முதலாம் தியானம்

லெந்து காலங்களில் எமது ஆன்மீக வாழ்வில் வீழ்ச்சிக்கான காரணங்களை திருமறை உதாரணங்களுடன் நாம் ஆராய்வோம். இதற்காக, இன்றைய நாளில் ஏவாளின் வீழ்ச்சிக்கான காரணங்களை அவரின் வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்வோம்.

முதலாவதாக, ஏவாள் கடவுளுக்கும் அவருக்கும், கணவனுக்கும் தனக்கும் இடையே இடைவெளியை வைத்திருந்தார். சிறப்பாக, கடவுளுக்கும் அவருக்கும் இடையே நிலவிய இடைவெளியை நாம் ஆவிக்குரிய தனிமை என அழைக்கலாம். இவ்வாறாக, இவர்  தனிமையிலே இருக்கும்போதே பிசாசானவன் அவரிடத்தில் நெருங்கி தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனிகளையும் கடவுள் புசிக்கலாம் என்றும் நன்மை-தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை புசிக்கக் கூடாது என கட்டளையிட்டதுண்டோ என கேட்டது. இவர், தனிமையாக இருக்கும்போதே சோதனைக்குள் விழுந்தாளர். 

ஓர் விறகுக் குவியல்கள் எரிந்துக் கொண்டிருக்கும் வேளையில் எல்லா விறகுகளும் நன்றாக எரிந்துக் கொண்டிருக்கும். ஆனால், அவ்விறகு கட்டுக்களிலிருந்து ஒரு விறகை எடுத்து வெளியிலே வைப்போமானால் அவ்விறகு எரிபற்று நிலை குறைந்து அணைந்து விடுகிறது. ஏனெனில், அவ்விறகினால் தனித்து எரியமுடியாது. இதுபோலவே, இன்று நாங்கள் எரிந்து கொண்டிருக்கும் விறகுகளுடன் இணைந்து எரியும்போது எமது ஆவிக்குரிய வாழ்வு பிரகாசமாகும். மாறாக, நாம் தனித்து எரிய முற்படுவோமேயானால், நாம் அணைந்து விடுவோம்.

எனவே, இந்நாட்களில் நாம் இறையவருக்கும் எமக்கும் இடையிலே இடைவெளியை பேணாமல் அவரில் நாம் நிலைத்திருக்கும்போது நாம் சோதனைகளிலிருந்து தப்பித்து விலகி வாழமுடியும். மேலும், ஏவாளை பிசாசு ஆதாம் இல்லாத வேளையிலேயே சோதனைக்கு உட்படுத்தியது. கணவனோடு உள்ள ஐக்கியத்தில் இடைவெளி காணப்பட்டபோதே அவர்  தனிமையில் இருக்கும் வேளையில் சோதனைக்காரன் உள் நுழைவதற்கு காரணமாக அமைந்தது. இதனால், அவரின் வீழ்ச்சிக்கு இதுவும் ஓர் காரணமாகும். எனவே, இந்நாட்களிலே எமக்கும் பிறருக்கும் இடையேயுள்ள உறவுகளின் முக்கியத்துவத்தை எண்ணிப் பார்ப்போம். உறவுக் குழப்பங்களினால் நான் இன்று வீழ்ந்துள்ளேனா என இந்நாட்களில் சிந்தித்துப் பார்ப்போம்.

செபம்: இறைவா! உமக்கும் மற்றவர்களுக்கும் இடையே சரிவர உறவைப் பேணிக் கொண்டு வாழ அருள்புரிவாயாக. ஆமென்.