1 மே 2022
தொழிலாளர் தினம் – தச்சராகிய யோசேப்பு
மத்தேயு 11:25-30

• இன்று உலகளாவிய ரீதியில் தொழிலாளர்களுடைய உரிமையை பாதுகாக்கும் பொருட்டு தொழிலாளர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இது சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்டதொன்றாகும். திருச்சபை தொழிலாளர்களுடைய உரிமையை பாதுகாக்கும்பொருட்டு அவர்களுடன் தங்களை அடையாளப்படுத்தும் வகையிலும், அவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையிலும் கடவுளுடன் இணைந்து உடன்படிக்கை செய்கின்றது.

• திருமறையில் நாம் காணும் கடவுள் ஓர் தொழிலாளி ஆவார். அவர் முதலாளி அல்ல. மாறாக, மனிதர்மீது கொண்ட அன்பின் நிமித்தம் இவ்வுலகை படைத்துள்ளார். இவ்வுலகை பராமரிக்கும் பணியை மனுகுலத்திடம் கையளித்துள்ளார். இதனை ஆதியாகமம் / தொடக்கநூல் 1:26-2:3ல் காணலாம். அத்துடன், மனுக்குலத்தை தொடரும் பங்குதாரராகவும் படைப்பாளராகவும் இணையுமாறு அழைக்கின்றார்.

• எமது தொழில்களில் அல்லது கடமைகளில் நாம் உண்மையாக இருக்கவேண்டும் எனவும் அநியாயமான முறையில் பணம் சம்பாதிப்பது தவறு எனவும் திருப்பாடல் 15ல் நாம் பார்க்கின்றோம். இவ்வாறு உழைப்பவரே கடவுளுக்கு உகந்தவர் என இப்பகுதி கூறுகின்றது.

• இரண்டாம் உடன்படிக்கை வாசகத்தின்படி 2 தெசலோனிக்கேயர் 3:6-15 இப்பகுதியில் பவுல் உடன் உழைப்பாளியாகிய தீமோத்தேயுவுக்கு ஆலோசனை கூறும்போது உழைப்பு கடவுளுடைய கொடை எனவும் உழைப்பின் மூலம் நாம் பிறருக்கு நன்மை செய்யக் கூடியவர்களாக வாழ முடியும் என்கின்றார். உழைப்பினூடாக நாம் எமது உணவை பெற்றுக் கொள்ள வேண்டும் எனக் கூறுகின்றார். உழைக்க விரும்பாதவர் உண்ணவும் கூடாது என்கிறார்.

• நற்செய்தி பகுதியில் மத்தேயு 11:25-30 வரையுள்ள இப்பகுதியில் ஆண்டவர் இயேசு சமயத் தலைவர்கள் மக்கள் சுமக்கமுடியாத அளவிற்கு சுமைகளை அவர்கள்மீது சுமத்துகின்றார்கள் எனக் கூறுகின்றார். இதன்படி, இன்றும் தொழிலாளர்களின் உரிமையை பாதுகாக்க சட்டங்கள் காணப்பட்ட போதிலும் முதலாளிகள் அவர்கள்மீது அதிக சுமைகளை சுமத்துகின்றனர். இப்படியான செயற்பாட்டை ஆண்டவர் இயேசு கண்டிக்கின்றார். மேலும்,

இன்றைய இலங்கைச் சூழலில் தோட்டத் தொழிலாளர்களே இத்தகைய நிலைக்கு உட்படுகின்றனர். அவர்களுக்கு ஒருநாள் சம்பளமாக ரூபா 1,000வை அரசு வர்த்தமானியில் பிரசுரித்தபோதிலும் தோட்டக்கம்பனிகள் இதற்கு செவி சாய்க்காமல் அதிகமான கொழுந்தை பறிக்குமாறு வற்புறுத்துகின்றனர்.

இத்தகைய நிலைகள் எல்லா அமைப்பினருக்கும் பொருந்தும். மேலும், கடைகளில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கின்ற சிறார்கள், இல்லங்களில் பணிப்பபெண்களாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பணிபுரியும் பெண்கள், அவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள், திருச்சபையில் பணிபுரியும் ஆலய பராமரிப்பாளர்கள் போன்றவர்களையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இப்படிப்பட்ட சுமை சுமக்க முடியாத விடுதலையாளனாக இயேசு காணப்படுகின்றார். அவரை பின்பற்றும் மக்களும் அவரையே மாதிரியாக கொள்ளவேண்டும்.

ஆக்கம்: அற்புதம்

ஓவியம்