திருமறை பகுதிகள்

நீதிமொழிகள் 4: 1 – 19
அப்போஸ்தலர் 22: 1 – 5
லூக்கா 4: 31 – 44

உட்பகுமுன்

ஒரு
குழந்தையின்
முதல்
வகுப்பறை
தாயின்
கருவறை தான்…

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பழைய பழமொழி
பள்ளிகள் இல்லா ஊரில்
குடிபுக வேண்டாம் இது புதிய பழமொழி…

ஒருமுறை கல்லூரி வகுப்பறைக்குள் ஒரு குரங்கு நுழைந்துவிட்டது. அப்பொழுது பேராசிரியர் உள்ளே வந்தார். உள்ளே வந்ததும் மாணவர்களை பார்த்து கிண்டலாக என்ன நியூ அட்மிஷனா? என்று கேட்டார். அதற்கு ஒரு மாணவி எழுந்து இல்லை ஐயா நியூ அப்பாயின்மென்ட்! என்றார்.
வகுப்பறையில் சிரிப்பொலி அடங்குவதற்கு வெகு நேரம் ஆனது….

நீங்கள்
பேசுவது தெளிவாக
கேட்கவில்லை என்றார்கள்..
படகிலிருந்து உரையாற்றினார்,
இன்னும் கொஞ்சம் உயரத்திலிருந்து பேசுங்கள் என்றார்கள்…
மலையிலிருந்து உரையாற்றினார், இன்னும் கொஞ்சம் உயரத்தில் இருந்து என்றார்கள்…
அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப
சிலுவையில் இருந்து … இந்த உயரம் போதுமா? என்றார், நம்
குருவேசு ஸ்வாமி…

கிறிஸ்தவ கீர்த்தனைகளில் “இவரே பெருமான்…” (75) என்ற ஒரு பாடல் உண்டு.
அந்த பாடலில் “நல்லாசிரியர் இயேசுவை” அழகாக வர்ணித்து இருப்பார்கள்,
எப்படி என்றால் பார்வையற்றோருக்கு உதவும் “விழியாம்” ….
பாவ இருளைப் போக்கும் “ஒளியாம்”…
தெய்வம் இருக்கும் தலஞ்செல் வாசல் “வழியாம்”….

“இயேசுவே …நல்ல மேய்ப்பன்” என்று திருமறை கூறுகின்றது…,
நாமும் உரக்கச் சொல்லுவோம் “இயேசுவே நல்ல ஆசிரியர்”… வழியாக, வாய்மையாக, வாழ்வாக…

நமது சிந்தனைக்காக தரப்பட்டுள்ள திருமறை பகுதிகள் வழியாக, இயேசு கிறிஸ்துவின் கற்பித்தலையும், அதன் முறைகளையும், அதனால் உண்டான விளைவுகளையும் நாம் கருத்தில் கொண்டு, புது கருத்தியல்களை உருவாக்கி புதியதொரு உலகு படைக்க ஆயத்தம் ஆகுவோம்…

1. விதியை மாற்றி புது வழியில் பயணிக்க வைத்த … குருவேசு ஸ்வாமி. (நீதிமொழிகள் 4: 1 – 19)

சாலமோன் அரசர் தன் மகனுக்கு, புத்தியை சம்பாதி (Knowledge), ஞானத்தை சம்பாதி (Wisdom) (v 5) , அது உன்னை காக்கும்,(v 6)அது உனக்கு வாழ்வு தரும்,(v 13) அது உன்னை நீதிமானாக்கும் (v 18), உன்னை வாழ்விக்கும்( v 10), என்று அழகாக கற்றுக் கொடுக்கின்றார். அரசர் சாலமன் அவரின் மகனுக்கு கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். அவரே தன் மகனுக்கு ஆசிரியராகவும் இருந்தார்.

