வசந்தகால பூக்கள்
லெந்துகாலம் சிந்தனைகள்


அறிமுகம்

லெந்துகாலம் கிறிஸ்தவ வாழ்க்கையில் முக்கியமானதாகும். இக்காலத்தில் பிரதானமாக பேசும் பொருளாக சிலுவை காணப்படுகின்றது. சிலுவை என்பது மற்றவர்களின் நல்வாழ்வுக்காக நாம் தெரிந்தெடுக்கும் துன்பமாகும். இத்துன்பத்தை எமது வாழ்நாட்களில் நாம் எவ்வாறு சுமக்கலாம் என்பதை பவுலின் வாழ்விலிருந்தும் பணியிலிருந்தும் நாம் கற்றுக்கொள்வோம். கலாத்தியர் 2:20ல் பவுல் கிறிஸ்துவுடனேகூட நான் சிலுவையில் அறையப்பட்டுள்ளேன். நானல்ல கிறிஸ்துவே என்னில் வாழ்கின்றார் என்ற கூற்று பவுலின் வாழ்நாட்களில் அவர் சிலுவை சுமந்துள்ளார் என்பதை எமக்கு எடுத்து உணர்த்துகின்றது. இக்கருத்தினை உதாரணங்களுடன் ஆராய்வோம். பவுல் நீரோ மன்னனினால் கி.பி.64ல் சிரைச்சேதம் செய்யப்பட்டார் என வரலாற்றில் படிக்கின்றோம். அப்படியிருக்கும்போது கிறிஸ்துவுடனேகூட தான் சிலுவையில் அறையப்பட்டதாக பவுல் கூறுகின்றார் அல்லவா? இக்கூற்று அவரின் நாளாந்த வாழ்வில் சிலுவையில் அறையப்படும் நிகழ்வாகும். இவற்றை இக்கட்டுரையில் ஆராய்வோம்.

சமூக வாழ்வில் சிலுவையின் அனுபவம்

பவுல் சமூக வாழ்வில் மற்றவர்களின் நல்வாழ்வுக்காக பல துன்பங்களை சுமந்துள்ளார். பிலிப்பியர் 3:5-7 வரையுள்ள பகுதியில் பவுல் தனக்கு பெருமை சேர்த்த அனைத்து அடையாளங்களையும் கிறிஸ்துவுக்காக நஷ்டம் எனக் கருதுகின்றார்.

பவுல் தனக்கு பெருமை சேர்த்த அனைத்து அடையாளங்களையும் கிறிஸ்துவுக்காக நஷ்டம் எனக் கருதுகின்றார்.

Revd Arulampalam Stephen

குறிப்பாக, விருத்தசேதனம் என்னும் சடங்காச்சாரம், கல்வி, பரிசேய அடையாளம், பெஞ்சமீன் கோத்திரம் ஆகிய அடையாளங்களை மற்றவர்களின் நன்மைக்காக இழந்து கிறிஸ்துவுக்காக கிறிஸ்துவின் அடையாளத்தை தரிக்கின்றார். கலாத்தியர் 3:28ல் கிறிஸ்துவுக்குள் ஆண் என்றோ, பெண் என்றோ, அடிமை என்றோ, சுயாதீனன் என்றோ, கிரேக்கன் என்றோ, யூதனென்றோ வேறுபாடுகள் எதுவும் இல்லை எனக் கூறுகின்றார். அதாவது, குழு அடையாளங்கள் இழந்து பொது அடையாளத்தை அவர் தேடுகின்றார். இந்த புதிய உறவு சிலுவையிலே ஆரம்பிக்கின்றது. ஆண்டவர் இயேசு மரியாளையும் யோவானையும் நோக்கி, தாயே இதோ என் மகன். யோவான் இதோ உன் அன்னை என்ற புதிய உறவுக்குள் யோவானையும் மரியாளையும் அழைக்கின்றார்

