கிறிஸ்தவ விசுவாசத்தில் நியாயத்தீர்ப்பு என்ற வார்த்தை முக்கியமானதாக காணப்படுகின்றது. இச்செயற்பாடு இயேசுவின் இரண்டாவது வருகையுடன் நடைபெறும் என்பதை திருமறை எமக்கு எடுத்து காட்டுகின்றது. இச்செயற்பாடு நடைபெறுவதற்கு முன்பதாக இயற்கையில் பல மாற்றங்கள் ஏற்படும் என்பதை திருமறையில் படித்தறிகின்றோம். சூரியன், சந்திரன் போன்றவற்றில் இருள் தோன்றுதல், அரசுகளுக்கிடையே குழப்பங்கள் நிலவுதல், போதனைகள் பிழையாக போதிக்கப்படல், கொள்ளை நோய்களின் அதிகரிப்பு, மற்றும் பூமி அதிர்ச்சி ஏற்படல் போன்றவைகள் அடையாளங்களாக காட்டப்படுகின்றன. ஒரு சிலர் அண்மையில் இடம்பெற்ற வைரசின் தாக்கத்தையும் இறைவனின் நியாயத்தீர்ப்போடு தொடர்புபடுத்துகின்றனர். இது பற்றிய மேலதிக விபரங்களை இக்கட்டுரையில் குறிப்பிட விரும்புகின்றேன்.

நியாயத்தீர்பை வழங்குபவர் கடவுளே
கிறிஸ்தவ உலகத்தில் நாம் பல்வேறு வழிகளில் ஒருவரை ஒருவர் நியாயம் தீர்த்து வருகின்றோம். ஆனால் இப்பணி இறைவனுக்கே உரியது என்பதை திருமறை அடிக்கடி எமக்கு சுட்டிக்காட்டுகின்றது. குறிப்பாக மாற்கு 7:24- 30 வரையுள்ள பகுதியில் கோதுமையும் களையும் பற்றிய உவமையில் வேலைக்காரர் கோதுமையோடு களை வளருகின்றது என சுட்டிக்காட்டி களையை பிடுங்க முற்பட்ட வேளையில் தோட்ட சொந்தக்காரர் அவனை நோக்கி அவ்வாறு செய்ய வேண்டாம் ஏனெனில் நியாயத்தீர்ப்பு நாளில் அவைகள் அப்புறப்படுத்தப்படும் என்கிறார். மேலும் லூக்கா 3:10-17இல் யோவான் ஸ்நானகன்: கடவுள் பதரையும் கோதுமையையும் வேறுபடுத்துவார் என சுட்டிக்காட்டுகின்றார். ஆண்டவர் இயேசுவும் தமது சீடர்களை பணிக்காக அனுப்பிய வேளையில் (லூக்கா 10:1-12) ‘நீங்கள் சென்று சமாதானத்தின் நற்செய்தியை அறிவியுங்கள், மக்கள் கேளாமற் போனால் உங்கள் காலில் படிந்துள்ள தூசிகளை உதறிவிட்டு வாருங்கள். மாறாக நியாயம் தீர்க்க முற்படாதிருங்கள்’ என போதித்தார். இதன் படி நாமும் ஒருவரை ஒருவர் நியாயம் தீர்க்காதபடி வாழ முற்படுவோமாக.

நியாயத்தீர்ப்பில் கடவுளின் அணுகு முறை
நியாயம் தீர்க்கும் பணியில் கடவுளின் ஈடுபடும் போது எத்தகைய அணுகுமுறைகளை பயன்படுத்துவார் என்பது எமக்கு தெரியாது. ஆனால் கடவுளின் சிட்சிப்பு அன்புடன் கலந்த கிருபையை மையப்படுத்தியதாக காணப்படுகின்றது (எபேசி 2:8). எனினும் தவறுகளுக்கேற்ற தண்டணைகளையும், மனமாற்றத்திற்குரிய ஆசீர்களையும் கடவுள் வழங்குவதை திருமறை எடுத்து காண்பிக்கின்றது. அப்போ 5:1-10இல் அனனியா சப்பிராள் போன்றவர்கள் பரிசுத்த ஆவிக்கு விரோதமாக பொய் கூறிய போது கடவுள் அவர்களை உடனடியாக தண்டிப்பதை நாம்
பார்க்கின்றோம். மேலும் லூக்கா 23:33-38 வரையுள்ள பகுதியில் சிலுவையில் ஆண்டவரோடு தொங்கிய திருட்டு வேலை செய்த மனிதன் மனந்திரும்பி இயேசுவின் ஆட்சியை ஏற்றுக் கொண்ட போது இயேசு அவரை நோக்கி ‘இன்றைக்கு என்னோடு கூட நீ பேரின்ப வீட்டில் இருப்பாய்’ என்ற ஆசீ மொழியையும் அவருக்கு
வழங்குகின்றார். இதன் படி கடவுளின் நியாயத்தீர்ப்பு தண்டனை மாத்திரம் அன்றி ஆசீர்வாதத்துடனும் அடங்கியுள்ளது என்பதை மறந்து விடக்கூடாது. எனவே தான்