அரச குடும்பத்திற்கு, குரு அரண்மனைக்கே வந்து கற்றுக் கொடுப்பார். அரசர் மகன் சாதாரண குடி மக்களின் பிள்ளைகளோடு அமர்ந்து கற்பது கற்பனையிலும் நடக்காத ஒன்று…. அது ஒரு எழுதப்படாத விதி (Un written Law).

அரச பிள்ளைகளுக்கு கல்வி கிடைப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. எளியோருக்கும், வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும், திக்கற்றவர்களுக்கும், பெண்களுக்கும் இந்தக் கல்வி அன்று கிடைத்திருக்குமா என்ற கேள்வியை இந்த திருமறை பகுதி எழுப்புகின்றது. அரசருடைய குடும்பத்திற்கு கிடைத்த இந்த கல்வி, சாதாரண குடிமகனின் பிள்ளைகளுக்கு எட்டா கனியாகவே அன்றும், இன்றும், என்றும் இருந்து வருகிறது…

அரச குடும்பத்து மக்களின் பிள்ளைகளும், உயர் குடிமக்கள் என்று சொல்லிக் கொள்கின்ற பிள்ளைகளும், சாதாரண குடியானவன் உடைய பிள்ளைகளோடு ஒன்றாக அமர்ந்து கல்வி கற்களாகாது என்ற மறைமுக விதியை ( Unwritten Law), தூய்மை – தீட்டு ( Purity – Pollution) என்ற கருத்தியலோடு இணைத்து சமூகம் கட்டமைத்திருந்தது. இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலகட்டங்களிலும் இது நடைமுறையில் இருந்து வந்ததை நாம் அறிவோம்…

சிறுவர்களை தொடும்படி அவரிடம் கொண்டு வந்தார்கள். கொண்டு வந்தவர்களை சீடர்கள் தடுத்தார்கள். இயேசு அதனைக் கண்டு “கோபமடைந்து” சீடர்களை கடிந்து கொண்டு, சிறுவர்களுக்கு உரிய மதிப்பையும், மாண்பையும் தந்து, அவர்களை தொட்டு, அரவணைத்து அவர்களை ஆசீர்வதித்தார். ஏழை சிறுவர்களுக்கு அன்றே சமூகத்தில் உயரிய அந்தஸ்தையும், மாண்பையும் தந்து, இறை ஆட்சியின் “அளவுகோலாக” சிறுவர்களை முன்வைத்து, “புதிய விதியையும், புதிய கோட்பாட்டையும்,புதிய கருத்தியல்களையும்” ஆண்டவர் இயேசு கட்டமைத்தார்.

சிறுவர்கள், பெண்கள், கைம்பெண்கள், புறவினத்தவர்கள், நோயற்றோர், மாற்றுத்திறனாளிகள், பாவிகள், பாலியல் தொழிலாளர்கள்… போன்றோர் சமுதாயத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்தார்கள். அந்த அடிமைப்படுத்தும் “விதியை” தன் போதனைகளாலும், செயல்பாடுகளாலும் மாற்றி அமைத்தார்.

இவர்கள் தொடக்கூடாதவர்கள் என்ற விதியை மாற்றி அவர்களைத் தொட்டார். இவர்கள் பாவிகள் என்று ஒதுக்கி வைக்கப்பட்டவர்களோடு ஒன்றாக அமர்ந்து உணவருந்தினார். இவள் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும் என்ற பாலியல் தொழிலாளியை மன்னித்து வாழ்வளித்தார். மாணவர்கள் வந்து குருகுல கல்வி கற்க வேண்டும் என்ற விதியை மாற்றி, இவர் மக்களைத் தேடிச் சென்றார். பெண்களை பேச வைத்தார்…..

பிரதான ஆசாரியர்கள், வேதபாரகர்கள், பரிசேயர்கள் சதுசேர்கள் என்று ஆண்களை மையப்படுத்திய யூத சமய, சமூகத்தில் பெண் சீடர்களை, உருவாக்கி, அவர்களை பணியாற்றவும், தொடர்ந்து இயங்கவும், இறை ஆட்சியை கட்டமைக்கவும் வழி வாசல்களைத் திறந்து இயேசு புது வழியில் சீடர்களையும், பின்பற்றினவர்களையும் பயணிக்க வைத்தவர் நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்து….

