மாற்கு 4:30-33, மத்தேயு 13:31-32, லூக்கா 13:18-19

இறையரசை குறித்து மக்களுக்கு இலகுவாக போதிக்கும் முறைமையில் ஆண்டவர் இயேசு கடுகு விதை உவமையை எடுத்து மக்களுக்கு கற்பிக்கின்றார். பலஸ்தீனா தேசத்தில் கடுகு விதை முளைத்து செடியாகி 12 அடி உயரம் வரை செல்லும் என்பதை மக்கள் அறிவர். இதனைப் பயன்படுத்தியே கடுகு சிறிதாக வளர்ந்து அது பின்னர் ஓர் பெரிய செடியாக மாறுகின்றது என இயேசு போதிக்கின்றார். இச்செடியில் ஆகாயத்துப் பறவைகள் கூடுகள் அமைக்கின்றன என ஆசிரியர் கூறுகிறார். இங்கு ஆகாயத்து பறவைகள் என்பது ரோமர்களை குறித்து நிற்கின்றது.

கடுகு விதையைப் போன்றே இறையரசும் சிறிதாக ஆரம்பித்து பெரிதாக வளர்ச்சியடைகிறது. இவ் இறையரசு எல்லோருக்கும் உரியது. மத்தேயு 8:11ல் கூறப்படுவது போன்று மக்கள் வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் வருகை தருவர். இவ்வாறான, எல்லை கடந்த இறையரசை குறித்து லூக்கா நற்செய்தியாளனும் கூறுகின்றார். மத்தேயு 13:45-48 வரையுள்ள பகுதியில் கூறப்படும் வலை உவமையில் ஒரு தொழிலாளி கடலில் வலையை வீசும்போது பல வகையான மீன்கள் அகப்படுகின்றது. இதேபோன்று இறையரசிலும் சாதி, சமய வேறுபாடுகள் எதுவுமின்றி மக்கள் ஒன்றுகூடுவார்கள் என இயேசு போதிக்கின்றார். மேலும், ஆண்டவர் இயேசு தனது உயிர்த்தெழுதலின் பின்னர் யோவான் 21:6-13 வரையுள்ள இப்பகுதியில் இயேசுவின் சீடர்கள் கடலில் வலையை வீசும்போது 153 வகையான மீன்கள் அகப்பட்டன என ஆசிரியர் கூறுகின்றார். அக்காலத்தில் 153 வகையான குலமக்கள் வாழ்ந்துள்ளனர். எனவே, இவர்கள் அனைவரையும் இறையரசு உள்ளடக்குகின்றது என்பதே இதன் உண்மை ஆகும்.

             

J.T.Robinson என்பவர் திருச்சபையை இறையரசின் மாதிரியாகவும் உபகரணமாகவும் அடையாளமாகவும் காண்கிறார். இதனை அடித்தளமாகக் கொண்டு ஒரு சிலர் திருச்சபையை இறையரசாக கண்டுகொள்வர். ஆனால், திருச்சபை இறையரசு அல்ல என்பது இங்கு தெளிவாகின்றது. கடவுளுடைய அரசு விழுமியங்கள் சார்ந்ததாகும். உதாரணமாக, அன்பு (யோவான் 3:6), மன்னிப்பு (லூக்கா 7:36-50), நீதி (ரோமர் 14:17), மற்றவர்களை பாராட்டுதல் (லூக்கா 7:1-12) போன்ற இன்னோரன்ன பல விழுமியங்களால் கட்டப்படுவதே இறையரசாகும். எனவே, நாமும் எல்லோரையும் உள்வாங்கும் தன்மையுள்ள மனிதராக மாற வேண்டியது மிக அவசியம் ஆகின்றது.

             

யோவான் 2:13-17 வரையுள்ள பகுதியில் ஆண்டவர் இயேசு எருசலேம் ஆலயத்தை தூய்மைபடுத்துகின்றார். இச்செயல் இயேசுவின் பணியின் ஆரம்பத்தில் நடைபெறுவதாக யோவான் கூறுகின்றார். எனினும் மத்தேயு, மாற்கு, லூக்கா போன்ற சமநோக்கு நற்செய்தியாளர்கள் அவரின் பணியில் நிறைவுக் காலத்தில் நடைப்பெற்றதாகக் குறிப்பிடுவர். எனினும், ஆண்டவராகிய இயேசு ஆலயத்தில் ஆடு, மாடு விற்பவர்களை சவுக்கினால் துரத்தியடிக்கின்றார். ஏனெனில், பொதுவாக எருசலேம் ஆலயத்துக்கு சிதறி வாழுகின்ற யூதர்கள் பஸ்கா பண்டிகை, கூடாரத் திருவிழா, அறுவடை விழா போன்ற விழாக்களுக்கு மக்கள் வருவார்கள். தூரதேசத்திலிருந்து வருகின்றபடியால் பலி செலுத்துவதற்காக ஆடு மாடுகளை அழைத்து வரமுடியாது. எனவேதான், ஆலயத்தில் விற்பனை நடைபெற்றது. தவறு என்னவெனில் யூதரல்லாதோர் வழிபடுவதற்காக நியமிக்கப்பட்டிருந்த இடத்திலேயே இவ்விற்பனை நடைப்பெற்றது. இதனால், யூதரல்லாதோர் வழிபாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்களை உள்வாங்க வேண்டிய ஆலயம் அவர்களை வெளித்தள்ளியது. இதனையே, ஆண்டவர் இயேசு கண்டித்தார். இதனைப் போன்று நாமும் மற்றவர்களை வெளித்தள்ளாமல் இறையரசின் பண்பாகிய உள்வாங்கும் பண்பை கைகளினால் கட்டப்பட்ட ஆலயத்திற்குள்ளும் எமது சரீரமாகிய ஆலயத்திற்குள்ளும் 1 கொரிந்தியர் 3:16-17 உருவாக்கி கொள்வோமாக. இதுவே, உள்வாங்கும் தூதுப்பணியாகும்.

ஆக்கம்: அற்புதம்