கிறிஸ்து வருகையின் முதல் ஞாயிறு
(1st Sunday in Advent)

நம்முடைய தாய் தந்தையாம் கடவுளாலும் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவினாலும் நம்மனைவருக்கும் அருளும் அமைதியும் உண்டாயிருப்பனவாக. சிறப்பாய் கிறிஸ்துவருகையின் நாட்களில் அடியெடுத்தும் வைத்துள்ள நமக்கு அருளின் மேல் அருள் இரக்கத்தின் மேல் இரக்கம் உண்டாவதாக.

  1. இறைப்பற்று – திருப்பாடல் (Psalm) 43

உலக வாழ்வில் துன்பங்கள் வருகின்ற போது பல நேரங்களில் கலங்கிப் போகிறோம். ஆனால் நாம் செய்ய வேண்டியதாவது நம் முழு நம்பிக்கையையும் கடவுள் மீது வைத்திட வேண்டும். கடவுள் ஒருபோதும் நம்மை கைவிடுவதில்லை. மாறாக, நம்முடைய மனம் நம்பிக்கையின்மையை உள்வாங்குகின்ற போது கடவுள் நம்மை கைவிட்டுவிட்டதாக எண்ணுகின்றோம். அதன் விளைவாக மனஅழுத்தத்திற்கு ஆளாகி புலம்புகின்றோம். நம்முடைய கண்கள் ஆண்டவரை நோக்குகின்ற போது நம்பிக்கையின்மை அகன்று நம்பிக்கை பெருகும். கடவுள் எப்பொழுதுமே ஆற்றல் நிறைந்தவர். நம்முடைய நம்பிக்கையின்மையினால் நாம் அதை உணராதிருந்தோம். கடவுளை நம் கண்கள் நோக்குகின்ற போது கடவுள் ஆற்றல் உள்ளவர் என்பதை உணர்கின்றோம். அப்படி உணர்கின்ற போது அவருடைய ஆற்றல் நம்மை நிறைப்பதையும் நம்மில் பெருகி நம்மை ஆற்றலுடையவர்களாய் மாற்றுவதையும் நாம் உணர முடியும். நாம் செய்ய வேண்டியது. நம்முடைய கண்கள் உலகத்தின் மீது இராமல் கடவுளுக்கு நேராக திருப்ப வேண்டும். அப்பொழுது மனம் கடவுளுக்கு நேராய் திரும்பும். கடவுளின் ஆற்றல் நம்மை நிறைத்திடும். இறைப்பற்று ஒன்றே நம்மை மீட்டுக் கொள்ளும். நம் புதுப்பிக்கப்படுவோம்.

  1. இறைவரின் பற்று – எசாயா (Isaiah) 42:1-9

இஸ்ரயேல் மக்கள் கடவுளை விட்டு விலகி நம்பிக்கையற்று போகின்ற போதெல்லாம் கடவுளுக்கு சொல்ல முடியாதஅளவிற்கு கோபம் வரும். அந்த கோபத்தின் ஊடாய் கடவுளின் அருள் வெள்ளமாய் பாய்ந்து வரும். இந்த திருமறை பகுதியை லூக்கா 15:11-32 வரை அடங்கிய பகுதியில் மனந்திரும்பியவனாய் திரும்பி வரும் மகனை ஓடிச் சென்று கட்டியணைத்து ஆரத்தழுவி தம் உணர்வை ஆனந்தக் கண்ணீரோடு வெளிப்படுத்தும் தந்தையின் அன்பை உள்வாங்கி அந்தவிதமான உணர்வோடு நாம் உணர்ச்சி ததும்ப ததும்ப இப்பகுதியைப் படிக்க வேண்டும். அப்பொழுது தான் இப்பகுதியின் உண்மையான செய்தியை நாம் உணர முடியும்.

இஸ்ரயேல் மக்கள் தவறு செய்யும் போதெல்லாம் கடவுள் ஆபிகாம், ஈசாக்கு யாக்கோபு ஆகிய மூதாதையருக்குக் கொடுத்த வாக்குத்தத்தங்களை நினைவுகூறுகிறார். அப்படி நினைவுகூறுகின்ற போது கடவுள் இஸ்ரயேலுக்காக பரிதபிக்கிறார். அவரது உள்ளம் இஸ்ரயேலின் மீது அன்பின் வெள்ளமாய் இரக்கத்தின் ஊற்றாய் பொங்கிவழிகிறது. இஸ்ரயேல் தவறு செய்கின்ற போது அதை திருத்தும் படியாக அதனை தண்டனைக்கு ஒப்புக்கொடுக்கும் போதெல்லாம் அதனை திருத்தி தம்மோடு திருப்பிக் கொள்ளும் படியாய் சகித்துக் கொண்டும் சுவர்ப்புறமாய் திரும்பி தம் மக்களுக்காய் அழுகின்ற கடவுளாய் இருக்கிறார். நாம் இறைப்பற்று உடையவர்களாய் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நம்மை அன்புசெய்கிறார். நாம் பாவம் செய்து பற்றுறுறவர்களாய் இருக்கும் நிலையிலிருந்து மனந்திரும்பி அவரை நோக்கி பார்க்கின்ற போது நம்மீது அவர் பற்றுகொள்ளுகின்றவராய் இருக்கிறார்.

