மார்ச் 31ம் திகதிக்கு பின்பதாக இலங்கை நாட்டின் எல்லா நகரங்களிலும் காட்டுத்தீயைப் போல பரவியது அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு அலை. மக்கள் தமது வீடுகளில் இருந்து மௌனம் காக்க முடியாமல் தெருவில் அநீதிக்கும் ஊழலுக்கு எதிராக போராடுகிறார்கள். அடித்தட்டு மக்களின் குரல்கள் இன்று இலங்கை நாட்டையே உலுக்கி கொண்டு இருக்கிறது. சாமான்ய மனிதனின் வேதனை இன்று உலகிற்கே அம்பலமாகியுள்ளது. ஆசியாவின் ஆச்சரியம் என மார்தட்டிய நாடு இன்று அதிக கடன் சுமையினாலும்; ஊழலினாலும் ஆசியாவின் அவமானமாக சித்தரிக்கப்படுகிறது. நமது நாட்டில் இன்று எங்கு பார்த்தாலும் நீண்ட நீண்ட வரிசைகள், இரண்டு நாட்களுக்கு முன் இணையத்தில் நான் வாசித்த கவிதை பின்வருமாறு,

'அதிகாலையில் குழந்தைகள் அழுகிறார்கள் பால்மாவு இல்லை, காலையில் ஆண்கள் அழுகிறார்கள் பெட்ரோல் இல்லை, பகலில் பெண்கள் அழுகிறார்கள் கேஸ் இல்லை, இரவில் ஒட்டுமொத்த குடும்பமும் ஒப்பாரி வைக்கிறார்கள் கரண்ட் இல்லை'.

அன்றாட வாழ்வுக்கு வழியில்லாமல் மக்கள் பாதைகளில் தங்களின் தேவைகளையும் மன வேதனைகளையும் கோபத்தையும் போராட்டத்தின் மூலம் வெளிப்படுத்துகிறார்கள். சாதாரணமாக போராட்டம் என்ற வார்த்தையைக் கேட்டவுடன் நமது முகங்கள் சற்று மாற்றமடையும். விஷேடமாக கிறிஸ்தவர்களுக்கு போராட்டம் என்பது, ‘அது கலகக்காரர்கள் செய்யும் செயல், போராடுவது தவறு, அவ்வாறான காரியங்கள் திருமறையில் இல்லை, போராடுவது நம் வேலையில்லை’ என்று காரணங்களை அவர்கள் கூறுவார்கள்.


‘இயேசு ஓரு போராளி’

ஆனால் வரலாற்றில் வாழ்ந்த இயேசுவின் வாழ்க்கையை பார்க்கும் பொழுது அவர் ஓர் விடுதலையாளனாகவும், போராளியாகவே வாழ்ந்தார். வரலாற்றில் வாழ்ந்த ‘இயேசு ஓரு போராளி’ போராட்ட குணம் நிறைந்தவர் அநீதிக்கு எதிராக துணிந்து தைரியமாக பேசிய இளைஞர். இயேசுவின் வாழ்வே ஓர் போராட்டக்களம் தான். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து இயேசுவுக்கு அவ்வூரில் வாழ்வதே போராட்டமானது. பணம் படைத்தவனும் அதிகாரத்தில் இருப்பவனுக்கு அடிபணியவே அன்றைய சமுதாயம் கற்றுக் கொடுத்தது. ஆனால் இயேசு அப்படியாய் வாழவில்லை ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட ஓரங்கட்டப்பட்ட, வெறுக்கப்பட்ட மனிதர்களாய் சமூகத்தில் கருதாத, அடித்தட்டு மக்களோடு இயேசு வாழ்ந்தார் அவர்களுக்காக பேசினார், அவர்களுக்காக அவர்களோடு போராடினார். மாற்றுக் கருத்து கொண்டவராயும் மாற்று கலாச்சாரத்தை சமுதாயத்தில் நிலைநாட்ட பாடுப்பட்டார். இயேசுவின் பணியில் கலிலேயாப்பணி மிக முக்கியமானது.