(யோவான் 19:25-28). இதன்மூலம், ஏழை மரியாளை செல்வந்தனாகிய யோவான் ஏற்றுக் கொள்கின்றான். இது குழு உணர்வு கடந்த பொதுமையை நோக்கிய புதிய உறவாகும். இந்த உறவையே பவுல் தன்னுடைய வாழ்வில் அனுபவமாக்கியுள்ளார். இதுவே, அவரது நாளாந்த அனுபவச் சிலுவையாகும். இதன்மூலம், எமது குழு சார்ந்த அடையாளங்களை நாம் களைந்து பொது அடையாளத்தை நோக்கி பயணிக்கும்போது சிலுவையை அனுபவமாக்குகின்றோம்.


பிலமோன் புத்தகத்தில் ஒனேசிமு என்ற வேலைக்காரனைக் குறித்து நாம் வாசிக்கின்றோம். அவன் தனது எஜமானனின் இல்லத்தில் களவெடுத்தப்பின்னர் அங்கிருந்து ஓடி வருகின்றார். அவனைச் சந்தித்த பவுல் பல புத்திமதிகளைக் கூறிய பின்னர், மறுபடியும் பிலமோனிடத்து சென்று பணியுமாறு வேண்டுகின்றார். அத்துடன், பிலமோனை நோக்கி, அவரது பணியாளனை மன்னித்து ஏற்றக் கொள்ளுமாறு வேண்டுகின்றார். எங்கே மன்னிப்பு காணப்படுகின்றதோ அங்கே சிலுவை காணப்படுகின்றது. ஆண்டவர் இயேசு, பிதாவே இவர்களை மன்னியும் எனக் கூறிய வார்த்தை நாம் மன்னிப்பைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளும்போது நாம் மன்னிப்புக்கு உயிரளிக்கின்றோம். அதன்மூலம், சிலுவை உயிர்பெற்று அது வாழ்வின் அனுபவமாகின்றது

(லூக்கா 23:33-37). நாம் வாழும் உலகில் ஒருவர் மற்றவரோடு வைத்துள்ள உறவு பலமுறைகளில் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள உறவு துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் பவுல் ஒப்புரவாகுதலைப் பற்றி பேசுகின்றார் (2 கொரிந்தியர் 5:16-20). சிலுவையை எடுத்துக் கொண்டால் நிலைக்குத்து அச்சி கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள உறவைக் குறித்தும், கிடை அச்சு மனிதனுக்கும் சக மனிதனுக்கும் இடையேயுள்ள உறவைப்பற்றியும் பேசுகின்றது. இங்கு மனிதருக்கு இடையே நிலவவேண்டிய உறவைப் பற்றி பவுல் பேசுகின்றார். ஏனெனில், இயேசுவின் சிலுவை மரணம் ஓர் உறவுப் பாலமாகும்

(எபேசியர் 2:14-18). இந்த ஒப்புரவாகுதலின் செய்தியை பவுல் தனது வாழ்வின் அனுபவமாக்கியுள்ளார். குறிப்பாக, யோவான் மாற்குவுடன் ஏற்பட்ட பிரிவினையின் பின்னரும்