நமக்காய் நீதி நிலைநாட்டுகின்றவராய், கண்களுக்கு ஔியும், ஆன்மாவிற்கு விடுதலையும் அளித்து நம்மை உலகாசையின் சிறையிருப்பிலிருந்து விடுதலையளித்து தம்முடைய பேரின்ப வாழ்வில் நாம் பங்குபெற தம் முழு நிறைவான அன்பை வெளிப்படுத்தி நமக்கு புதுப்படைப்பின் மகிழ்ச்சியை அளிக்கிறார். ஆக, நாம் அவர் மீது நம்பிக்கையற்றவர்களாய் இருந்தாலும் கூட அதிலிருந்து வெளியேறி வாழ்வு பெற நம்மீது நம்பிக்கையும் பற்றும் பாசமும் உடையவராக கடவுள் இருக்கிறார்.

  1. இறைவருக்காற்றும் தொண்டு உரோமையர் (Romans) 13:8-14

கடவுள் மனிதருக்கு அதிகாரங்களையும் பொறுப்புகளையும் கொடுக்கிறார். பெரும்பான்மையான மனிதர் அதிகாரம் ஏன் கொடுக்கப்படுகிறது என்று உணராதவர்களாகவே இருக்கின்றனர். தாங்கள் அதிகாரமற்றவர்களாய் இருக்கின்ற போது எந்த அதிகாரத்திற்கும் கீழ்ப்படிவதில்லை. ஆனால் தாங்கள் அதிகாரத்தில் இருக்கின்ற போது எல்லாரும் தங்களுக்கு கீழ்ப்படிய வேண்டும், அடிமைகளாய் இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். அது தவறு ஆகும்.

அதிகாரத்திலிருப்போர் முதலாவது கடவுளின் அதிகாரத்திற்கும் கிறிஸ்துவின் அதிகாரத்திற்கும் கீழ்ப்படிய வேண்டும். கடவுளுக்கு கீழ்ப்படிதல் என்பது திருச்சட்டத்தை மனிதநேயத்தை முதன்மை நோக்கமாகக் கொண்டு கடைபிடிக்க வேண்டும். சட்டத்தையும் நமக்கு கிடைத்த வாய்ப்பையும் நாம்முறைகேடாய் கைப்பற்றிய அதிகாரத்தையும் மற்றவர்களை அழிப்பதற்காக பயன்படுத்தக்கூடாது. திருச்சட்டத்தை நாம் எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும் என்பதையும் கைக்கொள்ள வேண்டும் என்பதையும் ஆண்டவர் இயேசுவின் மலைப்பொழிவில் (மத்தேயு 5-7 பிரிவுகள்) விளக்கியுள்ளபடி புரிந்து கொண்டு கடவுளின் திருவளம் நிறைவேற அன்பின் ஆளுகை செய்ய வேண்டும்.

மற்றவர்களை ஆளும் வேட்கையுள்ளவர்களாய் இருக்கும் முன் நம் உள்ளத்தைக் கடவுளின் வார்த்தைக்கு உட்படுத்தி ஆளுகை செய்திட வேண்டும். நம் மனதினை கடவுளின் திருவுளத்திற்கு ஏற்புடையதாகத் திருத்திருத்திக் கொள்ள வேண்டும். மொத்தத்தில் கிறிஸ்துஇயேசுவின் சிந்தையுடையவர்களை கிறிஸ்துவை அணிந்துகொள்ள வேண்டும். கடவுளை முன்னிட்டும் கிறிஸ்துவை முன்னிட்டும் ரோம அராஜக ஆட்சியை போல இறுமாப்பாய் ஆளாமல் உள்ளத்தைத் தாழ்த்தி நாம் அறநெறி வாழ்வு வாழ்ந்து கடவுளுக்கு பணியாற்ற வேண்டும் என்பதே கடவுளின் திருவுளம் என்பதாக பவுலின் வழி நமக்கு நற்செய்தி அருளப்பட்டுள்ளது.