பெருபான்மையோராலும் செல்வந்தர்களாலும், அதிகாரத்தாலும், சிறுமைப்படுத்தப்பட்ட மக்களே கலிலேயாவில் வாழ்ந்தனர். இயேசு இவர்கள் மத்தியிலேயே தனது பணியில் அதிக காலத்தை செலவிட்டார். இயேசுவின் புரட்சிப் பணிகளில் மிக முக்கியமானது எருசலேம் நகரில் நடந்த நிகழ்ச்சியாகும்; வருடத்திற்கு ஒருமுறை உரோமைய பேரரசர் யூதேயாவிலிருந்து எருசலேமுக்கு பவனியாக வருவார். அப்பவனி ஓர் அதிகாரப்பவனி யூதமக்களை அச்சுறுத்தும் பவனி ஏகாதிபத்யத்தின் உச்சியில் இருக்கும் உரோம சக்கரவர்த்தி தனது அதிகாரத்தையும், பணபலத்தையும், படைபலத்தையும் காட்சிப்படுத்தும் பவனி. உங்கள் மனதில் இவ்வார்த்தைகளை சிந்தித்து பாருங்கள். ‘ஆயிரங்கனக்கான படைவீரர்கள் குதிரைவீரர்கள் அணிவகுத்து மிகுந்த சத்தத்துடன் நகருக்குள் வருகின்றனர். ஆயுதங்களை ஏந்திய வீரர்கள் பயங்கரமான ஆயுதங்களையும் காட்சிப்படுத்திக்கொண்டு ஆயுத பவனி வருகின்றனர். தமக்கு இருக்கும் செல்வத்தை வெளிப்படுத்துமுகமாக தங்கத்தாலும் பொன்னாலும் செய்யப்பட்ட மிகவும் விலையுயர்ந்த அரச ஆபரணங்களையும் அரச சின்னங்களையும் உயரே காண்பித்து சக்கரவர்த்தியின் செழிப்பை அகங்காரத்தோடு மக்களுக்கு காண்பிக்கின்றனர். இப்பேரரசனின் பவனியில் சாதாரண மக்கள்; பங்கு கொள்ளவில்லை மாறாக சமுதாயத்தில் உயர்ந்த பிரதான ஆசாரியன், சதுசேயர், மறைநூல் அறிஞர்கள், திருக்கோயில் மூப்பர்கள், பரிசேய தலைவர்கள், செல்வந்தர்கள் என பணம் படைத்த பலர் கலந்து கொண்டார்கள். படைவீரர்களின் காலடி சத்தத்தோடும் வாத்திய கருவிகளின் இசையுடனும் ‘ சக்கரவர்த்தி வாழ்கஇ சக்கரவர்த்தி வாழ்க என்ற கோஷங்களுடன் இப்பவனி நடைபெறுகிறது. உரோமைய பேரரசன் (Son of God) கடவுளின் மகன் என்ற சிந்தை உரோமையர்களின் மனதில் காணப்பட்டது. ஆகவே கடவுளின் மகன் வாழ்க வாழ்க என்ற முழக்கங்களுடன் உரோமைய சக்கரவர்த்தி தற்பெருமையோடும் அகங்காரத்தோடும் பூரண அதிகாரத்தோடும் தனது விலை உயர்ந்த பொன்னால் செய்யப்பட்ட தேரில் பவனி வந்தான். சில நாட்களுக்கு பின் அதே ஜெருசலேமிற்குள் இயேசுவும் நுழைகிறார், படைபலம் பணபலத்தோடு அல்ல மாறாக தமது வாழ்நாளில் ஒடுக்குமுறையையும் நிராகரிப்பையும் மட்டுமே அனுபவித்த உடல் ஊனமுற்றோர், ஏழைகள், கைம்பெண்கள், சிறுவர்கள், நோயாளிகள் தொழிலாளர்கள் மற்றும் அடித்தட்டு மக்களோடு எருசலேமிற்குள் நுழைகிறார்.

