ஒரு நீதியான கடவுள் எப்படி ஒரு ஏமாற்றுக்காரனான யாக்கோபை தன் மீட்பின் திட்டத்திற்கான கூட்டாளியாக தெரிவுசெய்ய முடியும் என்பது வியப்பான செய்தி. கடவுள் எதையும் காரணமின்றி செய்வதில்லை, எனவே யாக்கோபை கடவுள் தெரிந்துகொண்டதற்காக காரணங்கள் என்ன என்பதை தியானிப்போம்.

பெயர்க்_காரணம்

‘யாக்கோபு’ (יעקב) என்ற சொல் நேரடியாக எத்தன் என்று பொருள்தராது. “குதிக்காலை பிடித்தல்” அல்லது “ஒன்றை வலிந்து பிடித்தல்” என்றே பொருள்தரும். இதன் வேர்ச்சொல் ‘ஆகப்’ (עקב) என்பதற்கு ‘குதிக்கால்’ என்று பொருள். பிறக்கும்போது தன் அண்ணனின் குதிக்காலை பிடித்துக்கொண்டே வெளிவந்ததினால் தான் அந்த பெயர் அவருக்கு இடப்பட்டது. எனினும் ஏமாற்றுவதற்கு இச்சொல் சில இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

தாயின் வயிற்றிலேயே போராட்டம்

வயிற்றுக்குள்ளேயே தன் அண்ணனுடன் யாக்கோபு போராடியதாக அவர் தாய் ரெபேக்கா கூறுகிறார் (ஆதி.25:22). மேலும் பிறக்கும்போதும் அண்ணன் குதிக்காலை பிடித்துக்கொண்டே பிறக்கிறார் (ஆதி.25:26). இயல்பிலேயே யாக்கோபு ‘போராட்டகுணம்’ உள்ளவராகத் திகழ்ந்தார் என்றும் அந்த போராட்டகுணத்தின் மூலமாகத்தான் கடவுள் தன் மீட்பின் திட்டத்தை முன்னெடுத்து செல்லப்போகிறார் என்பதை முன்னுரைக்கும்படியாக விவிலியம் இவைகளை பதிவுசெய்கிறது.

யாக்கோபு_எத்தனா?

தன் அண்ணனிடமிருந்து ‘சேஷ்டபுத்திரபாகம்’ எனும் தலைமகன் சொத்துரிமையையும், அண்ணனுக்காக வைத்திருந்த ஆசீர்வாதத்தையும் சாதுர்யமாக ஏமாற்றி பறித்ததாக எண்ணி நாம் யாக்கோபை ‘எத்தன்’ என்று சொல்கிறோம். விலிலியத்தில், ஒரே இடத்தில் யாக்கோபின் அண்ணன் ஏசா, “அவன் பெயருக்கு ஏற்றார் போல் செய்துவிட்டான்” (ஆதி.27:36) என்று தன் தந்தையிடம் நொந்துகொள்கிறார். ஆனால் கடவுள் யாக்கோபை எத்தனென்று ஒருமுறை கூட சொல்லவில்லை. அப்படியெனில் சேஷ்டபுத்திரபாகத்தையும், தந்தையின் ஆசீர்வாதத்தையும் சாதுர்யமாக பறித்தது ஏமாற்றுவேலை இல்லையா?

உரிமைக்காக போராடுபவரை எத்தனாக பார்க்கும் சமூகம்

வாழையடி வாழையாக கடைபிடிக்கப்பட்டுவரும் சமூகத்தின் அநீதியான வழக்கங்களை யாரேனும் எதிர்த்தால் இச்சமூகம் அவரைகளை ஏமாற்றுக்காரன், தீவிரவாதி, சமூகவிரோதி, கலகக்காரன், திருடன் என்றெல்லாம் பட்டம் சூட்டும். ஆனால் அதையும் தாண்டி செயல்பட்டவர்கள் தான் இச்சமூகத்திற்கு நீதியை கற்பிக்கும் விளக்குகளாக இறந்தும் கூட நம்மை வழிநடத்தும் வழிகாட்டிகளாக கடவுள் தெரிந்துகொள்கின்றார்.

பாரபட்சமான_சேஷ்ட புத்திரபாகம்

‘சேஷ்டபுத்திரபாகம்’ என்பது அன்றைக்கு எல்லா ஆணாதிக்க சமூகங்களிலும் பரவலாக இருந்த சமூக வழக்கமாகும். ஆணுக்கு நிகராக சமபங்கு சொத்துரிமை பெண்களுக்கும் வேண்டும் என்ற போராட்டத்திற்கே கடந்த 2005-ஆம் ஆண்டுதான் விடிவுகிடைத்தது. அன்றைய காலத்தில், “சேஷ்டபுத்திரபாகம்” என்று அழைக்கப்பட்ட, முதல் மகனுக்கு சொத்தில் இருபங்கு மற்றும் குடும்பத்தில் எல்லாவற்றிலும் முதலுரிமை என்பவைகளை உள்ளடக்கிய பாரபட்சமான சமூக வழக்கம் இருந்தது (உபா.21:17). இவ்வழக்கத்தின்படி இளைய பிள்ளைகள் அற்பமாய் எண்ணப்பட்டதினால் தான் கடவுள் எப்போதும் மீட்பின் திட்டத்திற்கான அழைப்பில் இளைய பிள்ளைகளையே அதிகம் தேர்ந்தெடுப்பதை காண்கிறோம் (ஆபேல், ஈசாக்கு, யாக்கோபு..). தலைமகனுக்கு அதிக சலுகையளிக்கும் இந்த பாரபட்சமான வழக்கத்தை எதிர்த்து அன்றைக்கே சாதுர்யமாக போராடி தன் உரிமையை மீட்டது யாக்கோபு தான்.