  1. இறைவரின் தொண்டு
    லூக்கா (Luke) 4:16-30

கடவுள் தம் திருவுளத்தை நிறைவேற்றிட காலங்கள் தோறும் தம் அடியவர்களை இறைவாக்கினராக, ஆசாரியராக, அரசர்களாக, லேவியராக, மறைநூல் அறிஞராக, திருத்தொண்டராக, அருட்பணியராக அனுப்புகிறார். எல்லா நிலைகளிலும் ஏதோ ஒரு குறைவு அல்லது முழுநிறைவு பெறாத ஒரு தொய்வுநிலை இருப்பதை உணர்கிறார். தம் திருவுளத்தின் படி தம் மனுக்குலத்தை மீட்புக்கு நேராய் வழிநடத்துவதில் ஒரு சிறு சறுக்கல் இருப்பதாக உணருகிறார்.

மோசே, எலியா என மாபெரும் இறைவாக்கினர்களின் வழிநடத்துதலிலும் கூட ஒரு இடர்பாடு இருப்பதை திருமறையில் படிக்கிறோம். இத்தகைய நிலையில் இதுவரை கடவுள் தம் பிரதிநிதிகளின் வழியாக மக்களுக்கு பணி செய்தார். இப்பொழுதோ கடவுள் தாம் தம்முடைய உருவில் உண்டாக்கிய மானுடத்தை தமக்கு சொந்தமானதாக மீட்டுக் கொள்ள தம்மைமே தம்மகன் வடிவில் அனுப்புகிறார்.

இதுவரை தம் சார்பில் தொண்டு செய்ய தம் அடியவரை அனுப்பினார். இப்பொழுதோ கடவுள் தாமே தொண்டு செய்ய அடிமையின் உருவில் வந்துவிட்டார். அவரது மீட்புப் பணியின் நோக்கம் அடக்கியாளும் அதிகாரம் செய்வதல்ல. அதிகார வர்க்கத்தால் அடக்கியாளப்பட்டு பசியுற்றோராய், பார்வையற்றோராய், சிறைப்பட்டோராய், காயப்பட்டோராய் இருக்கும் மக்களை அவர்களின் துன்ப நிலையிலிருந்து மீட்டெடுத்து மனித அதிகாரங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு பேரின்ப வாழ்விற்குள் அவர்கள் மகிழ்ந்து திளைத்திடும் படி இறங்கி வந்தார்.

“தமக்கு சொந்தமானதிலே வந்தார். அவரு்கு சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.” ஆளுயர மாலை அணிந்து செருக்குடன் நடப்பதற்கல்ல. ஆளாகவே மதிக்கப்படாத மக்களுக்கு ஆற்றல் அளித்து அன்பு செய்து ஆளாக்கவே நாம் பணி செய்ய வேண்டும். அதுதான் நாம் கடவுளின் மீது பற்று வைத்துள்ளோம் என்பதற்கான அடையாளம். அதுதான் கடவுள் நம்மீது பற்று வைத்துள்ளதற்கான நோக்கம். அதற்காக நாம் கிறிஸ்துவை அணிந்துகொள்ள வேண்டும்.

அதிகாரத்தில் இருப்போரைக் கொண்டாடுவோரே கடவுளின் பணிசெய்யும் எளிமையான பணியாளரை மதிப்பற்றவர்களாக எண்ணாதிருப்போம்.

அதிகாரம் என்பது அடக்கியாளக் கொடுக்கப்பட்டதோ பழித்தீர்த்துக் கொள்ள கொடுக்கப்பட்டதோ அல்ல. அன்பின் பணி செய்ய கொடுக்கப்பட்டதே ஆகும்.

Rev. Daulton, ALC.

அருட்பணியாளர்களே அதிகாரத்தை கைப்பற்றுவதற்காய் நேரத்தை வீணடிக்காமல் நம்மை புறக்கணிப்போர் மீது வெறுப்பு கொள்ளாமல் நமக்கானவர்கள் நம்மை ஏற்றுக்கொள்ளாததை எண்ணி வருந்தி நேரத்தை வீணாக்காமல் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருக்கும் மக்களுக்கு அருட்பணியாற்றுவோம். இதுவே கடவுளின் திருவுளம். இயேசு அப்படி செய்தார். நாமும் செய்வோம். கிறிஸ்துவருகையின் நாட்கள் மனமகிழ்ச்சியுடையதாய் இருக்கும்.

கிறிஸ்துஇயேசுவின் மனநிலையே நம்மிலும் இருக்கக் கடவது.

நம்முடைய தாய் தந்தையாம் கடவுளின் அன்பும் மீட்பராம் கிறிஸ்துஇயேசுவின் அருளும் தூயாவியாரின் இணையறாத கூட்டுறவும் நம்மில் நிறைந்து பெருகி நம்மை ஆசீர்வதித்து காப்பதாக.

உலக மீட்பர் இயேசுவின் விடுதலைப்பணியில்

அருட்பணி. டால்ட்டன் மனாசே
அருட்பணி. டால்ட்டன் மனாசே

ஆற்காடு லுத்தரன் திருச்சபை