திருமறையில் மத்தேயு 21: 1-11 மற்றும் மற்றைய நற்செய்திகளில் இந்த நுழைதலை ‘இயேசு வெற்றி ஆர்ப்பரிப்போடு நுழைதல்’ என குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் இயேசுவின் ஊர்வலம் ஏகாதியபத்திய அரசிற்கு எதிரான பேரணி; ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வுக்கான பேரணி. படைவீரர்களுடனும்இபரிவாரங்களுடன், ஆயுதங்களுடனும் ஆபரணங்களுடனும் குதிரையின் மேல் ஆரவாரத்துடன் வந்த பேரரசனை கிண்டல் செய்யும் விதமாக இயேசு கழுதையின் மேல் சமுதாயத்தில் ஓரங்கட்டப்பட்டவர்களோடும் அடிதட்டு மக்களோடும் மக்கள் போராட்டத்தில் தன்எதிர்ப்பை காட்டுகிறார் (People’s Protest). யோவான் 12: 19 இதைக் கண்ட பரிசேயர், பார்த்தீர்களா! நம் திட்டம் எதுவும் பயனளிக்கவில்லை, உலகமே அவன் பின்னே போய்விட்டது’ என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். அத்தோடு அங்கு கூடியிருந்த மக்கள் அரசனுக்கு பயந்து வாழ்க வாழ்க என்று கோஷம் எழுப்பினர், ஆனால் இயேசுவை கண்ட மக்கள் சந்தோஷத்தோடு ஓசன்னா, ஓசன்னா என மகிழ்ச்சியாக ஆர்ப்பரித்தனர்.

இரண்டாவதாக இயேசுவின் பேரணி யாரையும் அச்ச்சுறுத்தும் அடாவடியான கலகக்கார பேரணியாக இருக்கவில்லை மாறாக ‘அமைதியின் பேரணியாக (Peace Protest)’ காணப்பட்டது. சமாதானத்தின் அடையாளமாக குருத்தோலைகளும் கழுதையும் இப்பேரணியில் பயன்படுத்தப்பட்டது. இயேசு எருசலேம் நகரை நெருங்கி வந்ததும் ”அமைதிக்குரிய வழியை நீ அறியவில்லையா என அந்நகரில் சமாதானத்திற்காக அழுதார்” லூக்கா 19:41-42. அத்தோடு செக்கரியா சொன்ன வார்த்தைகளை யூதர்களுக்கு நினைவுறுத்துமாறு இயேசு அமைதியாக பவனி செல்கிறார் ‘மகளே சீயோன்! மகிழ்ந்து களிகூரு; மகளே எருசலேம்! ஆர்ப்பரி. இதோ! உன் அரசர் உன்னிடம் வருகிறார். அவர் நீதியுள்ளவர்; வெற்றிவேந்தர்; எளிமையுள்ளவர்; கழுதையின்மேல்இ கழுதைக் குட்டியாகிய மறியின்மேல் ஏறிவருகிறவர் செக்கரியா 9:9.