பாரபட்சமான தந்தையின் ஆசீர்வாதம்

“உன் சகோதரருக்கு எஜமானாயிருப்பாய்; உன் தாயின் பிள்ளைகள் உன்னை வணங்குவார்கள்”(ஆதி.27:29). தம்பியை அண்ணனுக்கு கீழாக்கி வேலைக்காரனாக்கும் (அடிமையாக்கும்) பாரபட்சமான ஆசீர்வாதத்தை எதிர்த்து தன் தாயின் உதவியோடு சாதுர்யமாக போராடி தன் உரிமையை மீட்கிறார்.

மாமனாரின்_சுரண்டல்

லாபான், யாக்கோபுக்கு தன் இரண்டாம் மகளை மணமுடித்து தருவேன் என்று கூறி 7 ஆண்டுகள் வேலைவாங்கினதுமட்டுமல்லாமல் ஏமாற்றி முதல் மகளை மணமுடித்துவைக்கிறார். மீண்டும் இரண்டாம் மகளை மணமுடித்து தருவதாக மேலும் 7 ஆண்டுகள் யாக்கோபின் உழைப்பை அநியாயமாக சுரண்டுகிறார். யாக்கோபு இத்தனை ஆண்டுகள் கடுமையாகவும் அர்ப்பணிப்போடும் வேலைசெய்து லாபானுக்கு செல்வத்தை பெருக்கியிருந்தபோதும், மனைவிகள் பிள்ளைகள் என பெரிய குடும்பமான பிறகும் தனக்கென்று ஆஸ்தியற்றவனாக, அடிமைபோல லாபானுக்கு வேலைசெய்துக்கொண்டிருந்தார். அதிலும் அவர் சாதுர்யமாக செயல்பட்டு தன் உரிமையை மீட்கிறார்.

கடவுளையும் மனிதரையும் வென்றவர்

இப்படி அநீதியான, பாரபட்சமான மற்றும் சுரண்டுகிற சமூக வழக்கங்களை எதிர்த்து கேள்விகூட கேட்காமல் இதுதான் விதி என்று வாழ்கிற சமூகத்தில் முதன்முறையாக இவைகளையெல்லாம் எதிர்த்து சாதுர்யமாக போராடி புரட்சி செய்தவர்தான் யாக்கோபு. விதி என்று ஒன்று இல்லை, நம் விடாமுயற்சியால் விதியையும் மதியால் வெல்லலாம், ஏன் இந்த சமூக கட்டமைப்பையே புரட்டிப்போடலாம் என்பதற்கு சிறந்த முன்னோடியாக யாக்கோபு திகழ்கிறார். தன் தகப்பன் பாரபட்சமாய் அளித்த ஆசீர்வாதத்தால் இத்தனை ஆண்டுகள் பாடுபட்டதுதான் மிச்சம் என்று உணர்ந்த யாக்கோபு, தன் கனவில், “உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும் (ஆதி. 28:14) என்று ஆபிரகாமுக்கு தந்த அதே அழைப்பை தனக்கும் தந்த கடவுளிடமே “எனக்கு ஆசியளித்தாலொழிய நான் உம்மை விடமாட்டேன்” என்று போராடுகிறார். பாரபட்சமான சமூகத்தின் வழக்கங்களால் ஏமாற்றப்பட்டு, சொந்த மாமனாராலேயே உழைப்பு சுரண்டப்பட்டு, தன் அண்னனின் நிமித்தம் மரணபயத்தினால் ஆட்கொள்ளப்பட்டு உடைந்திருந்த வேளையிலும் கடவுளின் துணையைவேண்டியும், ஆசி வேண்டியும் கடைசியில் கடவுளையே போராடி யாக்கோபு வெல்கிறார். யாக்கோபின் இத்தனை போராட்டங்களையும் பார்த்த கடவுள், உடைந்த நேரத்திலும் சோர்ந்துவிடாமல் போராடுகிற அவரின் போராட்டகுணத்தால் தான், “கடவுளையும், மனிதரையும் போராடி மேற்கொண்டாய்“ (ஆதி.32:28) என்று பாராட்டி யாக்கோபு என்ற பெயரை ‘இஸ்ரயேலாக’ மாற்றி உலகின் மீட்பை பலவந்தம் பண்ணும் விசுவாச சந்ததியாக யாக்கோபை கடவுள் தெரிந்துகொள்கிறார். இஸ்ரயேல் என்பதற்கு”கடவுளோடு போராடுகிறவர்கள்” அல்லது “கடவுளை மேற்கொள்கிறவர்கள்” என்று பொருள் [saw-raw’ (שׂרה) – மேற்கொள்ளுதல் , ale (אל) – கடவுள்]

முடிவுரை
இந்த இக்கட்டான சூழலிலும் யாக்கோபைப்போல போராட்டகுணம் உள்ளவர்களாக வாழ்வின் கடைசி வரை போராடுவோம். விடுவித்து வாழ்வளிக்கும் கடவுள் தாமே நம் போராட்டத்தில் துணைநின்று விடுதலையை நோக்கி வழிநடத்துவாராக!

<sub><sup><strong>அருட்பணி கிறிஸ்து அடியான்</strong></sup></sub>
அருட்பணி கிறிஸ்து அடியான்

தமிழ்நாடு, இந்தியா.