'இதோ நான் சீக்கிரம் வருகின்றேன், அவனவனது பலன்களுக்கேற்ப தீர்ப்பிட வருகின்றேன்'. என கடவுளின் குரலை திருமறை எமக்கு சுட்டிக்காட்டுகின்றது.

நியாயத்தீர்ப்பு எதற்காக?

நியாயத்தீர்ப்பு என நாம் பேசிய போதிலும் எவற்றிற்காக நாம் நியாயந்தீர்க்கப்படுவோம் என்பதை
அறிந்தும் அறியாதவர்களாக வாழுகின்றோம். ஆண்டவர் இயேசு தனது போதனைகளில் அடிக்கடி ‘உங்கள் வார்த்தைகளே உங்களை நியாயம் தீர்க்கும்’ என்கின்றார். எனவே நாம் பேசுகின்ற வார்த்தைகளை குறித்து
எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் ஆதியாகமம் 6:5 இல் கடவுள் மனிதனை படைத்ததற்காக விசனம் அடைந்தார். ஏனெனில் அவனது நினைவுகள் அனைத்தும் நித்தமும் பொல்லாதவைகள் என்பதை உணர்ந்தார். எனவே எமது நினைவுகளை குறித்து நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். மேலும் எங்களுடைய செயல்களின் அடித்தளத்திலும் எமக்கு நியாயத்தீர்ப்பு உள்ளது. மத்தேயு: 31-46வரையுள்ள பகுதியில் இவ்வுலகில் நாம் எத்தகைய நற்செயல்கள் செய்கின்றோமோ அவற்றின் அடித்தளத்தில் எங்களுக்கு நியாயத்தீர்ப்பு உள்ளது. மேலும் நாம் பிறரை குற்றவாளிகள் என்று தீர்க்கும் போது நாமும் குற்றவாளிகள் என தீர்க்கப்படுவோம் (மத்தேயு 7:1). அத்துடன் நாம் தவறு செய்யாமல் இருந்தாலும் மற்றவர்கள் தவறு செய்ய நாம் காரணர்களாக இருந்தால் அதற்காக நாம் நியாயந்தீர்க்கப்படுவோம். குறிப்பாக ‘இந்த சிறியரில் ஒருவருக்கு நீங்கள் இடறலாக வாழ்ந்தால் அப்பேர்ப்பட்டவர்களின் கழுத்தில் எந்திரக் கல்லை கட்டி சமுத்திரத்தில் போடக்கடவீர்கள்’ என ஆண்டவர் கூறும் இந்த வார்த்தையில் நியாயத்தீர்ப்பின் தன்மை புலப்படுத்தப்படுகின்றது. எனவே இவைகளை ஞாபகத்தில்
வைத்து கொள்ள வேண்டும். நாம் கடவுளுக்கும் மனிதனுக்கும் எதிராக செய்யும் தவறுகளுக்காக மாத்திரம் அன்றி இயற்கைக்கு விரோதமாக செய்யும் குற்றங்களுக்கும் நியாயத்தீர்ப்பு உண்டு என்பதை மறந்து விடக்கூடாது (ரோமர் 8:22). நியாயத்தீர்ப்பு மரணத்திற்கு முன்னர் ஆயத்தப்படுத்தப்பட வேண்டியது.
நாம் வாழம் உலகில் பொதுவாக பிரச்சனைகள் துன்பங்கள் வரும் போதே நாம் அதற்காக எம்மை
ஆயத்தப்படுத்தவில்லை என்ற உணர்வு எமக்குள்ளே தோன்றுகின்றது. இதனாலேயே ‘கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் கூடாது, ‘இல்லையேல் சுடலை (கல்லறை) ஞானம் பிறக்கின்றது’. என்ற கூற்றுக்களின் அடித்தளத்தில் எமது வாழ்வை திட்டமிட்டு வருகின்றோம். ஆனால் நியாயத்தீர்ப்பின் போது இத்தகைய கருத்துக்கள் செல்லுபடியற்றதாக காணப்படுகின்றது. ஏனெனில் ‘ஐஸ்வரியவானும் லாசருவும்’ என்ற மாதிரி கதையில் வாசலருகே உட்காந்திருந்த லாசருவை செல்வந்தன் கவனிக்கவேயில்லை. இதனால் லாசரு மிகவும் துன்பப்பட்டான். ஆனால் நியாயத்தீர்ப்பு நாளில் தனது தவறை செல்வந்தன் உணர்ந்த போது அவன் தன் சகோதரர்களின் நிலைகளை குறித்து மிகவும் கவலைப்பட்டான். எனவே அவர்கள் சார்பில் கடவுளிடம் மன்றாடிய போதிலும் அது கேட்கப்படவில்லை. ஏனெனில் பூவுலகில் நாம் வாழும் போது எமக்கு நியாயத்தீர்ப்பைக் குறித்த போதனைகள் அடிக்கடி கிடைக்கின்றது. எனவே மரணத்திற்கு பின்னரான எமது நிலையை குறித்து சிந்திப்பதை விட மரணத்திற்கு முன்னர் எம் நிலையை குறித்து ஆராய்வதே மிகவும் அவசியமானதாக காணப்படுகின்றது. எனினும் கிறிஸ்தவர்களாகிய நாங்கள் இயேசுவின் வருகை நியாயத்தீர்ப்பு போன்றவைகளை குறித்து அடிக்கடி பேசிய போதிலும் இவைகள் எமது நாளாந்த வாழ்வில் செயற்பாடுகளில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்துகின்றது என பார்க்கும் போது கவலைக்குறியதாகவே காணப்படுகின்றது.