இனி ஒரு விதி செய்வோம்..

2. ⁠ சதியை உடைத்து புது வாழ்வை வழங்கிய …. குருவேசு ஸ்வாமி. (அப்போஸ்தலர் 22: 1 – 5 )

திருத்தூதுவராகிய பவுல் சமயக் கல்வி கற்று தேர்ந்த அறிஞர். கமாலியேல் அவர்களின் பாதத்தில் அமர்ந்து சமயக் கல்வியை முறைப்படி அவர் கற்றுத் தேர்ந்தவர்.

கற்றுக்கொண்ட சமயக் கல்வி, பவுல் அவர்களின் வாழ்வில் பக்தி மார்க்கத்தில் நடப்பதற்கு உதவி செய்தது. தனி மனித பக்தி வாழ்வியலை ஊக்குவித்தது. அந்த சமயக் கல்வி, யூத சமயத்தை பாதுகாக்கவும், சடங்காச்சாரங்களை கடைப்பிடிப்பதில் தீவிரத்தையும், பாரம்பரியங்கள் மீது கொண்டிருந்த நம்பிக்கையையும் அது மேலும் அதிகப்படுத்தியது.

சமயக் கல்வி ஒருவரை பக்திமானாக வளர்த்தெடுக்கும். பக்குவப்பட்ட மனிதராக அது உயர்த்தும். ஆனால் திரு தூதுவராகிய பவுலை அவர் கற்ற சமயக் கல்வி அப்படி வளர்க்கவில்லை மாறாக பழமை வாதியாக, பிற்போக்கு சிந்தனையாளராக, பகுத்தறிவு அற்றவராக அவரை உருமாற்றியது.

சமயங்கள் வலியுறுத்தும் அன்பு, சகோதரத்துவம், மனிதநேயம், மன்னிப்பு, சமூக நீதி … அனைத்தையும் அவர் கற்ற சமயக் கல்வி அவருக்கு வழங்கவில்லை…

சமயங்கள் சமூகத்தை வளர்க்கும். ஆனால் பவுலின் வாழ்வில் இது முற்றிலும் மாறாக இருந்தது. வன்முறையாளராக, துன்புறுத்துபவராக, சித்தரவதை செய்து அதில் மகிழ்கின்றவராக, மனித நேயம் அற்றவராக, மிருகமாக அவரை மாற்றியது என்றால் அந்த கல்வியின் தரம் எப்படி இருக்கும் என்பதை நாம் உணரலாம்….

ஒவ்வொரு சமய கல்விக்கும் பின்பதாக இப்படிப்பட்ட ஒரு “சதி ” பின்னப்பட்டிருக்கிறது என்பதை அறியாமலேயே பலர் கற்று வருகின்றார்கள். அது சமயக் கல்வியின் குறைபாடல்ல கற்பிப்பவர்களின் குறைபாடு….

சமயக் கல்வி கற்க வருபவர்களின் திசையை மாற்றி, தாங்கள் பிழைப்பிற்காக, வாழ்வதற்காக, பொருளாதாரத்தில் மேம்பாடு அடைவதற்காக, தங்களை உயர்த்தி பிடிப்பதற்காக, அரசியல் செய்வதற்காக பயன்படுத்தப்படுகிறது என்பதை அறியாமலே பலர் தங்களை இழந்து விடுகின்றார்கள் அதற்கு அடிமையாகி விடுகின்றார்கள்….

