமது கரங்களை நாம் பலப்படுத்த அழைக்கப்படுகின்றோம் (செப்பனியா 3:14-20).

• திருப்பாடல் – சங்கீதம் 43ல், இறைவனே எமது வெளிச்சம். அவரே எமது மீட்புமானவர். ஆகையால், மீட்பின் தோற்றுவாயாக அவர் இருப்பதனால் நாம் அதைக் குறித்து சந்கேகப்படாமல் நம்பிக்கையோடு எங்கள் பிரயாணங்களைத் தொடரமுடியும்.

• 2 பேதுரு 3:8-13 வரையுள்ள பகுதியில், எல்லா மானிடர்களும் மீட்படைய வேண்டும் என்பது இறைவிருப்பம். எனவேதான், அவர் தமது திட்டத்தில் பொறுமையோடிருக்கிறார் என ஆசிரியர் கூறுகிறார். எனவே, கடவுளின் பொறுமை பாவத்தில் வாழும் மானிடருக்கான ஒரு வாய்ப்பாகும். அதனைப் பயன்படுத்தி நாம் தனிநபராக, சமூகமாக, தேசமாக மீட்பைச் சம்பாதித்துக் கொள்ள வேண்டும். இம்மீட்பு மனிதருக்கு மாத்திரமன்றி இயற்கைக்கும் அவசியமாகின்றது. எனவேதான், உரோமயர் 8:22ல், படைப்புக்கள் அனைத்தும் மீட்பிற்காக பிரசவ வேதனை அடைவதாக பவுல் பேசுகின்றார்.

• மத்தேயு 1:18-25 வரையுள்ள பகுதியில், மீட்புப் பயணத்தில் சற்று சந்தேகப்பட்ட யோசேப்புவைப் பற்றி பார்க்கின்றோம். மரியாளின் கருவில் உருவாகி இருக்கும் குழந்தையை ஏற்றுக்கொள்ள அவர் தயக்கப்பட்டார். இவ்வேளையில் தேவதூதர் யோசேப்புவுக்குத் தோன்றி, “இதோ நீ ஐயப்படாதே” என்று அவரை உற்சாகப்படுத்தி மீட்புக்கான நம்பிக்கையைக் கொடுக்கின்றார். அன்று முதல் அவர் சந்தேகமின்றி மீட்பரை ஏற்றுக் கொள்ளுகின்றார். ஆமேன்.

ஆக்கம்: அற்புதம்