நீங்கள் கோடீஸ்வரனாவதற்காகவே இயேசு சிலுவையில் மரித்தார்
என்று ஒரு யூடியூப் பிரசங்கியார் ஆணித்தரமாக அடித்து பிரசங்கித்துக்கொண்டிருந்தார். “இன்றைக்கு பிரசிங்கிமார்கள் பிரசங்கிப்பதையே இயேசு அன்றைக்கு பிரசங்கித்திருந்தால் இயேசுவை யாரும் சிலுவையில் அறைந்திருக்கமாட்டார்கள்” என்ற லியனார்ட் ரேவன்ஹில்லின் (Leonard Ravenhill) கூற்றையே இவரின் பிரசங்கம் நினைவூட்டியது. அதற்காக அவர் பயன்படுத்திய விவிலியப்பகுதி, 2 கொரிந்தியர் 8:9 “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே
ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள்நிமித்தம் தரித்திரரானாரே”.
அவர் இந்த விவிலியப்பகுதியை பயன்படுத்தி இவ்வாறு விளக்கம் அளித்தது சரியா?

  1. கொரிந்து சபை ஊழியத்திற்கு உதாரத்துவமாக கொடுக்க ஊக்கப்படுத்தவே இப்பகுதி பவுலால் எழுதப்பட்டது.
  2. அதற்கு “உபத்திரவத்திலும், தரித்திரத்திலும் பரிபூரண சந்தோஷமாக கொடுக்கும்” மக்கதோனியா சபையின் உதாரத்துவத்தை எடுத்துகாட்டாக பயன்படுத்துகிறார் (வ.2).
  3. அவர்கள் திராணிக்கு ஏற்பவும், அதற்கு மிஞ்சியும் கொடுக்கும் மனமுடையவர்கள் என்பதற்கு பவுல் சாட்சிபகர்கிறார்(வ.3).
  4. தங்கள் தரித்திரத்திலும், பரிசுத்தவான்களுக்கு செய்யப்படும் தர்ம ஊழியத்தை தாங்கினார்கள். அதாவது ஊழியத்தின் மூலம் இறைமக்கள் வாழ்வுபெற தரித்திரத்தின் நடுவிலும் கொடுத்து தங்களை தரித்திரமாக்கிக்கொண்டார்கள் என்கிறார்(வ.4)
  5. மேலும் அவர்கள், கடவுளுக்கும் ஊழியத்திற்கும் தங்களையே அர்பணித்ததையும் குறிப்பிடுகிறார்(வ.5)
  6. இப்படிப்பட்ட “ஊழியத்திற்காக தங்களை தரித்திரராக்கிக்கொண்டு அர்ப்பணித்த” அவர்களின் உதாரத்துவத்தை அவர்கள் கடவுளிடமிருந்து பெற்ற “கிருபையாக” பவுல் குறிப்பிடுகிறார் (வ.1)
  7. அதே கிருபையை கிறிஸ்து கொண்டிருப்பதை கொரிந்து சபைக்கு சுட்டிக்காட்டி,
  8. அந்த கிருபையின்படி (கிருபையின் ஐஸ்வர்யத்தின் படி) கிறிஸ்துவும் தம் தரித்திரத்திலே நாம் ஐஸ்வர்யமாகும்படி தரித்திரரானதை ஒப்பிடுகிறார் (வ.9).
  9. இங்கே குறிப்பிடும் ஐஸ்வர்யம் ஆண்டவர் இயேசுவின் கிருபையின் ஐஸ்வர்யமே ஆகும் (எபே.1:7, 2:6, 3:19). அந்த கிருபையின் ஐஸ்வர்யம் ஆண்டவர் இயேசுவின் மூலமாக நாம் பெற்ற ஜீவனையும், ஜீவனின் பரிபூரணத்தையும் குறிக்கிறதேயன்றி உலக செல்வத்தை குறிப்பிடவில்லை. “…நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்” (யோவான் 10:10). பிறருக்கு வாழ்வின் முழுமையை கொடுக்கும் கிருபையின் ஐஸ்வர்யமே கிறிஸ்துவினுடைய அளவற்ற ஐஸ்வர்யம் (எபே.3:8).
  10. அப்படியானால் ஆண்டவர் இயேசுவின் சிலுவை மரணத்தின் நோக்கம் என்ன? பின்வரும் வசனம் அதை தெளிவாகக் கூறுகிறது. “அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து, சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி, பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார்”. (எபேசியர் 2:14,15,16)
  11. எனவே, பவுல், ஆண்டவர் இயேசுவை மக்கதோனியா சபைக்கும், மக்கதோனியா சபையை கொரிந்துசபைக்கும் முன்னுதாரணமாக்கி ஊழியத்தையும், இறைமக்களை அவர்கள் வறுமையில் தாங்குவதையும் ஊக்கப்படுத்தியதே இந்த விவிலியப்பகுதியின் பொருள் ஓட்டமாக இருக்கிறது.
    12.எனில், நாம் வறுமையில் வாடவேண்டும் என்று பவுல் கூறுகிறாரா? நிச்சயம் இல்லை. மற்றவர்களுக்குச் சகாயமும் நமக்கு வருத்தமும் உண்டாகும்படியல்ல, சமநிலையிருக்கும்படியாகவே ஈகையை முக்கியப்படுத்தியிருக்கிறார் (வ.13).
  12. யாரும் வறுமையில் வாடுவதற்காக கொடுக்காமல் எல்லாரும் வறுமையை வெல்லக் கொடுப்பதே கிறிஸ்தவ ஈகையாகும். “சமநிலைப் பிரமாணத்தின்படியே [ἰσότης (isotēs) – equity, fairness, what is equitable] , அவர்களுடைய செல்வம் உங்கள் வறுமைக்கு உதவும்படிக்கு இக்காலத்திலே உங்களுடைய செல்வம் அவர்களுடைய வறுமைக்கு உதவுவதாக” (வ.15) எல்லோரும் வாழ்வுபெறவேண்டும் என்ற இந்த சமநிலை பிரமாணத்திற்காகத் தான் ஆண்டவர் இயேசுவும் மரித்தார்.
  13. எனவே, எல்லோரும் வறுமையை வெல்ல ஆதாரமாக இருக்கும் இந்த சமநிலைப்பிரமாணத்தை பற்றி பேசாமல் உலக ஐஸ்வர்யத்தில் கொழிப்பதற்காக மட்டும் இந்த வசனத்தை (1கொரி.8:9 -ஐ) பயன்படுத்துவது அபத்தமாகும்.
<sub>அருட்பணி. கிறிஸ்து அடியான்</sub>
அருட்பணி. கிறிஸ்து அடியான்
2 thought on “நீங்கள் கோடீஸ்வரனாவதற்காகவே இயேசு சிலுவையில் மரித்தார்”

Comments are closed.