மூன்றாவதாக, இயேசுவின் பேரணி ஓர் எதிர்ப்பின் பேரணி Protest Rally, ஏகாதிபத்தியத்திட்கும் ஊழலுக்கும் ஏழைமக்களின் பொருளாதார சுரண்டலுக்கு எதிரான பேரணி. சமநோக்கு நற்செய்திகளுக்கு அமைவாக இப்பேரணி முடிந்தவுடன் இயேசு கோவிலை தூய்மைப்படுத்துகிறார், எவ்வாறு? கோவிலின் உள்ளே ஊழல் மோசடிகளில் ஈடுபடும் வியாபாரிகளை சாட்டையால் மிக கோபமாக அடித்து துரத்துகிறார். பலிகளுக்காக அதிகம் பணம் வாங்கும் வணிகர்களை கடிந்துகொள்கிறார், கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும் அங்கே உட்கார்ந்திருந்த நாணயம் மாற்றுவோரையும் கண்டார்; அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்; ஆடுமாடுகளையும் விரட்டினார்; நாணயம் மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு மேசைகளையும் கவிழ்த்துப்போட்டார். அவர் புறா விற்பவர்களிடம், ‘இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்; என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள் என்றார். (யோவான் 2:13-16) இச்செயட்பாடு கோவிலின் லாபத்தில் குளிர் காய்ந்து கொண்டிருந்த அதிகாரிகளுக்கும், பிரதான ஆசாரியன், மூப்பர்களுக்கு, பேரரசனுக்கும், சிற்றசர்களுக்கும் பெரும் சவாலாக அமைந்தது. இயேசுவின் எதிர்ப்பு அதிகாரத்திற்கு எதிரான சாவு மணியாக எதிரொலித்தது. இன்று எமது நாட்டில் கேட்கும் சத்தம் ‘கடவுளே எங்களை காப்பாற்றுங்க, காப்பாற்றுங்க, நாங்க ரொம்ப கஷ்டப்படுறோம்’ இதே சத்தம் தான் அன்றும் எருசலேமில் கேட்டது, ஓசன்னா, ஓசன்னா அதன் அர்த்தம் ‘கடவுளே எங்களை விடுவித்தருளும்’.

இன்று எமது நாட்டை அவதானிக்கும் பொழுது மக்களால் மக்களின் நலனுக்காக இப்போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இப்போராட்டங்கள் எப்பொழுதுமே அடித்தட்டுமக்களின் பேரணியாகவும், அமைதி பேரணியாகவும், அநீதிசெய்பவர்களை அசச்சுறுத்தும் பேரணியாக இருக்கவேண்டும். மாறாக அரசியல் கட்சிகளின் பேரணியாகவும், காலகக்காரர்களின் பேரணியாகவும் மாறினால் இதன் போக்கு மாற்றம் அடைந்துவிடும். போராட்டத்தின் இலக்கு அநீதியை எதிர்ப்பது அதாவது அதற்கு பொறுப்பான மனிதர்களின் தவறை உணரவைத்து மாற்றத்தை கொண்டுவருவதுமாகும்.

பேராயர் டெஸ்மாண்ட் டுடு இவ்வாறு கூறுகிறார் ‘அநீதியின்போது நாம் நடுநிலையாக இருந்தால், அடக்குமுறையாளரின் பக்கத்தைத் சார்தவராவோம், யானை எலியின் வாலில் கால் வைத்து இருக்கும்போது நான் நடுநிலையாக இருக்கிறேன் என்று நீ சொன்னால், உங்கள் நடுநிலைமையை எலி பாராட்டாது”.


எமது நாட்டில் இன்று நடக்கும் அறவழிப்போராட்டங்கள் புதிய மாற்றத்திக்கான விதைகள். இயேசுவை போன்று நாமும் அநீதிகளை எதிர்க்கும் விடுதலையாளர்களாக மாறவேண்டும். கண்முன் நடக்கும் அநீதிகளை கண்டு நாம் கண்மூடித்தனமாக இருக்கக்கூடாது, இயேசுவின் சீடர்களாக இயேசு நம்மிடம் எதிர்பார்ப்பது, நீதிக்கும் நேர்மைக்கும் குரல் கொடுத்து அப்பணி செய்பவர்களோடு இணைத்து மனித நலனுக்காக போராடுவதேயாகும்.

இயேசுவின் சீடர்களாக இப்பணியை செய்ய நாம் ஆயத்தமா?

சிந்திப்போம் செயற்படுவோம்

ஓசன்னா, ஓசன்னா

அருட்பணி. ரூபன் பிரதீப்
அருட்பணி. ரூபன் பிரதீப்

பரிசுத்த மகதலேனா மரியாள் ஆலயம்,
இலங்கைத் திருச்சபை,
அம்பாறை.