தமஸ்க்கு சாலையில் செல்லும்போது, பவுல் இத்தகைய மனப்போக்கு உடனே தான் சென்றார். ஆனால் இயேசு கிறிஸ்து அவரை வழியில் சந்தித்தார். நல்ல ஆசிரியராக பவுல் அடியார் அவர்களுக்கு கற்பித்தார், போதித்தார், வலியுறுத்தினார், கண்டித்தார், எச்சரித்தார், நல்வழிப்படுத்தினார், நல் ஆலோசனை வழங்கினார்…..

சமயக் கல்வி என்னும் பெயரில் மூளை சலவை செய்யப்பட்ட “சதியை” பவுல் அடியாருக்கு இயேசு உணர்த்தினார், அதனை பவுல் அடியார் உணர்ந்தார், திருந்தினார், உணர்வில் மாற்றம் அடைந்தார்….

இயேசு கிறிஸ்து பவுல் அடியாருக்கு, தமஸ்க்கு சாலையில் கற்றுத் தந்த கல்வி, சமய கல்வி அல்ல அது “இறையியல் கல்வி”. இறைவனைப் பற்றியும், இறைவன் எங்கே இருக்கிறார், யாரோடு இருக்கின்றார், யாருக்கு எதிராக இருக்கிறார், இறைவன் யார் சார்பாக இருக்கிறார் என்பதை பற்றியும் கற்றுத் தந்தார்…

மூன்றாம் நாளில் இயேசு கல்லறையில் இருந்து வெளிவந்ததைப் போல, மூன்றாம் நாளில் பவுல் சமயக் கல்வியின் “சதி வலையில்” இருந்து வெளியே வந்தார்….

சமய மாற்றத்திற்கு எதிராக, சமூக மாற்றத்தையும், மனமாற்றத்தையும் முன்வைத்து தனது பயணத்தை புதிய பாதையில் துவங்கினார்….

நீதியின் நிமித்தம் துன்புற்ற மக்களை, சமயத்தின் பெயரால் சிதறடிக்கப்பட்ட மாந்தரை, இயேசுவின் வழியில் சென்ற அடியார்களை மீட்கும்படியாக, இழந்த வாழ்வை மீட்டுருவாக்கம் செய்யும்படியாக தமது வாழ்வை அர்ப்பணித்தார்….

சதி செய்யும் இயக்கத்தில் இருந்து தன்னை விடுவித்து, வாழ்வளிக்கும் வல்லவராம் இயேசுவின் இயக்கத்தில் இணைந்து, சதிகளை வெளிச்சம் போட்டு காட்டவும், சமய மறுமலர்ச்சிக்காகவும், சமூக நீதிக்காகவும், இயேசுவின் வழியே சிறந்தது , அது வாழ்வளிக்கும் வழி என்பதை ஒரு ஆசிரியராக பவுல் தன் பொறுப்பினை நிறைவேற்றினார்….

சதி வலைகளை அருத்தெறிவோம்…..

3. துதியை வெறுத்து புது நெறியை காட்டிய ….குருவேசு ஸ்வாமி. (லூக்கா 4: 31 – 44)

ஜெப ஆலயத்தில் பிசாசு பிடித்திருந்த மனிதன் இயேசுவைப் பார்த்து “நசரேயனாகிய இயேசுவே”என்று பெயர் சொல்லி அழைக்கின்றார். மற்ற யூத மக்கள் ஆண்டவரை அறிந்ததை காட்டிலும் இந்த மனிதன் இயேசுவை முற்றிலும் நன்கு அறிந்தவராக காட்டப்படுகின்றார்…

இயேசு என்பவர் யார் அவர் பின்புலம் என்ன அவர் பாரம்பரியம் என்ன அவர் ஒரு அரசர், மீட்பர், விடுதலையாளர் என்பதை உணர்ந்து கொள்கிறார்….