(தி.ப அல்லது அப்போஸ்தலர் 15:36-41) யோவான் மாற்குவிடம் காணப்பட்ட நற்குணங்களைப் பற்றி பவுல் பேசுகின்றார் (கொலோசேயர் 4:10). இவரின் இச்செயற்பாடு ஒப்புரவாகுதல் என்னும் பண்பை உயிரோடு எழுப்பியுள்ளது. நாமும் பிறருடனும் கடவுளுடனும் ஒப்புரவாகும்போது இயேசுவின் சிலுவையை நாம் அனுதினமும் சுமக்கின்றோம். அது எமது அனுபவச் சிலுவையாக மாறுகின்றது. இவ்வாறாக, சிலுவையில் கடவுள் மக்கள் மீது பாராட்டிய அன்பை நாம் காணலாம். இவ்வன்பு நாளாந்த வாழ்வில் எமது வார்த்தையினாலும் செயலினாலும் வெளிப்படும்போது சிலுவை அனுபவச் சிலுவையாகின்றது. எனவேதான், பவுல் தனது நிருபங்களில் அன்பைப் பற்றி அதிகம் வலியுறுத்திப் பேசுகின்றார். இவ்வன்பு கணவன்- மனைவிக்கு இடையேயும் (எபேசியர் 5:22-30), பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையேயும் (எபேசியர் 6:1-4) நிலவ வேண்;டும் எனக் கூறுகின்றார். இவ்வாறாக, சமூக வாழ்வில் சிலுவையை அனுதினமும் பவுல் சுமந்து செல்கின்றார்.

பொருளாதார வாழ்வில் சிலுவையின் அனுபவம்

நாம் அனைவரும் சிலுவையை பொருளாதார வாழ்வுடன் இணைத்துப் பார்க்க அவசியமாகின்றது. குறிப்பாக, ஆண்டவர் இயேசு கடவுளோடு இருந்த போதிலும் அந்த செல்வந்த நிலையை மற்றவர்களின் நன்மைக்காக தியாகம் செய்து ஒடுக்கப்பட்ட மக்களுடன் தன்னை அடையாளப்படுத்தினான் (பிலிப்பியர் 2:5-11). கிறிஸ்து ஏழையாகி ஏழ்மையில் இருந்த மக்களை தனது நிலைக்கு உயர்த்தினார். இவ்வாறாக, அவர் தமது வாழ்வை பிறருடன் பகிர்ந்துகொண்டார்

(2 கொரிந்தியர் 8:9). இவ்வாறான, பகிர்ந்துக் கொள்ளுதலை மேற்கொள்ளுமாறு அவர் திருச்சபை மக்களை வேண்டுகின்றார் (கலாத்தியர் 2:10). எனவே, பொருளாதார சமத்துவமற்ற நிலைக்கு சுரண்டலே பிரதானமான காரணமாகும். ஏனெனில், கடவுள் எம் எல்லோரையும் சமமாக படைத்திருக்கும்போது எம்மிடையே ஏழை, பணக்காரன் என்ற நிலை எவ்வாறு உருவாகலாம். எனவே, நீதியற்ற சமுதாயத்தில் நீதியுள்ள இறையரசை ஓர் மாற்று கலாசாரமாக பவுல் முன்வைக்கின்றார் (ரோமர் 14:17). எனவே, எங்கு நீதி காணப்படுகின்றதோ அங்கு சமத்துவம் காணப்படும். இயேசுவை கடவுள் உயிர்த்தெழ செய்ததன் மூலம் இயேசுவுக்கு கடவுள் நீதியைச் செய்தார். இதன்மூலம், நீதி என்ற எண்ணக்கரு இன்றும் வாழ்கின்றது. எனவே, நாம் மற்றவர்களுக்கு நீதி செய்யும்போது சிலுவையின் போதனைகளுக்கு உயிர்க்கொடுக்கின்றோம். அப்பொழுது, நாம் கிறிஸ்துவோடுகூட சிலுவையில் அறையப்படுகின்றோம். அதாவது, எம்முடையவைகளை நாம் பிறருடன் பகிர்ந்துக் கொள்ளும்போது நாம் சிலுவையை சுமக்கின்றோம். அதாவது, மற்றவர்களின் நன்மைக்காக நாம் துன்பத்தை தெரிந்தெடுக்கின்றோம். ஏனெனில், நாம் பிறருடன் பகிர்ந்து கொள்ளும்போது, எம்மை நாம் இழக்கின்றோம். எனவே, எமது பொருளாதார வாழ்வுடன் சிலுவையை அனுபவமாக்கிக் கொள்ளும்போது, முதலாளித்துவ சிந்தனைகள், நுகர்வுக் கலாசாரங்கள், சுயநலபோக்குகள் எம்மை விட்டு அகன்று போகவும் சமத்துவம், பொதுநலம் போன்றவைகள் வளரவும் துணைப்புரிகின்றது.

