25 ஜூன் 2023

திருமுழுக்கு யோவான்
லூக்கா 1:68-79

பழைய ஏற்பாட்டின் மல்கியா புத்தகத்திற்கும் புதிய ஏற்பாட்டின் மத்தேயு புத்தகத்திற்கும் இடைப்பட்ட காலத்தை புதிய பழைய ஏற்பாட்டிற்கான இடைப்பட்ட காலம் எனக் குறிப்பிடுவர். இக்காலப்பகுதியில் இறைவாக்கினர்களின் குரல்கள் எதுவும் பேசப்படாத காலமாயிருந்தது. புதிய ஏற்பாட்டின் ஆரம்ப காலப்பகுதியில் திருமுழுக்கு யோவானினுடைய பிறப்புடன் ஆரம்பிக்கப்படுகின்றது.

மல்கியா 3:1-5 வரையுள்ள பகுதியில், யோவானினுடைய பணிக்கான அனுப்பும் பகுதிகள் காணப்படுகின்றது. அதாவது, இதோ நான் ஒரு தூதனை உங்களுக்கு அனுப்புவேன் என்ற வாக்கினூடாக இறைவாக்கினர் பணி தொடர்கின்றது.

லூக்கா 1:68-80 வரையுள்ள பகுதியில், அபியா ஆசாரிய வகுப்பைச் சேர்ந்த சகரியா பலிபீடத்தின் வலப்பக்கத்தில் தேவதூதன் காபிரியேலுடைய வாக்குத்தத்தை நம்பாதபோது ஈற்றில் யோவான்ஸ்நானகன் பிறந்தபோது எழுத்துப்பலகை வாங்கி பெயரிட்டு ஆனந்தக் களிப்புக்குள் அகமகிழ்ந்தான்.

யோவான்ஸ்நானகன் மனந்திரும்புதலுக்கான நற்செய்தியை அறிவித்தது மாத்திரமன்றி லூக்கா 3:10-17ல், பகிர்வு மற்றும் ஆயக்காரர்கள் தமது பணியில் பேணவேண்டிய உண்மைத்தன்மை மற்றும் போர்ச்சேவகர்கள் தமது பணியில் பேணவேண்டிய உத்தரவாதம் போன்றவற்றையும் கருத்திலே கொண்டிருந்தார்.

மாற்கு 6:1-20 வரையுள்ள பகுதியில், யோவானினுடைய நீதிப்பணி வெளிப்படுத்தப்படுகின்றது. ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவியை தனது மனைவியாக உரிமை கொண்டாடியது தவறு என சுட்டிக்காட்டி அதற்காக தன் உயிரையும் தியாகம் செய்கின்றார்.

யோவானஸ்நானகனின் எளிமை, தாழ்மை, தூய்மை, நீதி போன்றவைகள் அனைத்தும் ஆண்டவர் இயேசுவுக்கான மார்க்கத்தை ஆயத்தப்படுத்தும் முறைகளாகும். யோவான் ஆயத்தப்படுத்திய பாதையிலேயே ஆண்டவர் இயேசுவும் பிரயாணித்தார்.

ஆக்கம் : அற்புதம்