இயேசுவை இப்படி அழைத்தது பார்வையற்ற பர்ரத்திமேயு என்பவரும், இந்த பிசாசு படித்திருந்த மனிதரும் இயேசுவை பட்டப் பெயரோடு அழைத்தவர்கள் …

எதார்த்தமாக இதை வாசிக்கும் பொழுது, ஒரு பிசாசு பிடித்த மனிதன் கூட இயேசுவை மண்போடு அழைக்கின்றாரே என்று வியக்கக்கூடும். மற்ற மனிதர்களை காட்டிலும் இவர் வித்தியாசமாக இருக்கின்றாரே என்று நினைக்கக்கூடும்…

அவன் ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னார் என்று அறிவேன், நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று உரத்தசத்தமிட்டான்….

துதி பாடி புகழ்வதை ஆண்டவர் இயேசு கிறிஸ்து, துணிந்து எதிர்க்கின்றார். துதி பாடி புகழ்தல் அவருக்கு ஏற்புடையதென்று. நீர் பரிசுத்தர் என்று புகழப்படுவதை விரும்பாதவர் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. பிதாவை தவிர ஒருவரும் நல்லவர் இல்லை என்ற உறுதியில் நிலைத்து நின்றவர் இயேசு…..

நாசரேத்தில் பிறந்த மனிதர் இயேசு இகழ்வையும், நாசரேத் ஊரில் இருந்து நன்மை பிறக்குமா ? என்ற பழமொழியை ஆதரிக்கின்றவராக, தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் தீய சக்திகளின் துதி பாடலை புறந்தள்ளுகின்றார் ஆண்டவர் இயேசு….

தன்னை “நாசரேத்தூரான்” என்று ஊரை மையப்படுத்தி இழிவு படுத்தினாலும், அவனுள் இருந்த அசுத்த ஆவியை அகற்றி விரட்டி அந்த மனிதருக்கு வாழ்வளித்தார்….

கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்ற யூத நெறியை தகர்த்தெறிந்து, தன்னை துன்புறுத்துபவருக்கு, கேவலப்படுத்துவோருக்கு எதிராக மன்னிப்பு, வாழ்வளித்தல், ஏற்றுக்கொள்ளுதல், மான்போடு நடத்துதல், அரவணைத்தல், சகித்தல், பரந்த மனப்பான்மையோடு அணுகுதல், மனிதநேயத்தை பேணுதல் புது நெறியை சீடர்களுக்கும் தம்மை பின்பற்றிவருக்கும் கற்றுத்தந்தார் இயேசு என்னும் நல்லாசிரியர்….

ஜெப ஆலயத்தில் இயேசு கிறிஸ்து செய்த இந்த அற்புதச் செயல், முறைசாரா கல்வியாக கருதலாம் (Informal education), போய் சார்ந்த கல்வியாகவும் (Formal education) கொள்ளலாம், சமயத்தை கட்டமைக்கும் இறையியல் கல்வியாகவும்( Theological Education) சமூக இதை உள்வாங்கிக் கொள்ளலாம்….

சமூகத்தை நெறியாளுகை செய்வோம்…..

# நிறைவாக

நியாயாதிபதிகளையும் தீர்க்கர்களையும் இறைவன் உலகிற்கு அனுப்பினார் தனது பிரதிநிதிகளாக…

சீடர்களையும், திருதூதுவர்களையும் இயேசு கிறிஸ்து தெரிந்தெடுத்தார் தம் பணியாளர்களாக….

ஆயர்களையும், ஆசிரியர்களையும் தூய ஆவியர் பயன்படுத்துகிறார் தமது பொறுப்பாளர்களாக….

ஆலயங்களும், கோவில்களும், மசூதிகளும் சமயங்களின்அடையாளங்களாக இருந்து விட்டுப் போகட்டும்.. கல்விச்”சாலைகள்” இறை ஆட்சிக்கான “சாலைகளாக”இருக்கட்டும்….

இறையாசி என்றும் உங்களோடு இருப்பதாக ….
இறைப்பணியில்
உங்கள்

இறைப்பணியில் உங்களோடு

Rev. Augusty Gnana Gandhi,

CSI Trichy Tanjore Diocese.