நியாயத்தீர்ப்பில் கடவுளை நியாயந்தீர்க்காதிருப்போம்

நியாயத்தீர்ப்பு கடவுளுக்கே உரியது அந்நியாயத்தீர்ப்பில் கடவுளை நியாயம் தீர்க்காதிருக்க முற்படுவோம். உதாரணமாக யோனா தீர்க்கதரிசி நினிவே நாட்டு மக்களின் அழிவையே காண விரும்பினான். எனினும் அம் மக்கள் இறையவரை நோக்கி மன்றாடியதன் விளைவாக கடவுள் அவர்கள் மீது கருணை கூர்ந்து அவர்களின் அழிவை மாற்றி விட்டார். இத்தகைய இறைவனின் செயற்பாட்டை நிராகரித்த யோனா இறைவனை நியாயம் தீர்க்க முற்பட்டார்;. மேலும் நியாயத்தீர்ப்பின் போது கடவுள்: ‘நான் பசியாயிருந்தேன் எனக்கு உணவு தந்தீர்கள் தாகமாய் இருந்தேன் தண்ணீர் தந்தீர்கள் சிறையில் இருந்தேன் வந்து பார்த்தீர்கள் ஆடையின்றி இருந்தேன் ஆடை தந்தீர்கள்’ எனக்கூறிய போது அதை கேட்டுக் கொண்டிருந்த மக்கள் அதற்கு எதிராக கடவுளை நியாயம் தீர்க்க முற்பட்டார்கள். எனவே நியாயாதிபதியாகிய இயேசுவையும் அவரது நியாயத்தீர்ப்பையும் குறித்து நியாயம் தீர்க்காது இருப்போம்.

நிறைவாக, அன்பானவர்களே நியாயத்தீர்ப்ப கடவுளுக்குரியது. எனவே அதிலிருந்து தப்பித்துக் கொள்ள எமது பூலோக வாழ்வில் எம் சிந்தனை, சொல், செயல்கள் போன்றவற்றை தூய்மைப்படுத்திக் கொள்வோமாக. மேலும் நியாயாதிபதியாகிய கடவுளின் தீர்ப்பு எப்பொழுதும் கிருபையுடன் கலந்துள்ளது. அதனை மனதில் வைத்து அவரை நியாயம் தீர்க்காது இருக்க பார்த்துக் கொள்வோமா.

<sup><sub>அருட்பணி ஸ்டீபன் அருளம்பலம், இலங்கை.</sub></sup>
அருட்பணி ஸ்டீபன் அருளம்பலம், இலங்கை.