திருப்பணியில் சிலுவை அனுபவம்

கடவுளுடைய அன்பை வார்த்தையாலோ அல்லது செயல்களாலோ அறிவிப்பதே திருப்பணியாகும். இத்திருப்பணியிலும் பவுல் சிலுவையை அனுபவமாக்கியுள்ளார். சிலுவையில் இயேசுவின் அடிமையின் தாழ்மையான சுபாவத்தை நாம் காணலாம். இதனை, பவுல் அப்போஸ்தலர் அல்லது திருத்தூதர்பணிகள் 14:14ல் காண்பிக்கின்றார். அங்கு, லீஸ்திரா இக்கோனியா பட்டணத்தில் ஓர் நடக்கமுடியாத மனிதரை கடவுளின் பெயரால் பவுலும் பர்னபாவும் குணமாக்கிய வேளையில் மக்கள் பவுலுக்கும் பர்னபாவுக்கும் மதிப்பை செலுத்த முற்பட்ட வேளையில் பவுல் அதனை நிராகரித்து கடவுளுக்கு செலுத்துமாறு வேண்டுகின்றார். இந்நிலை சிலுவையில் கிறிஸ்துவோடு அறையப்பட்டவனுடைய ஓர் மனநிலையாகும் (பிலிப்பியர் 2:6). இத்தாழ்மையின் மனநிலை எங்களுக்குள்ளே இருக்கும்போது நாம் சிலுவையை அனுபவிக்கின்றோம். மேலும், திருப்பணி இறைவனுக்கே சொந்தமானது. அவரே பணியில் வெற்றியைத் தருபவர் என்பதை சிறந்த உதாரணத்தினூடாக வெளிப்படுத்துகின்றார். பவுல் நட்டார், அப்பல்லோ நீர்ப் பாய்ச்சினார், தேவனே விளையச் செய்தார். இதன்மூலம், திருப்பணியில் நிலவவேண்டிய கூட்டொருமை உயிர்பெறுகின்றது. அதாவது, சுயநலம் அழிந்து பிறர் நலம் உருவாகின்றது. இதுவோர் அனுபவச் சிலுவையாகும். மேலும், திருப்பணியில் மற்றவர்களின் நன்மைக்காக அவர் பெண்களையும் ஈடுப்படுத்தினார். பிரிசில்லா, யூனியா போன்றவர்களையும் பயன்படுத்தினார். ஆணாதிக்கம் நிலவிய சமூகத்தில் பெண்களை திருப்பணியில் பயன்படுத்துவது விமர்சனத்துக்குரிய ஓர் செயற்பாடாகும். இவ்வாபத்தை மற்றவர்களின் நன்மைக்காக பவுல் தெரிந்தெடுத்தார். இதுவோர் இறைவாக்கு பணியாகும்.
2 கொரிந்தியர் 13:23-28 வரையுள்ள பகுதியில் பவுல் தனது திருப்பணியில் அனுபவித்த சிலுவையின் அனுபவங்களைப் பற்றி பேசுகின்றார். கப்பற்சேதம், பசி, பட்டினி, நிர்வாணம், நாசமோசம், சவுக்கடி, கடல்களில் மோசம், சொந்த சகோதரர்களால் ஏற்பட்ட மோசம், அந்நிய சகோதரர்களால் ஏற்பட்ட மோசம் என அடுக்கிக் கொண்டே போகின்றார். இவைகள் நற்செய்தியின் பொருட்டு அவர் அடைந்த துன்பங்களே ஆகும். மேலும், பவுல் பிலிப்பி பட்டணத்தில் சிறையில் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்படுகின்றார் (அப்போஸ்தலர் அல்லது தி.பணிகள் 16:14). இதுவம் மற்றவர்களின் நன்மைக்காக அவர் தெரிந்தெடுத்த துன்பமாகும். ஏனெனில், அப்பட்டணத்தில் குறி சொல்லும் ஆவியையுடைய ஒரு பெண்ணை பலர் உபயோகித்து பணம் சம்பாதித்து வந்தனர். அப்பெண்ணிலுள்ள ஆவியை பவுல் விரட்டியதன் விளைவாகவே அவருக்கு சிறையனுபவம் ஏற்பட்டது. இங்கு, பவுல் தனிமனிதனில் உள்ள பிசாசை மட்டும் துரத்தவில்லை. மாறாக, சமூகத்தில் நிலவிய சமூகப் பசாசை துரத்தியதையும் நாம் காண்கின்றோம். மேலும், பவுல் தனது தூதுப்பணியில் தவறிழைத்தவர்களை நேரடியாக சுட்டிக்காட்டி அவர்களை மாய்மாலக்காரர் எனக் குறிப்பிடுகின்றார். குறிப்பாக, கலாத்தியர் 2:14ல் பேதுருவை இப்படிப்பட்டவர் என்கிறார். ஏனெனில், பேதுரு யூதரைக் கண்டவுடன் அவர்களுடனும் புறவித்தாரைக் கண்டவுடன் அவர்களைப் போன்று செயற்பட ஆரம்பித்தார். இதனை, பவுல் வன்மையாகக் கண்டிக்கின்றார்.

