17 ஏப்ரல் 2022

மாற்கு 16:1-11

• உயிர்த்தெழுதல் என்ற சிந்தனை இஸ்ரவேல் மக்கள் பாபிலோனிய அடிமைத்தனத்தில் வாழ்ந்த வேளையில் சொராயிஸ்தர் என்ற சமயத்தவரிடமிருந்து கற்றுக்கொண்டனர். உயிர்த்தெழுதல் என்பது பழைய உடன்படிக்கையில் காணப்படும் ஓர் நிகழ்வாகும். சூனாமித்தாளின் மகன் இறந்த வேளையில் எலிசா இறைவாக்கினர் அவரை உயிரோடு எழுப்பினார். இயேசுவுக்கு பின்னரும் உயிர்த்தெழுதல் காணப்பட்டது. குறிப்பாக, ஐந்தீகு என்பவரை பவுல் உயிர்த்தெழ செய்ததையும் நாம் காணலாம்.

• நற்செய்தி நூல்களில் பொதுவாக 4 வகையான உயிர்த்தெழுதலைப் பற்றி நாம் பார்க்கின்றோம். உதாரணமாக, பாவத்திற்குள் வீழ்ந்த மக்கள் உயிரோடு எழுப்பப்படுதல். இரண்டாவதாக லாசரு, நாயீன் ஊர் விதவையின் மகன் போன்றவர்கள் உயிரோடு எழுப்பப்படல். மூன்றாவதாக இயேசு தன்னைத்தானே உயிரோடு எழுப்புதல். நான்காவதாக இறுதிநாளில் கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் உயிர்பெற்றெழுதல் போன்றவற்றை நாம் குறிப்பிடலாம்.

• திருப்பாடல் 16ல் தாவீது தன்னை பகைக்கின்ற அனைத்து சத்துருக்களிலிருந்தும் பாதுகாப்பையும் வெற்றியையும் வேண்டி இறைவனிடம் பிரார்த்திக்கின்றார். இறைவன் அவனுக்கு அளித்த வெற்றியைக் குறித்து 2 சாமுவேல் 22:1-20ல் வெற்றிப் பாடலாக பாடுகின்றார்.

• புதிய உடன்படிக்கை வாசகத்தில் 1 கொரிந்தியர் 15:20-28 இப்பகுதியில் கிறிஸ்து மரித்தோரிடத்திலிருந்து எழுந்து முதற்பலனானார் என்ற வார்த்தையினூடாக கிறிஸ்து மரணத்தை வெற்றி சிறந்தார். அதாவது, அவர் தன்னைத் தானே உயிரோடு எழுப்பினார் என்ற செய்தி காணப்படுகின்றது. இதனை, பேதுரு பெந்தேகோஸ்தே நாளில் பிரசங்கிக்கின்றார்.

• நற்செய்தி பகுதியில் மாற்கு 16:1-11 இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றி மாற்கு எழுதும்போது வார்த்தைகள் இன்றி மாற்கு தடுமாறுகின்றார். அதாவது, நற்செய்தி பாரம்பரியங்களுக்கிடையே நிலவும் வேறுபாடுகள் காரணமாகவே கல்லறையண்டை இருக்கும் தேவதூதர்களின் எண்ணிக்கை, பெண்களின் எண்ணிக்கை போன்றவைகள் வேறுபடுகின்றன.

• உயிர்த்தெழுந்த ஆண்டவர் தனது உயிர்ப்பைப் பற்றி சென்று அறிவிக்குமாறு வேண்டுகின்றார் (யோவான் 20:1-16). மேலும், பெண்கள் உயிர்த்தெழுதலில் இடம்பெறுவதனூடாக சமத்துவ சிந்தனை காணப்படுகின்றது. மேலும், நாம் சரீர உயிர்த்தெழுதலை அதிக முக்கியத்துவத்தைப் படுத்துவதைவிட இயேசுவின் போதனைகளை உயிர்த்தெழ செய்தலே அதிகம் இன்று தேவைப்படுகின்றது. உதாரணமாக அன்பு, மன்னிப்பு, நீதி, ஒப்புரவாகுதல், அமைதி போன்றவைகள் உயிர்ப்பெற்று எழவேண்டும்.

ஆக்கம்: அற்புதம்