யோவான் 14:25-31

29 மே 2022
Lead by the Holy Spirit

• எல்லா சமயங்களும் ஆவியர் பற்றி பேசுகின்றது. திருமறையில் முதலாம் உடன்படிக்கை புத்தகத்தில் ‘ரூவாக’; என்ற எபிரேய மொழி ஆவியருக்கு பயன்படுத்தப்படுகின்றது. இது மூச்சு, சுவாசம் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகின்றது. இரண்டாம் உடன்படிக்கையின் நூலின்படி ‘நியூமா’ என்ற கிரேக்க சொல் ஆவியருக்கு பயன்படுத்தப்படுகின்றது. மேலும், இங்கு ஆவியர் உயர்திணைப் பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றார். ஒத்தமை நற்செய்திகளில் ஆவியின் செயற்பாடுகள் பற்றி பேசப்படுகின்றது. ஆனால், யோவான் நற்செய்தியில் ஆவியரைப் பற்றிய போதனைகள் காணப்படுகின்றன.

• வாசிக்கப்பட்ட நற்செய்தி பகுதியில் ஆசிரியர் தூய ஆவியருக்கு உயர்திணை பதத்தை தனது நூலில் வழங்குகின்றார். உதாரணமாக, ஆவியர் புதிய வழிபாட்டை எதிர்ப்பார்க்கின்றார் (யோவான் 4:24). ஆவியர் வாழ்வளிக்கும் ஊற்று (யோவான் 7:35-37). மேலும், ஆவியர் பாவத்தைக் குறித்தும் நீதியைக் குறித்தும் நியாயந்தீர்ப்பைக் குறித்தும் கண்டித்து உணர்த்துவார் என இயேசு போதிக்கின்றார். கிரேக்க மொழியில் ‘பரக்கிலிட்’ என்ற சொல்லின் மூலம் தேற்றரவாளன் அடையாளப்படுத்தப்படுகின்றார். அதாவது ஆண்டவர் இயேசு, நான் உங்களிடத்திலிருந்து புறப்பட்டு செல்கின்றேன். என்றுமே உங்களோடு இருக்க வல்ல தேற்றரவாளனை அனுப்புவேன் என்கிறார். அதாவது, நீதிமன்றத்தில் வழக்கறிஞர் இல்லாத பட்சத்தில் பேசும் ஒருவராக சகாயர் காணப்படுகின்றார்.

• முதலாம் உடன்படிக்கை நூலின்படி விடுதலைப்பயணம் அல்லது யாத்திராகமம் 36:1-7 பகுதியில் ஆவியர் நுட்பமான செயல்களை செய்வதற்கு மக்களுக்கு உதவி புரிகின்றார். இவரே படைப்பில் இறைவனுடன் இணைந்து செயல்பட்டு (ஆதியாகமம் அல்லது தொடக்கநூல் 1:1-5) மக்களுக்கு வாழ்வளிக்கின்றார். (எசேக்கியேல் 37:1-10) இதனூடாக மக்களை வழிநடத்தி வந்துள்ளார்.

• இரண்டாம் உடன்படிக்கை வாசகத்தின்படி ரோமர் 8:12-17 இப்பகுதியில் கடவுளை அப்பா பிதாவே என்றழைக்கும் புத்திரசுவிகாரத்தை நாம் ஆவியர் மூலம் பெற்றுள்ளோம் என பவுல் கூறுகின்றார். மேலும், ஆவியர் எமக்கு விடுதலை வழங்குவதாக பவுல் காண்பிக்கின்றார். திருப்பாடல் 27ம் பகுதியிலும் தாவீது கடவுளின் பராமரிப்பைப் பற்றி பேசுகின்றார். அத்துடன், ஆவியருக்கு மறைவாக தன்னால் எதுவும் செய்ய முடியாது என சங்கீதம் அல்லது திருப்பாடல் 51ல் கூறுகிறார்.

• திருத்தூதர்பணிகள் அல்லது அப்போஸ்தலர் நூலை நாம் எடுத்துக் கொண்டால் ஆதித் திருச்சபை தூய ஆவியரால் வழிநடத்தப்படுவதை நாம் காண்கின்றோம். தூய ஆவியர் மக்களை ஆற்றலுறச் செய்து உண்மையை உரைக்க வைக்கின்றார் (அப்போஸ்தலர் அல்லது திருத்தூதர்பணிகள் 2:23-38), நற்செய்தியை ஆற்றுவதற்கு வேண்டிய பலத்தை வழங்குகின்றார் (அப்போஸ்தலர் அல்லது திருத்தூதர்பணிகள் 4:32). முதற் தண்டனையை அனனியா, சப்பீரா என்பவர்களுக்கு கொடுக்கின்றார் (அப்போஸ்தலர் அல்லது திருத்தூதர்பணிகள் 5:1-10), பணிவிடை செய்வதற்கும் ஆவியரின் ஒத்துழைப்பு வேண்டும் (அப்போஸ்தலர் அல்லது திருத்தூதர்பணிகள் 6:3). ஆவியர் ஊழியங்களை பிரித்தெடுத்து அனுப்புகிறார் (அப்போஸ்தலர் அல்லது திருத்தூதர்பணிகள் 11:1-3). இப்பபேர்ப்பட்ட பல வழிகளில் திருச்சபை ஆவியினால் வழிநடத்தப்படுகின்றது.

ஆக்கம்: அற்புதம்