நிறைவாக
ஆண்டவர் இயேசு ஒருவர் என்னைப் பின்பற்றிவர விரும்பினால் தன்னைத்தானே வெறுத்து தன் சிலுவையைச் சுமந்து கொண்டு அனுதினமும் தன்னை பின்பற்றிவருமாறு அழைக்கின்றார். எனவே, சிலுவை சுமத்தில் என்பது ஏதோ ஒருநாள் அனுபவம் அல்ல. மாறாக, ஆண்டவர் இயேசு இவ்வனுபவத்தை தனது வாழ்நாள் முழுவதுமாக அனுபவித்தார். குறிப்பாக, அவர் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை (யோவான் 1:10). மேலும், அவரை பல சந்தர்ப்பங்களில் சதுசேயராகிய சமயவாதிகளும், ஏரோதியர்களாகிய அரசியல்வாதிகளும் திட்டமிட்டு அவரை கொல்ல முற்பட்டனர் (மாற்கு 3:6). பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் அவரில் குற்றம் காண முற்பட்டனர் (மாற்கு 2:1-12). இவ்வாறாக, இயேசுவுக்கு சிலுவை அனுபவம் ஒரு நாளாந்த அனுபவமே. இந்த அனுபவங்களின் நிறைவே சிலுவை மரணமாகும். இதேயொளியில் பரிசுத்த பவுல் இவ் சிலுவை அனுபவத்தை தனது சமூக பொருளாதார திருப்பணி சார்ந்த அனுபவங்களில் பகிர்ந்து கொள்கின்றார். இதனாலேயே, அவர் சிரைச்சேதம் செய்யப்பட்டடு கொல்லப்பட்டபோதிலும், தான் கிறிஸ்துவோடுகூட சிலுவையில் அறையப்பட்டேன். இனி நானல்ல கிறிஸ்துவே என்னில் வாழுகின்றார் எனக் கூறுகின்றார். எனவே, நாமும் எமது நாளாந்த வாழ்வில் சிலுவை சுமப்பவர்களாக சிலுவையின் கருத்தியல்களை சுமந்தவர்களாக வாழ முற்படுவோமாக.

அருட்பணி அருளம்பலம் ஸ்டீபன்
அருட்பணி அருளம்பலம் ஸ்டீபன்

இலங்கை